ரன்னே கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய லக்மல்... முதல்நாளில் திணறிய இந்திய அணி!

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. 

Photo Credit: BCCI

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் போட்டி கேள்விக்குறியான நிலையில், ஓரளவுக்கு மழை ஓய்ந்ததால் போட்டி மிகவும் தாமதமாகவே தொடங்கியது. 

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், இந்திய அணியைப் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து கே.எல்.ராகுல் அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரரான தவானும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
8 ரன்களில் தவான் வெளியேற, 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதையடுத்து, 11 பந்துகளைச் சந்தித்தும் ரன் கணக்கைத் துவக்காமலேயே கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

11.5 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்தநிலையில், மோசமான வெளிச்சம் காரணமாகப் போட்டி நிறுத்தப்பட்டது. புஜாரா 8 ரன்களிலும் ரஹானே 0 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். இலங்கை அணி தரப்பில்
6 ஓவர்கள் பந்துவீசிய சுரங்கா லக்மல், ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!