வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (16/11/2017)

கடைசி தொடர்பு:17:18 (16/11/2017)

கனவுகளைத் தங்கமாக்கும் வித்தகன்... ‘கோல்டன் டச்’ கோபிசந்த்! #HBDGopichand

லண்டன், 2012 - ஒலிம்பிக் மேடையில் வாங்கிய வெண்கலப் பதக்கத்தோடு நின்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அந்த இந்தியப் பெண், அவரைத்தான் தன் வெற்றியின் காரணமாய் அடையாளம் காட்டினாள். அந்த மனிதனிடம் மிகையில்லாத புன்னகை. நான்கு ஆண்டுகள் கழித்து, ரியோ டி ஜெனிரோ - இப்போது வெள்ளியோடு ஒலிம்பிக் மேடையிலிருந்து இறங்குகிறாள் இன்னொருத்தி.."நான் இவ்வளவு பெரிய ஆளாக சார்தான் காரணம்". அதே மனிதனைத்தான் இவளும் கைகாட்டுகிறாள். 2017, பாரீஸ் - ஆண்டின் நான்காவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற சாதனையில் திளைத்த அந்த வீரனும் இவரையே கொண்டாடுகிறான். "அவர் இல்லைனா என் வாழ்க்கை என்ன ஆயிருக்கும்னே தெரியல". அதே மனிதன்... தேசம் கொண்டாடும் அனைவரும் வழிபடும் அவரின் அந்தக் கண்கள், 'அடுத்து யாரைச் சாம்பியன் ஆக்கலாம்' என்று தேடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை. அவர் இல்லையேல் இவர்கள் இல்லை. இந்தியாவுக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் இல்லை. பேட்மின்டன் என்ற விளையாட்டுக்கு இங்கு அடையாளமே இல்லை. புல்லேலா கோபிசந்த் - தன் கனவை விதையாக்கி, அதை விருட்சமாக்கிக்கொண்டிருக்கும் வித்தகன்!

கோபிசந்த்

30 வயதில் பேட்மின்டன் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது. 'ஆல் இங்கிலாந்து' பேட்மின்டன் தொடரை வென்ற இரண்டாவது இந்தியன் என்ற பெருமை இருக்கிறது. உதவி செய்ய ஆந்திர அரசு தயாராக இருக்கிறது. அரசின் சலுகைகளோடு வாழ்க்கையில் செட்டில் ஆகியிருக்கலாம். வீட்டை அடமானம் வைத்து ஓர் அகாடமியைத் திறப்பதற்கான அவசியம் என்ன. ஓய்வுக்குப் பிறகும் அதிகாலை நான்கு மணிமுதல் இரவு வரை களமே கதியின்று ஏன் கிடக்கவேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தன் பிள்ளைகளை விட்டுவிட்டு எதற்காக மாணவர்களுடனேயே பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். எல்லாம் தன் கனவை நனவாக்க. ஆனால், அவர் கண்ட கனவொன்றும் சாதாரணமானது அல்ல. சாதாரணமாக நடந்துவிடக்கூடியதும் அல்ல. 

பேட்மின்டன் அரங்கைப் பொறுத்தவரையில் எவ்வளவு பெரிய தொடர், பெருமையான தொடரை வென்றாலும் அந்த ஒரு வாரம்தான் அந்தப்  பெயர் பேசப்படும். காலத்துக்கும் பேசப்பட வேண்டுமெனில் ஒலிம்பிக் பதக்கம் வென்றாகவேண்டும். அப்போதுதான் அந்த வீரனும், அவன் நாடும் பேசப்படும். பெருமைப்படும். சீனா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் ஆட்சிசெய்த அந்த அரங்கில், இந்தியக் கொடி பறக்கவேயில்லை. பிரகாஷ் படுகோன், கோபிசந்த் இருவரும் திறமையான வீரர்களாய் அடையாளப்பட்டாலும் ஒலிம்பிக் பதக்கம்...கிடைக்கவில்லை. பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களாகவும் யாரும் கண்டறியப்படவில்லை. இந்த அவலத்தை உடைக்க நினைத்தார் கோபி. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க நினைத்தார். "பேட்மின்டன் அகாடெமி தொடங்க வேண்டும்"...கனவொன்று கண்டுவிட்டார்.

கோபி

தன் ஆசையை ஆந்திர அரசிடம் தெரிவிக்கிறார். 5 ஏக்கர் நிலம் தருகிறது அரசு. ஆனால் அகாடமி, அந்த உலகத்தர வசதி, தான் உறங்கும் வீட்டை அடமானம் வைத்து, கனவை நனவாக்கத் தொடங்கினார். வெறும் நெட்கள் தொங்கும் களங்களாக மட்டும் இல்லாமல், ஜிம், ஸ்விம்மிங் பூல், வீரர்களின் பயணச் சலுப்பைக் குறைக்க அங்கேயே தங்கும் வசதி என உண்மையிலேயே உலகத்தரத்தில் உருவானது அந்த அகாடெமி. பயிற்சிகளுக்கு நடுவில் வீரர்களின் பயணம்கூட அவர்களது பெர்ஃபாமன்ஸை கெடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 3 உலகச் சாம்பியன் பட்டம், 5 காமன்வெல்த் பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்த அந்தத் தங்கப் பட்டறை உருவானது. சாய்னா, சிந்து போன்றோர் மட்டுமன்றி பார்ப்பள்ளி காஷ்யப், சாய் ப்ரனீத், சிக்கி ரெட்டி, ப்ரனோய் என்று தரமான தங்கங்களைத் தயார் செய்துகொண்டிருக்கிறது.

இளம் திறமைகளை உலக சாம்பியன்கள் ஆக்குவதில் மும்முரம் காட்டினார். அவர்களின் கண்கள் வழியே தன் கனவை, தன் தேசத்தின் பெருமையைக் கண்டார். இந்த ஆண்டு 4 சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், " 5 மணிக்கு ப்ராக்டீஸ் ஆரம்பிக்கும். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கோபி சார் 4 மணிக்கு எழுந்து வந்து என்ன எழுப்பிவிடுவார். அவரோட அந்த தாகம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. அவரே அப்படி இருக்கும்போது, நாமும் கஷ்டங்களை தாங்கிக்கணும்னு புரிஞ்சுது. அவர் இல்லைனா என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னே தெரியல" என்று சொல்லும்போதே, ஒவ்வொருவருக்குள்ளும் இவர் எப்படியான தாக்கத்தை உருவாக்கியுள்ளார் என்பது புரிகிறது. ஜூனியர் பிரிவில், இரட்டையரில் பங்கேற்றுவந்த ஸ்ரீகாந்தை, சீனியர் போட்டிகளின்போது சிங்கிள்சுக்கு மாற்றினார் கோபி. இப்போது ஸ்ரீகாந்த் உலகின் நம்பர்-2 பிளேயர்.

ஸ்ரீகாந்த்

சாய்னா நேவாலும், சிந்துவும் பேட்மின்டன் அரங்கில் சாதித்தது நாம் நன்றாகவே அறிவோம். அவர்களைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கினார் கோபி. சின்னச் சின்ன விஷயங்களிலும் அவர்களை பெர்ஃபெக்ட் ஆக்கினார். போட்டியில் அமைதியாக ஆடுவது ஓகே. ஆனால், உரக்கக் கத்தி எனர்ஜியை வெளியேகொட்டும்போது, ஆட்டத்தின் வேகம் கூடும். ஸ்மேஷ்கள் மின்னலாய் பாயும். சாஃப்ட் சிந்துவை, அந்த டெம்ப்ளேட்டுக்கு மாற்றினார். சிந்து தன் ஒலிம்பிக் வெற்றியின் காரணங்களில் முக்கியமாகச் சொன்னது இதைத்தான். கோபி டச்...கோல்டன் டச்!

சாய்னாவின் இந்த 4 ஆண்டுகளின் செயல்பாடு உணர்த்திவிடும் கோபி யார் என்று. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இவரது பயிற்சியின்கீழ் வெண்கலம் வென்றார். புத்தகம் பின் மட்டுமே சென்ற பிள்ளைகளுக்கெல்லாம் ரோல் மாடல் ஆனார். தேசத்தின் ஐகான் ஆனார். ஆனால் பின்பு ஒரு சிறிய மனக்கசப்பு, கோபியிடமிருந்து பிரிந்து பெங்களூர் சென்றார். அடிக்கடி காயங்கள். பல தொடர்களிலிருந்து வெளியேறினார். ரியோ ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே வெளியேற்ற, சிந்துவின் வளர்ச்சி, "இனி சாய்னா ஓய்வெடுக்கெட்டும். எங்களுக்கு சாம்பியன் சிந்து கிடைத்துவிட்டார்" என்றெல்லாம் ரசிகர்கள் வசைபாடினர். இந்த ஓராண்டு வெற்றியும், தோல்வியும் மாறி மாறித் துறத்தியது. செப்டம்பர் மாதம் மீண்டும் தன் பழைய கோச்சுடன் கைகோர்த்தார். கடந்த வாரம் சிந்துவை வீழ்த்தி தேசிய சாம்பியன் ஆகிவிட்டார். 

சாய்னா

கோபி அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்துவிட்டார். வெறுமனே விளையாடுவதற்கு மட்டும் அவர் பயிற்சி கொடுக்கவில்லை. ஒவ்வொருவரையும் ஒரு சாம்பியனாகவே பார்ப்பவர். அவர்கள் சாப்பிடும் உணவு, உடல்நிலை அனைத்தையும் தானே முன்னின்று கவனிப்பவர். காயம் கொள்வது சாய்னாவுக்குப் புதிதல்ல. ஆனால், அப்படி நிகழாத வகையில் அவரைக் கையாண்டார் கோபி. வீரர்கள் மனதளவில் 'கம்ஃபோர்டா'க இருக்கவேண்டும் என்று நினைப்பவர். எந்த வகையிலும் தன் மாணவர்களுக்குத் தடங்கள் வந்துவிடக் கூடாது என்று நினைப்பவர். சிந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றபோது, "இனியும் 'பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்' எனச் சொல்லத் தேவையில்லை. அவர்கள்தான் நம்மை ரியோவில் காப்பாற்றியுள்ளனர்" என்றார். நிச்சயம் அதில் அவரின் பங்கும் அதிகம்.

மகள் காயத்ரி 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன். மகன் சாய் விஷ்னு இன்னொரு சாம்பியனாக உருவாகத் தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆனாலும், எந்த நேரமும் தன் மாணவர்களுடன்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார் கோபி. அவரது கனவு எளிதில் கலைவதல்ல. ஒலிம்பிக் அரங்கில், பதக்கம் வெல்லும் 3 நாட்டுக் கொடிகளும் ஏற்றப்படும். மேலே தங்கம் வென்ற நாட்டின் கொடி, கொஞ்சம் கீழே வெள்ளி, அதற்கும் கொஞ்சம் கீழே வெண்கலம். தங்கம் வென்ற தேசத்தின் தேசிய கீதமும் ஒலிக்கப்படும். சிந்துவின் வெள்ளியால் இரண்டாம் தளத்தில் பறந்த இந்தியக் கொடி இன்னோர் அடி மேலே பறக்க வேண்டும். இந்திய தேசிய கீதம் அங்கு ஒலிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த ஒலிம்பிக் நடக்கும் டோகியோ நகரில் அது நிறைவேறக்கூடும். ஆனால், இன்றும் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் தாண்டி ஒவ்வொரு முறையும் புதுப்புது சாம்பியன்களை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார் பசி ஆறாத இந்த மனிதர். அவரின் ரத்தங்களும் அவர் கனவை நனவாக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன.

சிந்து

தங்கம் நகையாக ஒரு பெண்ணை அலங்கரிக்கும்போது ஆராதிக்கப்படுகிறது. அதிசயிக்கப்படுகிறது. அந்த அழகு கொண்டாடப்படுகிறது. ஆனால், வெப்பத்தின் மடியில் அதை உருக்கி, செதுக்கி நகையாக மாற்றும் பொற்கொல்லர்கள் இங்கு கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் கோபிசந்த் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும். தேசம் கொண்டாடிய இரண்டு தங்க மங்கைகளைச் செதுக்கியதற்காக, பல சாம்பியன்களை உருவாக்கியதற்காக, அந்த விளையாட்டுக்கு இங்கிருந்த மரியாதையை பலப்படுத்தியதற்காக அவர் நிச்சயம் கொண்டாடப்படவேண்டும். இந்திய விளையாட்டின் வரலாற்றுப் பக்கத்தில் அவர் பெயர் நிச்சயம் இடம்பெறவேண்டும். இது புதிய இந்தியா... பெயர்கள் எளிதில் மாறும் இந்தியா... ப்ளானிங் கமிஷன் நிதி ஆயோக் ஆனதுபோல், துரோணாச்சாரியார் விருதுக்குப் பெயர் மாற்ற நினைத்தால் கோபிசந்தின் பெயரை நிச்சயம் வைக்கலாம். ஹேப்பி பர்த்டே கோபி...!


டிரெண்டிங் @ விகடன்