வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (12/11/2017)

கடைசி தொடர்பு:08:26 (13/11/2017)

’ஒவ்வொரு கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்’: விமர்சனங்கள்குறித்து மனம்திறந்த தோனி

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

Photo Credit: BCCI

 

இந்திய அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த கேப்டன், டெஸ்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிரான ஒருநாள் தொடர் வெற்றி என சக்சஸ்ஃபுல் கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து, லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வந்த தோனி, அந்த பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், அணியில் ஒரு வீரராக தோனி தொடர்ந்து இடம்பெற்று வந்தார். 
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தது முதலே, அவரது ஓய்வுகுறித்த கேள்விகள் எழத் தொடங்கின. சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் தோனியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அவர் மெதுவாக ரன் சேர்த்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இளைஞர்களுக்கு தோனி வழிவிட வேண்டும் என்று வி.வி.எஸ். லட்சுமணன், அஜித் அகார்கர் போன்ற முன்னாள் வீரர்களே தோனியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார். இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி, நெஹ்ரா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்திருந்தனர். 

இந்தநிலையில், தன் மீதான விமர்சனங்கள்குறித்து தோனி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். துபாயில், தனது கிரிக்கெட் அகாடெமியைத் திறந்துவைத்த தோனியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தோனி ‘வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அதை நிச்சயம் மதிக்க வேண்டும். வாழ்வைக் கற்றுக்கொள்ளும் ஒரு வழியே விளையாட்டு. ஒவ்வொரு வெற்றி மற்றும் தோல்விக்குப் பின்னரும் மக்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். அதேபோலவே, உங்கள் மீதான விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். திறந்த மனதுடன் அவற்றை எடுத்துக்கொண்டு உங்களை, நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமான விஷயம். 

இந்திய அணியில் விளையாடுவது மிகப்பெரிய உத்வேகம் அளிக்கக் கூடியது. நமது வாழ்நாளில் ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாடுவோம். சிலர் 20 ஆண்டுகள் கூட விளையாடுவதுண்டு. குறைந்தபட்சம் 70 ஆண்டுகள் வாழும் நிலையில், இந்த 10-15 ஆண்டுகள் என்பது மிகச்சாதாரணமானது. முடிவுகளைப் பற்றி நான் எப்பொழுதுமே சிந்திப்பதில்லை. அந்த கணத்தில் தேவையானது எதுவே, அதை மட்டுமே நான் செய்வேன்’ என்றார்.