இரண்டாம் நாளும் 'மழை' விளையாடியது..! இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறல்

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றும் மழையால் பாதிக்கப்பட்டது.

புஜாரா

Photo Credit: BCCI


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளான நேற்று போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்திய அணி 17 ரன்களுக்கு ராகுல், தவான், கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் 6 ஓவர்கள் பந்து வீசி ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நேற்றையைப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று முன்கூட்டியே காலை 9.15 மணிக்கு போட்டித் தொடங்கியது. புஜாரா, ரஹானே ஆகியோர் களம் இறங்கினார்கள். இன்றும் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். ரஹானே, அஸ்வின் தலா 4 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர். புஜாரா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். இடையிடையே மழை குறுக்கீடு செய்தது. 11 மணியளவில் கனமழை பெய்தது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது 32.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 47 ரன்னுடனும் சாஹா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கனமழையால் மைதானத்தின் ஈரப்பதம் குறையாததால், இன்றைய ஆட்டம் நிறுத்தப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரண்டு நாள்களில் மொத்தம் 32.5 ஓவர்களே வீசப்பட்டுள்ளன. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆட்டத்தில் முடிவு கிட்டாமல் போக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!