இணையத்தைக் கலக்கும் இலங்கை பந்துவீச்சாளர்!

இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கெவின் கோத்திகோடா, தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார். 

Photo Credit: Asian Cricket Council


கிரிக்கெட் உலகம் வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட பல்வேறு பந்துவீச்சாளர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ். சைனா மேன் முறையில் பந்துவீசிய பால் ஆடம்ஸ், தலையைச் சுற்றி பந்துவீசுவது கிரிக்கெட் உலகில் பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ், தென்னாப்பிரிக்க அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அதேபோல், வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட முத்தையா முரளிதரன் மற்றும் அஜந்தா மெண்டிஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களைக் கிரிக்கெட் உலகுக்கு அளித்த இலங்கை மண்ணிலிருந்து மேலும் ஒரு வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட பந்துவீச்சாளர் அறிமுகமாகியுள்ளார். 

மலேசியால் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி சார்பில் அறிமுகமாகியிருக்கும் கெவின், பால் ஆடம்ஸைப்போல் வித்தியாசாமான முறையில் பந்துவீசக்கூடியவர் என்பதால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான கெவின், வலதுகை சுழற்பந்து வீச்சாளராவார். 18 வயதான கெவின், இலங்கையின் காலே மைதானத்துக்கு அருகில் உள்ள உனாவட்டுனா பகுதியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கெவின், அறிமுகமான போட்டியில் இலங்கை அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லெக் ஸ்பின்னரான கெவின் அந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். வித்தியாசமான பந்துவீச்சில் கவனம் ஈர்த்த அவர், இலங்கை சீனியர் அணிக்காகவும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!