வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (09/11/2017)

கடைசி தொடர்பு:16:10 (09/11/2017)

எத்தனை ஆண்டுகள் தோனி விளையாடுவார்..? - கணிக்கும் நெஹ்ரா!

தோனியின் ஃபார்ம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். அவர் ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டுமென்று ஒரு சாரரும், தொடர்ச்சியாக விளையாடி இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித் தர வேண்டுமென்று இன்னொரு சாரரும் கருத்துகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, `தோனி 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இருப்பார்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெஹ்ரா

அவர் மேலும், `எந்த வீட்டிலும் ஒரு பெரியவர் தேவைப்படுவார். தோனி, இந்திய அணிக்கு அதைப் போலத்தான். உடல்தகுதி இருக்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். இடத்தைப் பொறுத்து கிரிக்கெட் விளையாடுவது வித்தியாசப்படும். இது மிகவும் கடினமான விளையாட்டு. அவர் நன்றாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டுமென்று நான் கூறவில்லை. ஏனென்றால், சரியாக விளையாடவில்லை என்று தெரிந்தால், தோனியே தானாக விலகும் தன்மையுடையவர். என்னைப் பொறுத்தவரையில், தோனியை அவர் போக்குக்கு விட்டுவிட வேண்டும். அவரின் விளையாட்டைப் பற்றி அவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் 2020-ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். 39 வயதில் நான் வேகப்பந்து வீச்சாளராக இருக்க முடியுமென்றால், தோனியின் உடற்தகுதிக்கு அவர் கண்டிப்பாக விளையாடலாம்' என்றார் தீர்க்கமாக.