Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மேன்! #HBDGilchrist

Chennai: 

DRS முறையெல்லாம் அறிமுகமாகாத காலம். அந்த இந்தியச் சுழற்பந்துவீச்சாளரின் பந்து, பேட்டுக்கு மிக அருகில் சென்று கீப்பரிடம் தஞ்சம்கொள்கிறது. ஃபீல்டிங் டீம் மொத்தமும் அப்பீல் செய்ய, கீப்பரும் பௌலரும் துள்ளிக் குதிக்க, அசைவின்றி நிற்கிறார் அம்பயர். பேட்ஸ்மேனின் முகத்தில் துளியும் சலனமில்லை. அந்த ஓவர் முடிந்ததும் ரீப்ளே போடப்படுகிறது. பந்து பேட்டில் பட்டு எட்ஜானது தெளிவாகத் தெரிகிறது. டிவி-யில் பார்த்த நம் வெறித்தன ரசிகர்கள் பொங்குகிறார்கள். கொஞ்ச நேரம் அம்பயருக்கு ஆராதனை நடக்க, சலனமின்றி நின்றிருந்த பேட்ஸ்மேனை அடுத்ததாக வசைபாடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அவரைக் கரித்துக்கொட்ட, நடுவில் வந்து விழுந்தது இந்த வார்த்தை... “இதுவே அந்த இடத்துல கில்கிறிஸ்ட் இருந்திருந்தா, கீப்பர் கேட்ச் பிடிச்ச அடுத்த செகண்ட் பெவிலியன்ல நின்றிருப்பான்". அனைவரும் அதை வழிமொழிந்தனர்.  

இரண்டு ஆசிய அணிகள் விளையாடிக்கொண்டிருந்த அந்தப் போட்டியில், அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் ஹீரோவாகிப்போனார். காரணம், அவரின்  அதிரடி ஆட்டம், அசத்தல் கீப்பிங்கையெல்லாம் தாண்டி, அந்த மைதானத்தில் மனிதனாக வென்றவர் அவர். கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் கேம் எனில், ஆடம் கில்கிறிஸ்ட்டே அதன் ஆகச்சிறந்த ஜென்டில்மேன்!

கில்கிறிஸ்ட்

சிறுவயதில் கிரிக்கெட் பார்க்கும்போது பயங்கரமாக சந்தேகம் எழும், `ஃபீல்டிங் டீம்ல எல்லோரும் சும்மா நிக்கிறப்போ, அது என்னடா இந்த கீப்பர் மட்டும் க்ளவுஸ், பேட் (Pad), ஹெல்மட்டெல்லாம் போட்டுட்டு நிக்குறார்' என்று. போகப்போகத்தான் விக்கெட் கீப்பிங்கில் இருக்கும் கஷ்டம் புரியத் தொடங்கியது. 140 - 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்தை வெறும் கையில் பிடித்திட முடியுமா? ஸ்டம்புக்கு மிக அருகில் நின்றுகொண்டிருக்கையில் முகத்தைப் பந்து பதம்பார்த்துவிட்டால்! அது மிகவும் ஆபத்தான பொசிஷன். கவனம், பந்தின் மீதே இருக்க வேண்டும். சற்று கவனம் சிதறி ஒரு எட்ஜ் கேட்ச்சை விட்டாலோ, பை (Bye) மூலமாக ஒரு பெளண்டரியை விட்டாலோ ரசிகர்கள் அர்ச்சனை செய்வார்கள். ஆக, 50 ஓவர்களும், 300 பந்துகளும் அலெர்ட்டாகவே இருக்கவேண்டும். அதனால்தான் மொயின் கான் முதல் தைபு வரை பேட்டிங்கில் சாதிக்காவிடிலும் பேசப்பட்டார்கள்.

சாதாரண விக்கெட் கீப்பருக்கே இத்தனை சவால்கள். கில்கிறிஸ்ட் முன் இருந்தவையெல்லாம் அதுக்கும்மேல ரகம். 160 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பிரெட் லீயின் பந்துகளை எதிர்கொள்ளவேண்டும். லெக் சைடு கொஞ்சம் விலகிச் சென்றாலும் நொடிப்பொழுதில் அவை பௌண்டரியைத் தொட்டுவிடும். பௌன்ஸர்கள் என்றால், நிலைமை இன்னும் மோசம். மெக்ராத்தின் இரண்டாவது, மூன்றாவது ஸ்பெல்களில், ஸ்டம்புக்கு மிக அருகில் நிற்பார். பந்து இன் ஸ்விங் ஆகுமா, அவுட் ஸ்விங் ஆகுமா...? தெரியாது. அதைச் சரியாகக் கணித்திட வேண்டும். இவையெல்லாம்விட மிகப்பெரிய சவால்... ஷேன் வார்னே! பெர்த்தில் பிட்சாகி சிட்னி வரை சுழலும் அந்தப் பந்தைப் பிடிக்க, காலச்சக்கரத்தையே ஒரு நொடி நிறுத்தவேண்டியிருக்கும். ஆனால், இவருக்கு அவை சவால்களாகவே தெரிவதில்லை. அவரது கண்கள், கிளியை மட்டும் பார்த்த அர்ஜுனன்போல் பந்தை மட்டுமே குறிவைத்தன. அதனால்தான் அவர்களையெல்லாம் சமாளிக்க முடிந்தது. அந்த ஆஸ்திரேலிய பௌலிங் அட்டாக்கைச் சமாளித்ததற்கே கில்லியைக் கொண்டாடவேண்டும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அது. பேட்ஸ்மேன் பந்தை ஸ்வீப் செய்ய, அது ஷார்ட் லெக்கில் நின்றிருந்த ஹெய்டன் மீது பட்டு மேலே எழும்பும். அது ஹெய்டனின் காலடியில்தான் விழும். நொடிப்பொழுதில் அதற்கு ரியாக்ட் செய்து, பாய்ந்தை கேட்ச் பிடிப்பார் கில்லி. ஒரு நொடிதான். அந்த prescence of mind... சான்ஸே இல்லை. இதாவது பரவாயில்லை. தென்னாப்பிரிக்கா அணியுடனான மற்றொரு போட்டியில், முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த வார்னே கேட்சைத் தவறவிட்டுவிடுவார். வேறொருவராக இருந்தால் தலையில் கை வைத்துக்கொண்டு நின்றிருப்பார். கில்லி, ரொம்ப ஷார்ப். கவனம், பந்தைவிட்டு அகலவில்லை. வார்னே பந்தை நழுவவிட, அவர் கீழே விழும்போது அவர் காலிலேயே பட்டு பௌன்ஸ் ஆனது. அங்கும் ஆஜரானார் கில்லி. ஃபைன்லெக் திசையில் அடிக்கப்படும் பல பந்துகள், இந்த ஸ்பைடர்மேனின் `Gum' கரங்களில் சிக்கிவிடும். வேகப்பந்துவீச்சில் இந்தச் சாகசங்கள் நிகழ்த்த அவரது உயரம் பெரிதும் துணைபுரிந்தது. ஆனால், சுழற்பந்தின்போது..?

ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஸ்டம்புக்கு அருகில் இருக்கும் கீப்பர்கள், குனிந்து நிற்க வேண்டும். அப்போதுதான் பௌன்ஸ் ஆகாத பந்துகளையும் அவர்களால் சரியாகப் பிடிக்க முடியும். கில்கிறிஸ்டின் உயரம் இந்த வகையில் மிகப்பெரிய தடை. அவரது உயரத்துக்குத் தொடர்ந்து அப்படி நின்றாலே முதுகுவலி அதிகரித்துவிடும். ஆனாலும் அநாயசமாகக் கலக்கினார். ஸ்டம்புக்குப் பின்னால் மட்டும் ஜொலித்திருந்தால்கூட இந்த அளவுக்குப் பிரபலமடைந்திருக்க மாட்டார். அதற்கு முன்னாலும் பட்டையைக்கிளப்பியதுதான் அவரை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இன்றுவரை நம்மைப் பேசவைக்கிறது. 

கில்கிறிஸ்ட்

கில்கிறிஸ்ட் தந்த அசத்தல் தொடக்கங்கள், அசைக்க முடியாத அணியாக ஆஸ்திரேலியா உருவானதில் பெரும்பங்கு வகித்தது. உலகக்கோப்பை ஃபைனல்கள் இவருக்கு பெரிய பொருட்டே அல்ல. 2003-ம் ஆண்டு ஃபைனலில் அதிரடியாக அரை சதம் அடித்து, இந்தியாவை போட்டுத்தள்ளியவர், நான்கு ஆண்டுகள் கழித்து 149 ரன்கள் குவித்து, நம் பக்கத்து நாடு இலங்கையை நசுக்கினார். பான்டிங்கின் தாண்டவம் நம்மை நொறுக்கியதென்றால், பான்டிங்குக்கு நம்பிக்கை கொடுத்தது கில்கிறிஸ்டின் ஆட்டம்தான். இலங்கையுடனான ஃபைனலில், க்ளவுஸுக்குள் ஸ்குவாஷ் பால் வைத்து விளையாடியதாக அவர் சொல்ல, கிளம்பியது பூதம். ஐ.சி.சி விதிகளின்படி அது குற்றமில்லை என்பதால்தான் உலகம் ஓய்ந்தது. அவர் ஸ்குவாஷ் பந்தை க்ளவுஸுக்குள் ஏன் வைத்திருந்தார்? கிரிக்கெட் வீரர்கள், பேட்டிங் க்ளவுஸுக்குள் கிரிப் கிடைப்பதற்காக மெலிசான கையுறைகளைப் பயன்படுத்துவார்கள். அதற்குப் பதிலாக ஸ்குவாஷ் பந்தைப் பயன்படுத்தினார் கில்லி. இப்படிச் சின்னச் சின்ன விஷயத்திலும்கூட புத்திசாலித்தனமாகச் செயல்படுபவர்.

மூன்று உலகக்கோப்பைகளில் விளையாடியுள்ள கில்லி, 31 போட்டிகளில் 1,085 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதமும், 8 அரை சதமும் அடங்கும். அதுமட்டுமின்றி 45 கேட்சுகளும், 7 ஸ்டம்பிங்குகளும் செய்து மூன்று உலகக்கோப்பை வெற்றிகளிலும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அவற்றையெல்லாம் தாண்டி, ஆஸ்திரேலியா மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மதிக்கப்பட காரணம் அவரது குணம்தான். அவுட் எனத் தெரிந்தால், அம்பயரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டார். சட்டென கிரீஸிலிருந்து கிளம்பிவிடுவார். அவ்வளவு நேர்மை.

2003-ம் ஆண்டு உலகக்கோப்பை, மிகவும் முக்கியமான அரை இறுதிப்போட்டி. அரவிந்த் டி சில்வா-வின் பந்தை ஸ்வீப் செய்கிறார் கில்லி. பந்து பேடில் (Pad) பட்டு எகிற, அதை கீப்பர் சங்கக்காரா பிடித்துவிடுவார். இலங்கை வீரர்கள் அனைவரும் கேட்சுக்கு அப்பீல் செய்வார்கள். கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நிற்பார் நடுவர். திடீரெனப் பார்த்தால், பெவிலியன் பக்கம் போய்க்கொண்டிருப்பார் கில்கிறிஸ்ட். ஆஸ்திரேலியர்கள் அவரைக் குறை கூறினார். ஆனால், அவர் என்றுமே அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. கடைசிவரை களத்தில் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால், ஆஸ்திரேலிய வீரர்களுடன்கூட இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இவரது அந்தச் செயலை அணி வீரர்கள் யாருமே ஆதரித்ததில்லை. பலமுறை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். `டிரெஸ்ஸிங் ரூம் கெமிஸ்ட்ரி முழுமையாகப் பாதித்திருக்கும். நான் அணிக்கு துரோகம் செய்ததுபோல் மௌனமாகக் குற்றம்சாட்டுவார்கள். `என் நேர்மையைக் கடைப்பிடிக்க, மற்றவர்களை நேர்மையற்றவர்களாகக் காட்டுகிறோமோ!' என்று எனக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிட்டனர்' என்று `ட்ரூ கலர்ஸ்' (True Colours) என்னும் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவுக்கு பலமுறை அவர் மனமுடைந்திருந்தாலும், ஒருமுறைகூட களத்தில் அவர் நேர்மை தவறவில்லை. நேர்மை தவறாதவனாகவே ஓய்வும் பெற்றார்.

கில்கிறிஸ்ட்

அவர் ஓய்வுபெறும்போது, அப்போதைய பயிற்சியாளர் ஜான் புக்கனன், “சில மாதங்கள் முன்பு வார்னே, மெக்ராத், மார்டின் போன்றோரெல்லாம் ஓய்வுபெற்றார்கள். அந்த ஓய்வைவிட கில்கிறிஸ்டின் ஓய்வு அணிக்குப் பெரும் இழப்பு. இது ஈடுசெய்ய முடியாத ஒன்று" என்றார். கில்கிறிஸ்டின் ஓய்வு முடிவை, மறுபரிசீலனை செய்யச் சொன்னார் அன்றைய பிரதமர் கெவின் ரூட். ஒரு பிரதமரே சொல்லும் அளவுக்கு அணிக்கு முக்கியமான வீரராகத் திகழ்ந்தார். ஏனெனில், அப்படியொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆஸ்திரேலியா என்ன... உலகுக்கே இனி அப்படி ஒருவர் கிடைக்கப்போவதில்லை!

ஹேப்பி பர்த்டே ஜென்டில்மேன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement