வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (16/11/2017)

கடைசி தொடர்பு:10:50 (16/11/2017)

ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு

சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா?  தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன?

தோனி

தோனி இல்லனா டீமே இல்ல...

தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, 84.4 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கும் பதில் 'நோ'. நிச்சயம் அவர் அணிக்கு வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் கருத்து. 'தோனி இல்லையெனில் இந்தியன் டீமே இல்லை' என்று நரம்பு புடைக்கிறார்கள் MSDians.

சர்வே

 

அப்படி அவர் ஓய்வுபெறுவதாக இருந்தால், டி20 போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு பெறட்டும் என்று 74.9 சதவிகித ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கு, தோனியின் இருப்பு அணிக்கு மிகவும் அவசியம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால், 11.9 சதவிகித மக்கள், அவர் முற்றிலுமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று ரெட் சிக்னல் காட்டுகின்றனர். 

சர்வே

உலகக்கோப்பைக்குத் தோனி வேண்டும்

‘தோனி ஓய்வுபெறக் கூடாது’ என்று பலரும் சொல்லக் காரணம் 2019 உலகக்கோப்பைதான். 2015-ல் அரையிறுதியில் தோற்று கோப்பையைத் தக்கவைக்கத் தவறிய இந்திய அணி, இம்முறை கோப்பையை வெல்வதற்குத் தோனியின் உதவி வேண்டுமென்றே அனைவரும் நினைக்கிறார்கள். பெரும்பாலும் அணியில் இளைஞர்களே அதிகம் இருப்பதால், தோனியின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். அது அவசியமும்கூட. இதுவே 89.3 சதவிகித ரசிகர்களின் கருத்து.

சர்வே

 

வெஸ்ட் இண்டீஸில் நடந்த 2007 உலகக்கோப்பைக்குப் பயணித்த இந்திய அணியில் தோனிக்கு 'பேக் அப்’ விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இருந்தார். 2003 உலகக்கோப்பையில் டிராவிட்டுக்கு பேக்-அப் கீப்பர் பார்திவ் பட்டேல். ஆனால், தோனி கேப்டன் ஆன பிறகு, 2011 மற்றும் 2015 உலகக்கோப்பைகளுக்கு பேக்-அப் கீப்பர்கள் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த உலகக்கோப்பையில் தோனிக்கு பேக்-அப் தேவையா என்று கேட்டதற்கு 'எதுக்கு!' என்கின்றனர் ரசிகர்கள். 31.8 சதவிகிதம் பேர் மட்டும் நிச்சயம் பேக்-அப் தேவை என்றனர். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மை தொடர்ந்தால், பேட்ஸ்மேன் + பேக் அப் கீப்பராக அணிக்கு வலுசேர்க்கலாம்.

சர்வே

 

பேட்ஸ்மேன் தோனி எப்படி?

தோனி முன்பு போல் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கவிடுவதில்லை. கடைசி ஓவர்களில் பௌலர்களைப் பதம் பார்ப்பதில்லை. Anchoring இன்னிங்ஸ் ஆடத்தொடங்கிவிட்டார். 'பழைய தோனி மறுபடி வரணும்' என்று பலரும் புலம்பினாலும், அவரது செயல்பாடு 80 சதவிகதம் பேரை திருப்திப்படுத்தியிருப்பது பெரிய ஆச்சர்யமே. அவர்களில் பெரும்பாலானோர் (61.2%), தோனி டாப் ஆர்டரில்  களமிறங்க விரும்புகின்றனர்.

சர்வே

ஆனால், 28.6 சதவிகிதம் பேர், பின்வரிசை பலவீனமாகிவிடும் என்று கருதுகின்றனர். கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் 'கன்சிஸ்டென்ஸி' இல்லை. பாண்டியா ஃபினிஷராக இருந்தாலும், இன்னிங்ஸ் 'பில்ட்' செய்யும் பக்குவம் இன்னும் அவருக்குக் கைகூடவில்லை. தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே ஆகியோரும் தங்களை இன்னும் முழுமையாக நிரூபிக்கவில்லை. எனவே, இந்த மிடில் ஆர்டரை நம்பி தோனியை ப்ரமோட் செய்வது கொஞ்சம் ஆபத்துதான்.

சர்வே

 

பெரும்பாலான ரசிகர்கள் (61.5%) தோனி நான்காவது வீரராகக் களமிறங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி ப்ரமோட் செய்யப்பட்டால், அவர் இன்னும் பெட்டராக ஆடக்கூடும். அதேநேரத்தில் ஏற்கெனவே சொன்னதுபோல, 'லோயர் மிடில் ஆர்டர்' ஆட்டம் கண்டுவிடும். சீராக ஆடாத வீரர்கள் இருக்கும்போது, நம்பத்தகுந்த வீரரான தோனியை ப்ரமோட் செய்வது அணிக்குப் பாதமாக அமையலாம் என்பது 11 சதவிகித ரசிகர்களின் கருத்து. 

சர்வே

 

27.5 சதவிகித ரசிகர்கள், தோனியின் இடத்தை இளம் வீரர்களுக்கு வழங்கினால் அவர்கள் ஜொலிப்பார்கள் என்று கூறுகின்றனர். ஓரிரு தொடர்களில் அவர்களை வைத்து டெஸ்ட் செய்யலாம். ஆனால், உலகக்கோப்பை நெருங்கி வரும் சமயத்தில் இது சரியான முடிவாக அமையாது. அதுமட்டுமன்றி, மனீஷ், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிசப் பன்ட் போன்றவர்களால் லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்பது தெரியவில்லை. அதுமட்டுமன்றி அவர்கள் டி-20யைப் போல் ஒருநாள் போட்டிகளில் தங்களை நிரூபிக்கவில்லை.

சர்வே

சிக்ஸர் அடித்து ஃபினிஷ் செய்வது மட்டும் ஃபினிஷிங் அல்ல, புவனேஷ்குமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அவரை அரைசதம் அடிக்கவிட்டு, வெற்றி தேடித்தருவதும் ஃபினிஷிங்தான் என்பதை தோனி நிரூபித்துள்ளார். அதைத்தான் 80.8 சதவிகித ரசிகர்களும் சொல்கிறார்கள். இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

சர்வே

 

தினேஷ் கார்த்திக் ஓகே..

தோனியின் ஓய்வுக்குப் பிறகு, 'இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பப்போவது யார்' என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் மூவருக்குமே ஓரளவு ஆதரவு இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கார்த்திக் நன்றாகவே ஆடினார். ஆனாலும், அவருக்கு 32 வயதாகிவிட்டதால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பன்ட் போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது அவசியம் என்பதையும் ரசிகர்களின் இந்த முடிவு காட்டுகிறது.

சர்வே

தோனி & கோலி...

தோனிக்கு கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே ஆதரவளிக்கிறார். அணியில் ஒரு பேட்ஸ்மேனாகவும், கீப்பராகவும், தனக்கு ஆலோசகராகவும் தோனி எவ்வளவு முக்கியம் என்பதை கோலி உணர்ந்துள்ளார். அதைத்தான் 80 ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.  4 சதவிகிதம்பேர் மட்டுமே, கோலிக்கு தோனியின் உதவி தேவையில்லை என்கின்றனர்.

சர்வே

“கோலியின் சப்போர்ட் இருப்பதால்தான் தோனிக்கு அணியில் இடம் கிடைக்கிறது" என்றும் பலர் கூறினர். ஆனால், தோனி தன் செயல்பாட்டால்தான் அணியில் நீடிக்கிறார் என 81.7 சதவிகித ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். தோனி அணியில் நீடிக்க யாருடைய தயவும் தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணம்.

சர்வே

நியூசிலாந்து தொடர் முடிந்ததும், "எங்களுக்கிடையிலான உறவை பலர் கெடுக்க நினைக்கிறார்கள்" என்று பகிரங்கமாகத் தெரிவித்தார் விராட். அணிக்குள் இவ்வளவு பிரச்னையா என்று பலருக்கும் ஆச்சர்யம். ரசிகர்களும் விராட் கூறியது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருக்குமான நட்பு பலமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், 74.6 சதவிகிதம் பேர் இருவருக்கும் இடையே யாரோ கேம் ஆடுவதாக கருதுகின்றனர். 

சர்வே
 

ஆக, இந்த சர்வே முடிவுகள் சொல்வது... இந்தியாவுக்குத் தோனி தேவை, அவர் உலகக்கோப்பையில் நிச்சயம் ஆடவேண்டும், 4-வது வீரராக ப்ரமோட் செய்யப்படவேண்டும், அவரால் ஃபினிஷராக நிச்சயம் ஜொலிக்க முடியும்!


டிரெண்டிங் @ விகடன்