Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேப்டன், லீடர், லெஜெண்ட்... தாதா கங்குலி! கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன தினம் #OnThisDay

Chennai: 

அந்த சகாப்தம் முடிவுக்கு வந்து 10 வருடம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் இந்தியாவின் கிழக்குப் பகுதி இவரைத்தான் தன் அடையாளமாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. வங்கத்தின் கிரிக்கெட் இன்னும் இவரை மையமாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. பி.சி.சி.ஐ தலைவர் முதல் சி.எஸ்.கே டீம் வரை அனைவரின் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டிய லோதா கமிட்டிகூட இவர் பெயரைத்தான் பரிந்துரை செய்துகொண்டே இருக்கிறது. கோலியின் பேட்டிங்கில் சச்சினைக் கண்டு சிலாகித்தவர்கள், அவரது கேப்டன்சியில் இவரைக் கண்டு கர்வம் கொள்கின்றனர். அன்று இவரது ரசிகராக இருந்தவர்கள், இன்றும் என்றும் அவரது வெறியர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்று இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், ஒருநாள் கூட இந்திய கிரிக்கெட் அவரிடமிருந்து விலகவில்லை. காரணம், இந்திய கிரிக்கெட் பாதாளம் நோக்கிப் பயணித்துபோது, அதன் எதிர்காலத்தை மீட்டெடுத்தவர் அவர். இனியும்கூட அவரால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும். அவர்....சௌரவ் கங்குலி - கேப்டன்...லீடர்...லெஜண்ட்!

கங்குலி

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த, இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது, ‘ஸ்லெட்ஜிங்’ அடுத்த கட்டத்தை அடைந்திருந்தது. வார்த்தைச்சண்டைக்குப் பெயர்போன ஆஸி வீரர்களையே தங்கள் ஆக்ரோஷ குணத்தால் ஷாக் கொடுத்தது கோலி அண்ட் கோ. இந்த இளம் அணியின் அந்த ஆக்ரோஷ அப்ரோச்சை பலரும் வரவேற்கின்றனர். ஆனால், இந்த விதையை விதைத்தவர் 'தாதா'. "இந்திய கிரிக்கெட்டின் மீதான பார்வையை மாற்றிய முதல் ஆள் கங்குலிதான். இன்று இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை" என்று ஒருமுறை கூறினார் ஆஸி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ். "கங்குலிதான் என் ஃபேவரைட் கேப்டன். ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியை கங்குலி வழிநடத்திய விதம் பிரம்மிப்பாக இருந்தது" என்றார் ரிக்கி பாண்ட்டிங். இப்படி உலகம் போற்றிய கேப்டன்களே வியக்கும் வகையில் அணியை வழிநடத்தியவர் அவர்.

வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடந்த அணியை 'ஆங்ரி' மோடுக்கு மாற்றியவர். ஸ்டீவ் வாஹை டாஸுக்குக் காத்திருக்க வைத்ததிலிருந்து, லார்ட்ஸில் சட்டையைக் கழட்டிச் சுற்றியதுவரை, அவர் செய்ததெல்லாம் மாஸ். ஆனால், அந்தச் செயல்களில் தனி மனிதக் கோபத்தை வெளிக்காட்டியதில்லை. இந்தியா சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒரு மாபெரும் சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அறைகூவல் அது!  'நீ என்னவேண்டுமானாலும் பேசு. நாங்கள் பேட்டால் பேசுவோம்' என்ற இந்திய வீரர்களின் டெம்ப்ளேட் மைண்ட்செட்டை உடைத்தெறிந்தார். 'அடிச்சா திருப்பி அடிக்கணும்’ என்று தன் அணியைச் சீண்டுபவர்களுக்கு களத்திலேயே பதில் தந்தார், வார்த்தையிலும், பேட்டிலும்... 

2002 சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில், இலங்கை வீரர் அர்னால்டுடன் பிரச்னை ஏற்பட, கங்குலி மைதானத்தில் சீறியதெல்லாம் வேற லெவல். இந்திய வீரர்களிலிருந்து, ஆனானப்பட்ட அம்பயர் டேவிட் ஷெப்பர்டு வரை எல்லோரும் அந்த வங்கப்புலியின் ஆக்ரோஷத்தை அடக்க முடியாமல் தவித்தனர். தன் போராட்ட குணத்தை வீரர்களுக்கும் விதைத்தார். அவர்களுக்குள்ளிருந்த போராளிகளை எழுப்பினார். ஹர்பஜன் சைமண்ட்ஸிடம் சீறியது, கம்பீர், வாட்சனுடன் வாக்குவாதம் செய்தது போன்ற விஷயங்கள்கூட இந்த மனிதன் இல்லாவிடில் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றின் விளைவு, இன்று கோலி கொதித்தெழ, ஆஸ்திரேலியா அமைதியாகிறது. 

ஆனால், ஒரு கேப்டனாக இவர் ஆக்ரோஷம் மட்டும் காட்டிக்கொண்டிருக்கவில்லை. தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டிவிடவில்லை. அப்படித் தலையாட்டியிருந்தால், சேவாக், ஹர்பஜன், ஜாஹிர், யுவராஜ் எல்லோரும் ரஞ்சிக்கோப்பை வீரர்களாகவே ஓய்வு பெற்றிருப்பர். உதாரணமாக, 2001-ம் ஆண்டு. ஹர்பஜனுக்கு வாய்ப்பு வழங்காமல், சரந்தீப் சிங் போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. "ஹர்பஜன்தான் வேண்டும்" என்றார் கங்குலி. மறுக்கிறது தேர்வுக்குழு. பிடிவாதம் பிடிக்கிறார் கேப்டன். வேறு வழியின்றி அந்தத் தொடருக்கு ஹர்பஜனின் பெயர் டிக் அடிக்கப்படுகிறது. 3 போட்டிகளில், 32 விக்கெட்டுகள், ஹாட்ரிக், சரித்திர வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார் பாஜி. ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கங்குலி, அதுவும் தேர்வாளர்கள் விரும்பாத ஹர்பஜனை வைத்து. இதுதான் கங்குலி...தாதா!

கங்குலி

“நான் தடுமாறியபோது கங்குலி எனக்குப் பக்கபலமாக இருந்தார். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் நன்றியை வார்த்தைகளால் தெரிவித்துவிட முடியாது” என்று உருகினார் வீரேந்திர சேவாக். இன்று அவரும் ரிட்டையர்டு பிளேயர். ஆனால், இன்றுவரை கங்குலி தனக்கு உதவியதை நினைத்துக்கொண்டிருக்கிறார். மிடில் ஆர்டரில் தவித்தவருக்கு, தன் ஓப்பனிங் ஸ்லாட்டை விட்டுக்கொடுத்து கங்குலி மட்டும் சேவாக்கை ஓப்பனர் ஆக்காமலிருந்தால், 'சுல்தான் ஆஃப் முல்தானா'க ஓய்வு பெற்றவர் டெல்லி ரஞ்சி வீரராக என்றோ காணாமல் போயிருப்பார். யுவி, ஜாஹிர் என எல்லோரும் கங்குலி தேர்வுக்குழுவிடம் காட்டிய பிடிவாதத்தினால் கிடைத்த ஜாம்பவான்கள். "கங்குலி போன்ற கேப்டனுக்காக நான் உயிரைக்கூட விடுவேன்" என்று எமோஷனல் ஆனவர் யுவி!

இன்று பலரும் தோனிக்கு எதிராக குரல் கொடுக்க, அவருக்குப் பக்கபலமாக கேப்டன் விராட் நிற்கிறார். இப்படி வீரர்கள் தேர்விலும், அக்ரெஸிவ் கேப்டன்ஷியிலும் விராட்டைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் சமாதானம் ஆகிக்கொண்டிருந்தாலும், தாதா வெறியர்கள் கங்குலி எனும் உலகத்தர பேட்ஸ்மேனை மிஸ் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். "கங்குலியால் பௌண்டரி எல்லையை மட்டுமல்ல, மைதானத்தையே க்ளியர் செய்யும் சிக்ஸர்கள் அடிக்க முடியும்" என்று கூறினார் வி.வி.எஸ் லட்சுமண். கங்குலியின் ஆஃப் சைட் ஷாட்கள் பற்றி டிராவிட் கூறிய அந்த வாசகம் அல்ட்டிமேட்!  "on the offside, first there is God and there is Ganguly". அப்படிப்பட்ட அந்த பேட்ஸ்மேனை இன்று யாருடைய ரூபத்திலும் காண்பது கடினம்.

இரண்டு ஸ்டெப் இறங்கிவந்து லாங் ஆஃப் பவுண்டரியை அவர் க்ளியர் செய்யும் அந்த ஷாட்...மூன்று ஸ்லிப் ஃபீல்டர்கள், கல்லி, பேக்வேர்ட் பாய்ன்ட், பாய்ன்ட் என ஃபீல்டர்கள் ஆஃப் சைடில் சூழ்ந்திருக்க, எட்ஜில் விக்கெட் வீழ்த்துவதற்காகவே வீசப்படும் அந்த அவுட் ஸ்விங் பாலை, ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களைக் கடந்து பௌண்டரி எல்லைக்கு 'லான்ச்' செய்யும் அந்த 'கட் ஷாட்'... லெக் ஸ்பின் பௌலராக இருந்தால், அது உலகையே கலங்கடிக்கும் வார்னேவாக இருந்தாலும் கூட, ஃப்ரன்ட் ஃபுட் எடுத்துவைத்து மிட் விக்கெட் திசையில், மைதானத்தையே தாண்டுமளவு அடிக்கும் அந்த 'ஸ்லாக் ஸ்வீப்'... இன்று யாரிடம் பார்த்து ரசிக்க முடியும்? இன்னும் சிக்ஸரின் மீட்டர்களை அளந்துகொண்டிருக்கிறார்கள். மைதானத்துக்கு வெளியே  அவர் அடித்த சிக்ஸர்களையெல்லாம் எதைக்கொண்டு அளக்க?

தாதாவின் கேப்டன்ஷிப் பெருமை பேசி, கங்குலி எனும் பேட்ஸ்மேனைக் கொண்டாட மறந்துவிட்டோம். அதிவேகமாக 9,000 ரன்களை கோலி கடந்தபோது, அவர் உடைத்தது 8 மாதங்களாக நின்றிருந்த ஏ.பி. டி வில்லியர்ஸின் சாதனையை. பிப்ரவரி மாதம் அந்தச் சாதனையை டிவில்லியர்ஸ் படைத்தபோது, அவர் உடைத்தது 13 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்த கங்குலி எனும் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேனின் சாதனையை. கேப்டனாக அல்லாமல், பேட்ஸ்மேனாகவும் போட்டிகளை வென்றுதந்தவர். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன், 100 விக்கெட், 100 கேட்ச் என்ற மைல்கல்லை எட்டிய நான்கு வீரர்களுள் ஒருவர். ஒருநாள் போட்டி வீரர் என்று முத்திரை குத்தப்பட, பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அடித்த 144 ரன்கள் போதும் அவர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை உணர்த்த...

தாதா

“எதிரணியினரைத் துவம்சம் செய்ய, அந்த வங்கச் சிங்கத்தின் வால் எப்போதும் நிமிர்ந்தே இருந்தது” என்றார் நவ்ஜோத் சிங் சித்து. இவரோடு மைதானத்தின் நடுவில் நின்று டாஸ் போட்ட, எந்த எதிரணி கேப்டனும் ஒத்துக்கொள்வார்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அடையாளம் தந்தவர் கங்குலிதான் என்று. "கங்குலியின் தலைமையில் இந்திய அணி ஆடுகிறதென்றால், அது யாருக்கும் மிகப்பெரிய சவால். அவரை நீங்கள் நேசிக்கவோ, வெறுக்கவோ வேண்டாம். ஆனால் அவருக்கு மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்" என்றார் ஸ்டீவ் வாஹ். இதுதான் தன் 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கங்குலி சம்பாதித்தது.

நவம்பர் 10, 2008 - அந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரோடு முடிந்தது அந்தத் தன்னிகரில்லா வீரனின் கிரிக்கெட் பயணம். இந்தியா - இன்று மாபெரும் கிரிக்கெட் சூப்பர்பவர். ஆனால் அதற்கிடப்பட்ட அந்த அஸ்திவாரக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் - சௌரவ் சாந்திதாஸ் கங்குலி. இனியும் இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை இந்தப் பெயர் நிர்ணயிக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement