வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (13/11/2017)

கடைசி தொடர்பு:19:07 (13/11/2017)

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பெண் குழந்தை... சம்திங் ஸ்பெஷல், ஏன்?

போர்ச்சுகல் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்தில் யூனிக். சொந்த வாழ்க்கையிலும் அப்படியே. ரொனால்டோ கருவில் இருக்கும்போதே அதைக் கலைக்க நினைத்தார் அவரது தாய். ஆனால், இன்று அவர் கால்பந்து உலகை ஆள்கிறார். அவரது பிறப்பு போலவே அவரின் குழந்தைகளின் பிறப்பிலும் விசித்திரம்!

ரொனால்டோ


ரொனால்டோ, ஸ்பெயினைச் சேர்ந்த மாடல் அழகி ஜார்ஜினா ராட்ரிகஸ் ஜோடிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெயர் அலானா மார்ட்டினா. ரொனால்டோவின் நான்காவது குழந்தை. இதில் என்ன விசேஷம்? தன் குழந்தையின் தாய் யார் என ரொனால்டோ அறிவித்த முதல் குழந்தை இவர்தான். இதற்கு முன் பெற்றெடுத்த கிறிஸ்டியானோ ஜூனியர், இரட்டையர்கள் ஈவா, மேட்டியோ என மூன்று மகன்களுக்கும் தங்கள் தாய் யார் எனத் தெரியாது.

ரொனால்டோ


கிறிஸ்டியானோ ஜூனியருக்குத் தற்போது வயது 7. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாடகைத்தாய் மூலம் பிறந்தவர். CR7 சொன்ன பிறகே, அவருக்குக் குழந்தை பிறந்த விஷயமே உலகுக்குத் தெரியவந்தது. ஆனாலும், கிறிஸ்டியானோ ஜுனியரின் தாய் யார் என்பது ரகசியமாகவே இருந்தது. ‘‘இது ஒரு விஷயமே இல்லை. எனக்குத் தந்தையாகப் பிடிக்கும். அதனால் குழந்தை பெற்றுக்கொண்டேன். சரியான நேரத்தில் தாய் யார் என்பதை என் மகனுக்குச் சொல்வேன். அவனும் என்னைப் புரிந்துகொள்வான்’’ என்றார் ரொனால்டோ கூலாக. அதோடு, தன் மகனை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி வளர்த்து வருகிறார்.  தன்னைப் போலவே கால்பந்து ஜாம்பவானாக்க வேண்டும் என்பதற்காக, வேறு எந்த அகாடமியிலும் சேர்க்காமல் இருக்கிறார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து போஸ் கொடுப்பார்கள். அதைப் பார்த்து ரசிகர்கள் ‘No DNA test needed’ என கமென்ட் அடிப்பார்கள் ரசிகர்கள்.


இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவில் ரொனால்டோவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கிறிஸ்டியானோ ஜூனியர் போலவே ஈவா, மேட்டியோ இருவரின் தாய் யார் என்பதும் தெரியவில்லை. வழக்கம்போல ரொனால்டோ வெளி உலகத்துக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இந்தமுறை ரொனால்டோ, மூத்த மகன் இருவரும் சேர்ந்து, ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சோசியல் மீடியாவில் போஸ் கொடுத்தனர். அவ்வப்போது ரொனால்டோவின் தற்போதைய கேர்ள் ஃபிரண்ட் ஜார்ஜினா ராட்ரிகஸும் இந்தக் கூட்டணியில் ஐக்கியமாகி விடுவார்.


பொதுவாக, ரொனால்டோ கேர்ள் ஃபிரண்ட் விஷயத்தில் உஷார் பேர்வழி. அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவும் மாட்டார்; அவர்கள் மூலம் குழந்தைகள் பிறக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பார். ஆனால், சமீபத்தில் ஜார்ஜினா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கிறிஸ்டியானோவின் குழந்தையை வயிற்றில் சுமப்பதாகவும் சோசியல் மீடியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். அவரும் இதை மறுக்கவில்லை. மாறாக, ‘‘தந்தையாக இருப்பது விநோதமான அனுபவம். இது என்னை ஒரு முழுமையான மனிதனாக்குகிறது. மீண்டும் ஒரு குழந்தைக்குத் தந்தையாவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.


நவம்பர் 21-ம் தேதி குழந்தை பிறக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ரொனால்டோவின் வீடு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிதுநேரத்தில், தனக்கு மகள் பிறந்திருப்பதை உறுதிப்படுத்தினார் ரொனால்டோ. ‘அலானா மார்ட்டினா பிறந்துவிட்டாள்! தாய், மகள் இருவரும் நலம். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்’’ என இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார். அந்தப் படத்துக்கக் கீழே ரசிகர்கள்,  ‘தாய் யாரெனத் தெரிந்த ரொனால்டோவின் முதல் குழந்தை இவர்தான்’ என கமென்ட் செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்