Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கங்குலி, தோனி, கோலியெல்லாம் கொண்டாடலாம்... ஆனா, விதை கபில் தேவ் போட்டது! #WhyKapilIsLegend #NeverMiss

கபில் தேவ் என்ற வார்த்தையை எவரேனும் தப்பித்தவறி உச்சரித்து விட்டால், அங்கிருந்து கபில் குறித்த நினைவுகள் மலரத் தொடங்கிவிடும் என்பதற்கு சென்ற வார, ட்விட்டர் ட்ரெண்டிங் ஒரு உதாரணம்... ஏனெனில், அந்தப் பெயரின்  வசீகரம் அப்படி!

கபில் தேவ்

கபில் தேவ், என்றதும் பழங்கதை என்று நினைத்துவிடாதீர்கள். இன்று, புதுமை, இளமை, வேகம் என ஓடிக்கொண்டிருக்கும் T-20 என்ற வடிவத்தை முதன்முதலில் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என ஆரம்பித்து வைத்தது கபில் தேவ்தான். இன்று எல்லா உறுப்பையும் யார் யாரோ தானம் செய்கிறார்கள். ஆனால், விதை, ஹித்தேந்திரன் என்ற இளைஞனின் இதய தானமே. அதுபோலத்தான், இன்று இந்திய கிர்க்கெட் என்பது ஒரு சாம்ராஜ்யம் போல் பரந்து விரவி இருக்கிறது எனில் அதன் முதல் சக்கரவர்த்தி, கபில் தேவ் எனும் சாமன்யன் சமரன்.

கபில் தேவ் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தன் வயதை மறந்து தன்னை இளைஞனாய் பாவித்துக்கொண்டு கண்கள் விரிய, “அப்பிடியே பேக்ல ஓடிப்போய் பிடிச்சாரு பாரு, க்க்க்ளாஸ், ரிச்சட்ஸ் செத்துட்டார்” என மருகும் பெருசுகளை நீங்கள் இப்போதும் கடக்க நேரிடும். கபில் என்றால் அப்படி ஓர் வசீகரம். ஏன்?

70-கள் வாக்கில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்! பந்தின் சைனிங் போவதற்காக ‘சும்மா’ நாலு ஓவர் தரையில் போடுவது’ கணக்குதான் அது. அதாவது சுழல் சிங்கங்கள் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு காத்திருக்கும் வைபவம் மட்டுமே வேகப்பந்து வீச்சு என்பது.

மதன்லாலாவது திப்பிடி திப்பிடி எனத் தலை தெறிக்க ஓடிவந்து ஆஃப் ஸ்பின் போடுவார். மொஹிந்தர் அமர்நாத் எல்லாம் ஓடிவருகிறாரா, நடந்து வருகிறாரா என பேட்ஸ்மேன் மண்டைகாய்ந்து நிற்பார். அவர்தான் அப்படி என்றால் அவர் எறிந்த பந்து இந்தப் பக்கம் வருவதற்குள் ஒரு டீ சொல்லி சாப்பிட்டுவிடலாம் ரேஞ்சு. இதில் கொடுமை என்னவென்றால், மற்ற நாடுகள் கேலி செய்யுமே என்ற எண்ணத்தில் விக்கெட் கீப்பரும் அவ்வளவு தள்ளி நிற்பார் பாருங்கள். பந்து நாலைந்து முறை பிட்ச்சாகி கீப்பரை அடையும். பந்தைப் பொறுத்தவரை அது ஒரு ‘நீண்ட நெடும் பயணம்’ வகை.

கபில் தேவ்

இந்தியக் கிரிக்கெட்டின் ஆரம்பம் முதலே சுழல்பந்துதான் ஆதிக்கம். ஸ்ரீனிவாச வெங்கட்ராகவன் என்பவரின் கை மணிக்கட்டின் மூட்டே மொத்தமாய்ச் சுழலும் என்பார்கள். அதை உபயோகித்து சுழற்றோ சுழற்று என்று சுழலவிட்டுவிடுவார். பிஷன்சிங் பேடி ஸ்லோ மீடியம் என மெதுவான, மிக மெதுவான அடைமொழிகளைப் போட்டுக்கொண்ட பவுலர். இப்படியான ஒரு பிசுபிசுத்த வேகப்பந்து வீச்சுக் கட்டத்தில்தான் காலம் ஒரு பெயரை உச்சரித்தது, கபில்தேவ், என. அதன் பிறகு கபில்தேவின் காலகட்டம் என்றானது.

கர்சன் காவ்ரியும் கபில்தேவும் இரட்டைக்குழல் துப்பாக்கித் தோட்டாக்கள் போல் குனிந்து சீறத் தொடங்கியபோது உலகம் இந்தியப் பந்துவீச்சை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியது. எழுபதுகளின் இறுதியில் அணியில் நுழைந்தவர், 80 களில் இந்தியர்களின் இதயத்தில் நுழைந்தார். ஆரம்பத்தில் சொன்னதுபோல் இன்றைய எல்லாவற்றின் முதன்முதல்களும் கபில்தேவ் சாத்தியப்படுத்தி போட்டுக்கொடுத்த பாதை. கருவேலம் முட்களை முறித்துக் குடைந்து பாதை செய்து கொடுத்துவிட்டுப் போன ஆதிகாலத்தின் அசல் நாயகன் கபில்தேவ். அந்தப் பாதையை கங்குலி அகலப்படுத்தினார் என்றால் தோனி விரிவுபடுத்தினார் என்றாகலாம்.

ஆனால், ஒரு சாமன்யன், பேசவே கூச்சப்படும், திறமையைத் தவிர காலணா கையில் இல்லாத, பின்தங்கிய கிராமத்து இளைஞன், திறமையும் முயற்சியும் இருந்தால் இந்திய அணியில் இடம்பெறலாம், அதற்கு தலைமையும் ஏற்கலாம், உலகமே வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்த உலகக் கோப்பையையே தன் நாட்டுக்காக வாங்கித்தரலாம் என்ற நிகழ்வுகளுக்கு முன் முதல் உதாரணம் கபில்தேவ்.

கபில் தேவ்

கபில்தேவிற்கு முன்னர், அணியில் ஒருவர் பேட்ஸ்மேன் என்றால் அவர் பேட்ஸ்மேன்தான். அதாவது அந்த சார்வாள், அவரைக் கடந்து போகும் பந்தைப் பிடிக்கமாட்டார். கொஞ்ச தூரம் ஓடிச் சென்று பவுண்ட்ரி லைனுக்கு முன்னர் ஸ்டைலாக நின்று, பார்வையாளார்களிடம் இருந்து பந்தை வாங்கிக்கொண்டு போவார்கள். ஏனெனில், பேட்ஸ்மேன்கள் எதற்கு ஃபீல்டிங் செய்ய வேண்டும் எனும் எண்ணம்தான். போலவே, பவுலர்கள் அல்லது அப்படியாக சொல்லப்பட்டவர்கள், பவுலிங் முடிந்ததும் வீட்டிற்குப் போய்விடுவார்களோ என்ற நிலை. மணிந்தர் சிங் வரை, ஏதேனும் ஆட்டத்தில் வேறு வழி இல்லாமல் பேட்டிங்கிற்கு இறங்கும் நிலை வந்தால், ஏதோ உலகின் ஆகப்பெரிய பாவத்தை செய்யச் சொன்னதுபோன்ற முகபாவத்தில், பந்தை பார்த்து ஓடுவதும், குனிவதும் அழுவதும் என, நாங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களிடம் ஏன் மட்டையைத் தருகிறீர்கள் ரீதியில் நடப்பார்கள்.

இதை மாற்றியதும் கபில்தேவ்தான். ஆம். கபில்தேவ்தான் இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஆல் ரவுண்டர். கவாஸ்கர், வடேகர், குண்டப்பா விஸ்வநாத், கோபால் போஸ் என பேட்டிங் என்றாலே சூத்திரம் சார்ந்த ஒன்று, இப்படி வந்தால் அப்படித் தொடவேண்டும் என்ற ரீதியில் புத்தக அடிப்படையில் இருந்ததை போர்வீரனைப் போல் மாற்றிக்காட்டினார். “இருப்பா, கபில் வந்து ரெண்டு காட்டு காட்டுவான்” என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். தடவும் ஆட்கள் எப்போது அவுட் ஆவார்கள் என இந்திய ரசிகர்களே விரும்ப ஆரம்பித்தார்கள்.

கபில் தேவ்

கபில் தேவை சமரன் வீரன் எனத் தொடர்ந்து குறிப்பிடக் காரணம் இருக்கிறது. ஜிம்பாபேவுடனான போட்டியில் அவர் அடித்த 175 ரன்கள் என்பது ஏன் சாதாரணமானது அல்ல எனில், மறுமுனையில் பந்தைப் பார்த்தாலே பயந்து ஓடும் மட்டைவீரர்களை வைத்துக்கொண்டு, ஆனாலும், அசராமல் களத்தில் முன் நின்று சண்டையிடும் படைத்தலைவன் போல் அன்று நின்றதே. கபில்தேவ் அடித்த ஒரே சதம் அதுதான். ஆனால் ஒரு கேப்டன், சதம் எப்படி எப்போது அடிக்க வேண்டும் என்பதன் ஒரு சோறு பதம், அந்த ஒரு சதம்.

இந்த போர்க்குணம்தான் உலகக் கோப்பையும் முதன்முதலில் நமக்குப் பெற்றுத் தந்தது. 183 ரன்களில் ஆல் அவுட் என்றதும் மேற்கிந்திய வீரர்கள் மதியமே பார்ட்டி மூடுக்குப் போய்விட்டார்களாம். இடைவேளையில் கபில்தேவ் வீரர்களிடம் பேசியது, வெறுத்துப் போய் ஊர் திரும்ப நினைத்த வீர்ரகள் முன்னர் பாபர் நிகழ்த்திய உரை போன்று இருந்திருக்கக் கூடும் என்பார்கள். பேசியதைப் போலவே, களத்திலும் செய்து காட்டினார். விவியன் ரிச்சட்ஸ் எனும் ராட்சசன் அடித்த பந்தை பின்னோக்கி ஓடிப் போய் பிடித்த கபில்தேவ் உண்மையில் கையில் பிடித்தது உலகக் கோப்பையைத்தான். ஆம், அந்தக் கேட்சை கபில் பிடித்தது மட்டுமே கோப்பைக்கான முதன்மைக் காரணம் என்பதை கிரிக்கெட் அறிந்தோர் அறிவர்.

கபில் தேவ்

கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களின் கேம் என்றோர் கூற்று உண்டு. அதை உடைத்த பெருமையும் கபில்தேவையே சாரும்.
இடது கையை ஒரு கத்தி போல் மார்பில் வைத்து காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடும் கம்பீரம், ஸ்டெம்பின் உயரத்திற்கு தாவி பந்தை ரிலீஸ் செய்யும் நேர்த்தி. விக்கெட் எடுத்ததும் அலட்டாமல் வலது கையை உதறிச் சிரிக்கும் பாங்கு என கபில்தேவை மெள்ள ஆராதிக்கத் தொடங்கினர் ரசிகர்கள்.

இன்று ஆயிரம் கோடி லட்சம் கோடி என விளம்பரங்களில் கொழிக்கிறார்கள் வீரர்கள். இதற்கும் ஆரம்பப் புள்ளி கபில்தேவின் “பாவோலிவ் கா ஜவாப் நஹி” எனும் கபிலின் கொச்சையான ஹிந்திக் குரல்தான். இன்று எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றை போகிற போக்கில் எவரேனும் முறியடிக்கிறார்கள். ஆனால், உலகமே உற்றுப் பார்த்து கொண்டாடிய தருணம் எனில் அது கபில்தேவ் ரிச்சர்ட் ஹாட்லியின் 434 என்ற சாதனையை முறியடித்த நொடிகள்தான். கபில்தேவ் எனும் ஆளுமையின் அடர்த்தி அப்படி.

இந்திய அணிக்குள் இருந்த அத்தனை அரசியலையும் தன் சாந்தமான அணுகுமுறையால் கையாண்டு, முன்னேறினார் கபில்தேவ்.
டெட்லி காம்பினேசன் எனச் சொல்லப்படும் நிதானம், மூர்க்கம் இரண்டும் சரிவிகித்ததில் அமையப் பெற்றவர் கபில். தன்னலமற்ற, அணியின் வெற்றி என்பதை மட்டுமே இலக்காக இறுதிவரை கொண்டவர் என்பதே கபில்தேவின் சிறப்பு.

கபில் தேவ்

இந்தியப் பந்துவீச்சாளர்களாலும் பந்தை ஷார்ப்பாக ஸ்விங் செய்ய முடியும் என்று நிகழ்த்திக் காட்டியவர். எதிரணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை முதல் ஓரிரு ஓவர்களிலேயே உடைத்துவிடுபவர். கபில்தேவ் எல் பி டபுள்யூ க்ளைம் செய்தார் எனில் 99% அம்பயர் கையைத் தூக்கிவிடுவார். அவ்வளவு துல்லியம். இலக்கு நோக்கி எய்வதில் வல்லவர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னை மதிக்காக வாரியம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என அனைத்தையும் புன்சிரிப்போடு எதிர்கொண்டு வாகை சூடியவர்.

பவுலிங்கின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்தவர் என்றாலும் மனோஜ் பிராபகரின் ஒரு பந்தைப் பார்த்துவிட்டு உடனே அவரிடம் ஓடிச்சென்று, ‘அந்தப் பந்தை எப்படிப் போட்ட’ என ஆர்வமாய்க் கேட்டு, பழகிக் கொண்டவர். ‘மனோஜிடம் இருந்துதான் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய கற்றுக்கொண்டேன்’  என அதைப் பதியவும் செய்தார். தன் அந்திமக் காலத்தில், தன் மீது எழுந்த அநியாயக் குற்றச் சாட்டை சுமந்து அதுகுறித்து விளக்கும்போது அவர் சிந்திய கண்ணீர், இந்திய விளையாட்டுத் துறையின் பெரும் சாபம்.

கபில் போன்ற வெகுளியான வெள்ளந்தி மனிதனின் வெற்றி என்பது எளிய மனிதர்களின் வெற்றி என்றே வரலாற்றில் இடம்பெறும்.
போலவே, கபில் தேவ் எனும் பெயருக்குக் கம்பீரம் என்றும் பொருள் கொள்ளப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement