வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (12/11/2017)

கடைசி தொடர்பு:12:56 (12/11/2017)

ரசிகரை உதைத்த கால்பந்து வீரர்...8 மாதங்கள் கால்பந்தை உதைக்கத் தடை! #FootballNothingWithoutFans

கால்பந்து - ரசிகர்களுக்கான விளையாட்டு. பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்குக் கொடுக்கும் மரியாதையை இங்கு ரசிகர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். ரசிகர்களை நோக்கி நடுவிரல் காட்டிவிட்டு ஒரு வீரர் சாதாரணமாக தப்பித்துவிட முடியாது. கால்பந்து மைதானத்துக்குள் முக்கியமானது பெர்ஃபாமன்ஸ் அல்ல, மரியாதை. அந்த விளையாட்டுக்கு, ஆடும் அணிக்கு, தன் அணியை இயக்கும் அந்த ஆதரவாளர்களுக்கு ஒரு வீரன் மரியாதை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையேல், அவன் எப்பேர்ப்பட்ட சாதனையாளனாக இருந்தாலும் கால்பந்து அரங்கிலிருந்து காணாமல் போய்விடுவான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம், ரசிகர் ஒருவரை உதைத்து, சஸ்பெண்ட் ஆகியுள்ள, பிரான்ஸ் வீரர் பேட்ரிஸ் எவ்ரா.

எவ்ரா - புகழ்பெற்ற கால்பந்து க்ளப்களான மான்செஸ்டர் யுனைடட், யுவன்டஸ், மொனாகோ போன்ற கிளப்களுக்காக விளையாடியவர். 2004-ம் ஆண்டில் இருந்து பிரான்ஸ் அணிக்காகவும் விளையாடிவருகிறார். Left Back பொசிஷனில் ஆடும் தடுப்பாட்டக்காரர். மான்செஸ்டர் யுனைடட் அணியில் ஆடிய காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த left back-களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். அந்த அணிக்காக 9 சீசன்களில் 379 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தச் சமயத்தில்தான் தேசிய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ் அணிக்காக 81 போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டு அணிகளையும் பல போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய அனுபவ வீரர். ஆனால், ஒரு சில நிமிடங்கள் உணர்ச்சிவசப்பட்டு, தன் கால்பந்து வாழ்க்கைக்கு தானே குழி தோண்டிக்கொண்டார்.

கால்பந்து

இத்தாலியின் யுவன்டஸ் அணிக்காக விளையாடிவந்த எவ்ரா, கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸின் ஒலிம்பிக் மர்ஸிலே க்ளப்புக்கு ஒப்பந்தமானார். அப்போதே அவர் 36 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். அதனால் மர்ஸிலே அணிக்காக அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. தொடர்ந்து மோசமாகவே செயல்பட்டு வந்தார். அதனால் அந்த க்ளப் ரசிகர்கள் அவர்மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ஐரோப்பா லீக் (UEFA Europa League) போட்டியில், போர்ச்சுகலைச் சேர்ந்த விடோரியா கிமாரஸ் அணியை எதிர்த்து விளையாட இருந்தது. இந்தப் போட்டியில் சப்ஸ்டிட்யூட் வீரராகத்தான் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் எவ்ரா. 

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு, மரஸிலே அணி வீரர்கள் 'வார்ம்-அப்' செய்துகொண்டிருந்தனர். கால்பந்து மைதானங்களில் எப்போதுமே 'ஹோம்' சப்போர்டர்களுக்கும், 'அவே' சப்போர்டர்களுக்கும் தனித்தனி கேலரிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். விடோரியா கிமாரஸ் அணியின் சொந்த மைதானம் என்பதால், 'அவே' ஆதரவளர்களுக்கான கேலரியில் மர்ஸிலே ஆதரவாளர்கள் அமர்ந்திருந்தனர். ஒருசிலர் திடீரென வீரர்களுக்கு அருகில் வந்தனர். அதில் ஒரு ரசிகர், எவ்ராவை கடுமையாக விமர்சித்துள்ளார். கோபத்தை அடக்கமுடியாத எவ்ரா, தன் காலால் அந்த ரசிகரின் தலையில் உதைத்தார். ஒரு வழியாக மற்ற வீரர்கள் வந்து அவரை இழுத்துச் செல்ல, சலசலப்பு முடிவுக்கு வந்தது. ஆனால், இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

 

 

அந்தப் போட்டியின் நடுவர் எவ்ராவுக்கு 'ரெட் கார்ட்' கொடுத்து வெளியேற்றினார். ஐரோப்பா லீக் வரலாற்றில், ஒரு போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேறிய முதல் வீரர் எவ்ராதான். அவர் ரசிகரை உதைத்த வீடியோ இணையதளத்தில் வேகமாகப் பரவ, பிரச்னை முற்றியது. மர்ஸிலே ரசிகர்கள், "இனிமேல் எவ்ரா எங்கள் அணியின் உடை அணிந்து விளையாடக்கூடாது" என்று அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். எவ்ராகுக்கு எதிராக மைதானங்களில் பதாகைகள் பிடித்தனர். என்னதான் ரசிகர் ஒருவர் சீண்டியிருந்தாலும், எவ்ரா அத்துமீறியதால் அணி நிர்வாகமும் அவரது தவறை நியாயப்படுத்தவில்லை. மாறாக, "மர்ஸிலே ரசிகர்கள் உண்மையான கால்பந்து ரசிகர்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் அணிக்கும், அணியின் வீரர்களுக்கும் துணை நிற்பார்கள். இந்தச் செயலில் ஈடுபட்டது நிச்சயம் மர்ஸிலே ஆதரவாளர்களாக இருக்கவே முடியாது" என்றனர்.

ரசிகர் எந்த அணியின் ஆதரவாளராக இருந்தாலும், ஒரு வீரர் இப்படி நடந்துகொண்டது தவறுதானே. இந்த விஷயத்தில் விசாரணை நடத்திய ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (UEFA), எவ்ராவின் இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்து, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் நடக்கும், சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களில் விளையாட அவருக்கு 8 மாதத் தடை விதித்துள்ளது. மேலும், அவருக்கு பத்தாயிரம் யூரோ அபராதம் விதித்தது. ஆனாலும், அவர் உள்ளூர் க்ளப் போட்டிகளில் விளையாடலாம். இந்தத் தண்டனையை அடுத்து, மர்ஸிலே அணியுடன் செய்திருந்த 18 மாத ஒப்பந்தம், 6 மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இனி  அவர் மர்ஸிலே அணிக்கு ஆடப்போவதில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

கால்பந்து

இனி, அவரால் ஜனவரி வரை எந்த அணிக்காகவும் விளையாட முடியாது. ஜனவரி மாதம் Transfer window ஆரம்பிக்கும்போது, புதியதாக ஒரு அணியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஆனாலும், 2018 ஜூன் வரை UEFA-வின் தொடர்களில் ஆட முடியாது. அதுமட்டுமின்றி இவருக்கு 36 வயதாகிவிட்டதால், சிறிய அணிகள்கூட எவ்ராவை வாங்க யோசிக்கும். இதனால், ஐரோப்பாவில் எவ்ரா இனி ஆடுவது கஷ்டமே. அந்த ரசிகரை உதைத்ததே, கால்பந்து அரங்கில் அவரின் கடைசி உதையாகக்கூட இருக்கலாம். ஒருவேளை, கால்பந்தை பிரபலப்படுத்த, வயதாகியிருந்தாலும் பரவாயில்லையென்று பிரபல வீரர்களை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் அமெரிக்கா அல்லது சீனாவிலுள்ள க்ளப்களில் ஏதேனும் ஒன்று, இவருக்கு மறுவாழ்வு கொடுக்கலாம்.

எவ்ரா, சர்ச்சைகளில் சிக்குவது இது புதிதல்ல. 2010-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணிக்கு இவர்தான் கேப்டன். முதல் போட்டியில் டிரா, இரண்டாவது போட்டியில் தோல்வி. இந்நிலையில், இரண்டாவது போட்டி முடிந்ததும் பயிற்சியாளருடன் மோதல் ஏற்பட, வீரர்களுடன் சேர்ந்து அணி நிர்வாகத்துக்கு எதிராகக் கிளம்பினார் எவ்ரா. பயிற்சியைப் புறக்கணிக்கவும் செய்தனர். 3-வது போட்டிக்கான பிளேயிங் லெவனிலிருந்து அவரைத் தூக்கினார் பயிற்சியாளர். கத்துக்குட்டி தென்னாப்பிரிக்காவிடம் தோற்று லீக் சுற்றோடு வெளியேறியது 2006-ல் 'ரன்னர்-அப்'பான பிரான்ஸ். ஈகோ மோதலால் தேசிய அணியின் நலனை சற்றும் மதிக்காமல் போக, பிரான்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டார்.

எவ்ரா

இதுதான் கால்பந்து. இங்கு ஒரு வீரரின் ஸ்டார் அந்தஸ்தோ, சாதனைகளோ அவரை எந்த இடத்திலும் காப்பாற்றிவிடாது. இங்கு வெற்றிகள், கோப்பைகள், பணம், புகழ் அனைத்தையும் தாண்டி ஒரு கால்பந்து க்ளப்பின் மிகப்பெரிய சொத்து, அதன் ஆதரவாளர்கள்தான். அவர்களுக்காகத்தான் க்ளப்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் இல்லையேல் கால்பந்து இல்லை...கால்பந்து இல்லையேல் ரசிகர்கள் இல்லை. அதனால், அந்த ரசிகர்களுக்கு மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியம். இல்லையேல், எவராயிருந்தாலும் எவ்ராவின் கதிதான்!


டிரெண்டிங் @ விகடன்