வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (17/11/2017)

கடைசி தொடர்பு:16:45 (17/11/2017)

கோப்பையை மீட்குமா சூப்பர் மச்சான்ஸ்... ஐ.எஸ்.எல் அணிகள் ஒரு பார்வை! #LetsFootball #HeroISL

கால்பந்து சீசன் வந்துவிட்டது. கால்பந்து வெறியர்கள் வெறிகொண்டு கிளம்பிவிட்டனர். சென்னை மட்டுமன்றி மொத்த தேசமும் ஐ.எஸ்.எல் (ISL) தொடருக்குத் தயாராகிவிட்டது. எட்டு அணிகள் இப்போது பத்து அணிகளாகிவிட்டது. 2 மாதத் தொடர் இப்போது 5 மாத சீசன் ஆகிவிட்டது. இனி ஐ.எஸ்.எல் தொடரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொடர்களுக்கு சவால் விடும். ஏற்கெனவே 'அட்டெண்டன்ஸ்' விஷயத்தில் ஐரோப்பிய லீக்குகளைப் பின்னுக்குத்தள்ளிவிட்டோம். இனி கால்பந்தின் தரத்திலும் முன்னேற்றம் காண வேண்டும். இன்று இரவு அதற்கான முதல் அடி கொச்சியில் எடுத்துவைக்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், கடந்தமுறை அவர்களிடம் ஃபைனலில் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த முறை எந்த அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. எந்த அணிகள் பலவீனமாக இருக்கின்றன. சென்னையின் FC அணியின் வாய்ப்பு எப்படி இருக்கிறது. ஒரு பார்வை...

ISL

பெங்களூரு FC
ஐ லீக்கில் இருந்து ஐ.எஸ்.எல் தொடருக்கு என்ட்ரி கொடுத்துள்ளது பெங்களூரு அணி. இளமை, அனுபவம் இரண்டும் நிரம்பி வழிகிறது. இந்தியக் கேப்டன் சுனில் சேத்ரிதான் கேப்டன். ஆனால், அவரைத் தாண்டியும் அணியில் ஸ்டார் வீரர்கள் நிறைந்திருப்பது பெங்களூருவை சாம்பியன் ரேஸின் முக்கியப் போட்டியாளராக்குகிறது. ஐ லீக் தொடரில் இணைந்து விளையாடிய வீரர்களே அதிகம் இருப்பதால், வீரர்களின் கெமிஸ்ட்ரி நிச்சயம் அணிக்குப் பிளஸ். மார்க்கீ ப்ளேயர் வேண்டும் என்று மற்ற அணிகள் போல் வயதான வீரர்களை வாங்காததே அணியின் தரத்தைச் சொல்கிறது. பயிற்சியாளர் ஆல்பர்டோ ரோகோ கடந்த ஓராண்டாக அணியுடன் பயணிக்கிறார். வீரர்களை நன்கு அறிந்தவர். கோல்கீப்பராக, இந்திய அணியின் குர்ப்ரீத் சிங் சாந்து இருப்பதுவும் பெரிய பலம். கன்சிஸ்டென்டாக ஆடினால் முதல் சீசனிலேயே கோப்பையை முத்தமிடலாம்.

நட்சத்திர வீரர்கள் : சுனில் சேத்ரி, லென்னி ராட்ரிக்யூஸ்

டெல்லி டைனமோஸ்
முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர் மிஜுவல் ஏஞ்சல் போர்ச்சுகல், டெல்லி அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்தமுறை பட்டையைக் கிளப்பிய மார்சலினோ, கீன் லீவிஸ் இருவரையும் இழந்திருப்பது பெரிய சறுக்கல். ப்ரிதம் கோதல், செனே ரால்டே போன்ற இந்திய வீரர்களை வாங்கிய டெல்லி அணி, சென்டர் டிஃபன்ஸில் சற்று கோட்டை விட்டுள்ளது. நடுகளத்தில் பிரேசில் வீரர் பாலினியோ டயாஸுக்குப் பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. பெரிய அளவில் அனுபவம் இல்லாத வீரர்களை அவர் சிறப்பாக வழிநடத்தவேண்டும். ரோமியோ ஃபெர்னாண்டஸ், காலு உசே போன்றவர்கள் முன்களத்தைப் பலப்படுத்துகின்றனர். வெளிநாட்டு வீரர்களைப் பெயருக்கென்று இல்லாமல், ஓரளவு நல்ல பெர்ஃபார்மர்களை வாங்கியுள்ளது பாராட்டத்தக்கது. கடந்த சீசனைப்போல் ஆதிக்கம் செலுத்த முடியாது. அரையிறுதிக்கு போராடவேண்டும்.

நட்சத்திர வீரர்கள்: காலு உசே, ரோமியோ ஃபெர்னாண்டஸ்

ATK

ATK
அத்லெடிகோ மாட்ரிட் அணியுடனான நட்பு முறிந்தததால், அத்லெடிகோ டி கொல்கத்தா இனிமேல் ATK மட்டுமே. பயிற்சியாளர், கேப்டன், வீரர்கள் என மொத்தமாக மாறியிருக்கிறது. பழைய கொல்கத்தா வீரர்கள் ஐவர் மட்டுமே அணியில் உள்ளதால் டீம் 'செட்' ஆக தாமதம் ஆகலாம். பெரும்பாலான வீரர்கள் ஐ.எஸ்.எல் தொடருக்குப் புதியவர்களாக இருப்பதும் பெரிய மைனஸ். இரண்டு முறை கொல்கத்தா சாம்பியனாகக் காரணம், மிட்ஃபீல்டில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியதுதான். ஐ.எஸ்.எல் வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான போர்ஜா ஓய்வு பெற்றுவிட, புதிய மிட்ஃபீல்டர்கள் பெரிய அனுபவம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். முன்களமும், டிஃபன்ஸும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், நடப்பு சாம்பியனுக்கு இது சவாலான சீசனாகத்தான் இருக்கும். லிவர்பூல் அணியின் ஜாம்பவான் ராபி கீன் 37 வயதில் என்ன சாதிக்க முடியும்? கேப்டன் மெடீரியல் இல்லாததும் மிகப்பெரிய பலவீனம். அரையிறுதி வாய்ப்பு சந்தேகமே.

நட்சத்திர வீரர்கள் : யூஜின் லிங்க்டாஹ், தேப்ஜித் மஜும்தார்.

FC கோவா
3 ஆண்டுகள் அணியை வழிநடத்தியே ஜிகோ விலகிவிட, அவர் இடத்தை நிரப்பியுள்ளார் செர்ஜியோ லொபேரா. வீரர்கள் தேர்வில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு திறமையான இந்திய வீரர்களை இணைத்துள்ளனர். நாராயன் தாஸ், கட்டிமானி, ஹேல்டர் போன்ற வீரர்களின் ஐ.எஸ்.எல் அனுபவம் அணிக்குப் பெரிய ப்ளஸ். ஏற்கெனவே விளையாடிய வீரர்களைத் தக்கவைத்ததிலும் கோவா பாஸ். மானுவேல் லான்சரோடி, ஆட்ரியன் கோலுங்கா போன்ற வீரர்கள் எதிரணி டிஃபன்ஸுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பர். ஆனால், இவர்களது டிஃபன்ஸ் அணியை சற்று பலவீனப்படுத்துகிறது. கோல்கீப்பர் கட்டிமானிக்கு வேலை அதிகம். டிஃபன்ஸ் ஸ்ட்ரைக்கானால் அரையிறுதி வாய்ப்புண்டு.

நட்சத்திர வீரர்கள்: மானுவேல் லான்சரோடி, மானுவேல் அரானா

ஜாம்ஷெட்பூர் FC
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது ஜாம்ஷெட்பூர் FC. அணியில் ஆறே வெளிநாட்டு வீரர்கள்தான். முற்றிலும் இந்திய வீரர்களையே நம்பிக் களம் காண்கிறது. வீரர்கள் தேர்வின்போது முதல் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, முன்கள வீரரை வாங்காமல், டிஃபண்டர் அனாஸ் எடதோடிகாவை தேர்வு செய்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். ATK-வில் சாம்பியன் ஆன டிரி, ராபின் குருங், சௌவிக் கோஷ் என டிஃபன்ஸ் வேற லெவல். மெஹ்தாப் ஹொசைன், சமீக் டௌடி, சௌவிக் சக்ரபோர்த்தி அடங்கிய நடுகளமும் மாஸ். ஃபார்வேர்டுதான் கொஞ்சம் வலுவின்றி தவிக்கிறது. சொல்லுமளவு பெரிய பெயர்கள் இல்லை. ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காபெல், கெர்வென்ஸ் பெல்ஃபோர்டை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அவரும், டௌடியும் கோல்மழை பொழிந்தால் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தலாம்.

நட்சத்திர வீரர்கள்: சமீக் டௌடி, அனாஸ் எடதோடிகா.

Blasters ISL

கேரளா பிளாஸ்டர்ஸ்
23 கோல்கள் அடித்து, ஐ.எஸ்.எல் தொடரின் டாப் கோல்ஸ்கோரராக விளங்கும் இயான் ஹ்யூம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிளாஸ்டர்ஸுக்குத் திரும்பியுள்ளார். அராடா இசுமி, மிலன் சிங், ஜாக்கிசந்த் என்ற பலமான நடுகளத்தைப் பயங்கரமான நடுகளமாக்குகிறார் உள்ளூர் ஹீரோ சி.கே.வினீத். ஹியூம், வினீத் கூட்டணி எதிரணிகளை துவம்சம் செய்யக்கூடும். போதாதென்று மான்செஸ்டர் யுனைடட் அணியின் ஜாம்பவான் பெர்படோவ் வேறு இணைந்துள்ளார். 36 வயதாகிவிட்டதால் அவரிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. கேப்டன் சந்தேஷ் ஜிங்கனைத் தாண்டுவது ஃபார்வேர்டுகளின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். அவரையும், ரினோ ஆன்டோவையும் தவிர்த்து தரமான டிஃபண்டர்களை அடையாளம் காணவேண்டும். இரண்டு முறை ஃபைனலுக்கு முன்னேறிய பிளாஸ்டர்ஸ் இம்முறை சாம்பியன் ஆகக்கூடும். இவர்களின் வெறித்தன ரசிகர்களான 'மஞ்சப்படை'க்கு மாபெரும் விருந்து காத்திருக்கிறது!

நட்சத்திர வீரர்கள்: இயான் ஹ்யூம், சி.கே.வினீத்.

மும்பை சிட்டி
2016 சீசனில் அணியின் தூண்களாக விளங்கிய சுனில் சேத்ரி, டீகோ ஃபோர்லான் இருவருமே இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். பயிற்சியாளர் அலெக்ஸாண்டர் கிமாரஸ் அணியில் தொடர்வது கொஞ்சம் ஆறுதல். அவர் கோஸ்டாரிகா நாட்டைச் சேர்ந்தவர், ஆனால், அணியை முற்றிலுமாக 'இண்டோ - பிரேசிலியன்' டீமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். கோச்சிங் குழு முழுக்கமுழுக்க பிரேசில் நாட்டவர்கள். 5 பிரேசில் வீரர்கள் இருக்கும் மும்பை அணி, பிரேசில் போல் கிளாஸி கேம் ஆடினால் பரவாயில்லை. லூசியன் கோயன், மெஹ்ராஜுதீன் வடூ, ராஜூ கெயக்வாட் ஆகியோர் டிஃபன்ஸை வலுவாக்குகின்றனர். அவர்களுக்குப் பின்னாள் அம்ரிந்தர் சிங் - இரண்டாம் லெவல் ஷீல்டு. பல்வந்த் சிங், செஹ்னாஜ் போன்றவர்கள் அணிக்குப் பலம். அவர்களைத் தாண்டி...? இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தால் மும்பை சாதிக்கும். இல்லையேல், கடினம்.

நட்சத்திர வீரர்கள்: அசில்லே அமானா, அம்ரிந்தர் சிங்

நார்த் ஈஸ்ட் யுனைடட்
இன்னும் ஒருமுறைகூட அரையிறுதிக்குள் நுழைந்திடாத இரண்டு அணிகளில் ஒன்று நார்த் ஈஸ்ட். வடகிழக்கு மாநில வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இவர்களது பாலிசி இன்னும் பலன் தரவில்லை. லால்ரின்டிகா ரால்டே, ரௌலிங் போர்ஜஸ், மார்சினியோ அடங்கிய நடுகளம்தான் அவர்களின் பலம். கோல்கீப்பிங்கில் ரஹ்னேஷ் பலம் சேர்க்கிறார். அவரைத் தவிர நல்ல பேக்-அப் கீப்பர்கள் இல்லை. நிர்மல் சேத்ரி, ரீகன் சிங் ஆகியோர் மட்டுமே ஓரளவு அனுபவமுள்ள டிஃபண்டர்கள். இந்த அணியின் டிஃபன்ஸை உடைப்பது மற்ற அணிகளுக்குப் பெரிய விஷயமாக இருக்காது. முன்களம் இன்னும் பலவீனம். ஹரிசரன் நர்சாரி தவிர்த்து எல்லோரும் புதியவர்கள். இயான் ஹியூம் போன்ற மேட்ச் வின்னர் ஒருவர் கூட இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். இம்முறையும் அரையிறுதி வாய்ப்பு நழுவலாம்.

நட்சத்திர வீரர்கள்: ரௌலிங் போர்ஜஸ், மார்சினியோ.

புனே சிட்டி FC
புனே இந்த முறை பக்கா ப்ளானுடன் களம் காண்கிறது. அண்டர் 18 அணி, பெண்கள் அணியெல்லாம் உருவாக்கி பிரீமியர் லீக் டீம் போல் மெர்சல் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டு, டெல்லி அணியில் பட்டையைக் கிளப்பிய கீன் லீவிஸ் - மார்சலீனோ கூட்டணி இப்போது புனேவில் கைகோத்துள்ளது. இவர்களோடு ஸ்ட்ரைக்கர் அல்ஃபேரோவும் இணைந்துள்ளதால் புனேவின் முன்களம் மாஸாக இருக்கிறது. ஜெவல் ராஜா, மார்கோஸ் டேபார் இணை நடுகளத்தை பலமாக்குகிறது. லால்சுன்மாவியா, ரஃபா லோபஸ் தவிர்த்து, மற்ற டிஃபண்டர்களிடம் கன்சிஸ்டென்ஸி இருப்பது கடினமே. அணியின் மிகப்பெரிய மைனஸ் கோல்கீப்பிங். மூவரும் அனுபவமற்றவர்களாக இருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஷால் கெய்த் சோபித்தால் முதல்முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்துவைக்கலாம்.

நட்சத்திர வீரர்கள்: கீன் லீவிஸ், மார்சலீனோ 

சென்னையின் FC

 

ISL


சூப்பர் மச்சான்ஸ் இந்தமுறை பேலன்ஸான டீமாக களம் காண்கிறார்கள். மடராசி இல்லை, மார்க்கீ வீரர் இல்லை, ஆனால், சென்னையின் FC பலமாக இருக்கிறது. வெளிநாட்டு வீரர்களை மட்டும் நம்பியிருக்காமல், இந்திய வீரர்களை மையமாக வைத்தே அணி உருவாக்கப்பட்டுள்ளது. போன சீசனில் ஜெர்ரி போன்றோர் வெளிச்சத்துக்கு வர இந்த அப்ரோச்தான் காரணம்.  ATK அணியில் சாம்பியனான ஹென்ரிக் செரேனோதான் அணியின் கேப்டன். தனசந்த்ரா, கீனன் அல்மெய்டா, ஜெர்ரி ஆகியோர் அவரோடு இணைந்து பின்வரிசையை பலமாக்கியுள்ளனர். கடந்த சீசனில் சென்னை வீரர்களின் ஃபேவரிட் ப்ளேயர் ரஃபேல் அகஸ்டோ மீண்டும் அசரடிக்கக் காத்திருக்கிறார். அவரோடு இணைந்து நடுகளத்தில் கலக்க தமிழக வீரர் தனபால் கனேஷும் ரெடி. அவர்கள் தவிர்த்து இந்திய வீரர்கள் ஜெர்மன்ப்ரீத் சிங், தாய் சிங் போன்றோர் நடுகளத்தை இன்னும் பலமாக்குகின்றனர். 

ISL

எதிரணியின் கோல்போஸ்டை சிதறடிக்க 'ஸ்னைப்பர்' ஜீஜே வெயிட்டிங். ஜூட், க்ரகரி நெல்சன் ஆகியோர் முன்களத்தில் அவருக்குப் பக்கபலம். இனிகோ கால்டிரோன், ஜாமி காவிலான் போன்ற அனுபவ வீரர்களும் அனிருத் தாபா, போரிங்டோ போடோ போன்ற இளம் வீரர்களும் நிறைந்திருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். அணியின் மைனஸ் என்று பார்த்தால் கோல்கீப்பிங் மட்டும். கரன்ஜித் சிங், அடுத்த லெவலை அடைய வேண்டும். பயிற்சியாளர் ஜான் க்ரகரி, முன்னாள் பிரீமியர் லீக் பயிற்சியாளர். இன்றைய இங்கிலாந்து தேசிய அணியின் மேனேஜரான கேரத் சவுத்கேட்டுக்கே மேனஜராக இருந்தவர். வித்தைக்காரர், ஆனால், பயங்கர ஸ்ட்ரிக்ட். அதனால்  வீரர்களின் பெஸ்ட் ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்துவிடுவார். மாடரசி இல்லாத குறையைப் போக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் போக்கினால் அரையிறுதி நிச்சயம்!

நட்சத்திர வீரர்கள்: ஜீஜே, ரஃபேல் அகஸ்டோ


டிரெண்டிங் @ விகடன்