வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (17/11/2017)

கடைசி தொடர்பு:19:14 (17/11/2017)

‘‘நடக்க முடியாததில் வருத்தமில்லை; நீந்துவது பிடித்திருக்கிறது!’’ - பாராஅத்லெட் மாதவி லதா

“ஆறு மாதம்தான் ஆயுள்காலம். அதன்பிறகு காப்பாற்றுவது கடினம்” என, தன்னை பரிசோதித்த மருத்துவர், துணை மருத்துவரிடம் உரையாடுவதைக் கேட்டார் அந்த 30 வயது பெண். ஆனால், தன்னம்பிக்கையை கைவிடவில்லை. மன உறுதியோடு போராடினார். நீச்சல், கூடைப்பந்து போட்டிகளில் கவனம் செலுத்தினார். பதக்கங்களை அள்ளினார். இன்று அவர் `யெஸ்... வி டூ கேன்' (yes we too can) எனும் அமைப்பின் நிறுவனர்; இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பின் (WBFI - Wheelchair Basketball Federation of India) முதல்வர். 

பிறந்த ஏழே மாதங்களில் போலியோவால் பாதிக்கப்பட்ட மாதவி லதாவுக்கு முற்றிலும் பக்கபலமாக இருந்தது அவரின் பெற்றோர். இன்று படப்படப் பட்டாம்பூச்சியாகப் பறந்துகொண்டிருக்கும் மாதவி, அவதார் குழுமம் மற்றும் வொர்கிங் மதர் மீடியா (Working Mother Media) இணைந்து நடத்திய சிறந்த மகளிர் நிறுவனத்துக்கான விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன் பகிர்ந்துகொண்ட சில மணித்துளிகள் உற்சாகத்தின் உச்சக்கட்டம். “என்னிடம் தோல்வியும் தோற்கும்” என்று கர்வமாகச் சொல்லும் மாதவி லதாவின் வாழ்க்கைப் பதிவு.

தெலங்கானா மாநிலத்தில் பிறந்து, பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்த மாதவி, ஹைதராபாத் வங்கி ஊழியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். 80 சதவிகிதம் உடல் போலியோவால் பாதிக்கப்பட்டதால், 37-வது வயதில் மாதவியின் வாழ்க்கைப் பயணம் முடிந்துவிடும் எனக் கணிக்கப்பட்டது. கண்களில் நீரோடும் கனத்த மனதோடும் ``இந்த நிலைமையை எதிர்கொள்ள ஏதேனும் வழிகள் உண்டா?'' என மருத்துவரிடம் கேட்டபோது, ``ஹைட்ரொதெரபி (hydrotherapy) மூலம் முயற்சி செய்துபார்க்கலாம்" எனக் கூறியதும், விரைந்து சென்றார் தன் வாழ்வைப் புரட்டிப்போடும் நீச்சல்குளத்துக்கு. தன் செயலிழந்த கால்கள் நீரில் அசைவதைக் கண்ட மாதவிக்கு உற்சாகம் கூடியது. நேரம் போவதுகூடத் தெரியாமல் நீச்சலில் மூழ்கிவிட்டார். அந்த உற்சாகம்தான் இன்று அவரை உலகறியச் செய்திருக்கிறது.

2010-ம் ஆண்டில் ஏராளமான போட்டியாளர்களைக்கொண்ட `கார்ப்பரேட் ஒலிம்பியாட்' எனும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒரே மாற்றுத்திறனாளி மாதவி. தனது அசாதாரண முயற்சியால் `சிறந்த ஊக்குவிப்பாளர்' என்ற விருதைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றார். வெண்கலம் முதல் தங்கம் வரை அனைத்து மெடல்களையும் தன்வசப்படுத்தினார்.

மாதவி லதா

“ஐ லவ் வாட்டர்” என்று சிரிக்கும் மாதவியின் உற்சாக வார்த்தைகள் இனி...

“சின்ன வயசுல இருந்தே நீச்சல் என்றால் எனக்கு கொள்ள ப்ரியம். ஆனா, என் பெற்றோருக்கு பயம். படிப்பு, வேலை என சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டிருந்தேன். சூழ்நிலை மாறியது. ஒருகட்டத்தில் என் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. அதை எதிர்கொள்வதற்கு `ஹைட்ரொ தெரபி' அவசியம் என மருத்துவர் கூற, என் இரு கால்களும் நாற்காலியைவிட்டு நீரில் இறங்கியது. நீரில் என் உடல் எடை குறைந்து கால்கள் அசைந்தன. அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்த அந்தத் தருணம் என் நினைவிலிருந்து என்றுமே அழியாது. இதுவே தினமும் நீச்சல்குளத்துக்கு என்னை இழுத்துச் சென்றது. பிறகு பல போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பயந்த என் பெற்றோரும் என்னுடனே பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். என்னுடைய உடல்நிலையை நினைத்து ஒருவகையில் மகிழ்ந்தேன். ஏனெனில், இந்தக் குறை இல்லாமல்போயிருந்தால் சாதாரணப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பேன். இப்போது நீரில் இருப்பதற்கே மிகவும் பிடித்திருக்கிறது" என்று புன்னகைக்கிறார்.

ஆனந்த நொடிகளை நினைவில்கொண்டு மீண்டும் தொடங்கினார், “என்னைப்போல் பல திறமையாளர்கள் நாடெங்கும் இருக்கிறார்கள். ஆனால், விழிப்புஉணர்வு ஏதுமில்லாமல் தங்களின் வாழ்க்கையை சிறு வட்டத்துக்குள் முடித்துவிடுகிறார்கள். 40 வயதைத் தொடவிருக்கும் என்னால், தன்னம்பிக்கையுடன் போராடி வெல்லும்போது, நிச்சயமா அடுத்த தலைமுறையினரால் முடியாதது ஏதுமில்லை. சாதிக்கத் துடிக்கும் அனைவரையும் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்ததுதான்  `யெஸ் வி டூ கேன்' (yes we too can) அமைப்பு. என்னைப்போல் இருக்கும் பல திறமையாளர்களைச் சந்தித்தது, எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. பல கிராமங்களிலிருந்து தற்போது திறமையாளர்கள் குவிந்துகொண்டிருக்கிறார்கள். ஒருமுறை கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊக்குவித்தது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது" என்று பூரிக்கிறார்.

மாதவி லதாவிற்கு  wheelchair basketball

“முயற்சிப்படிகளைக் கடப்பதற்கான தடைகள் ஏராளம்” என்று முற்பாதைகளை விவரிக்க ஆரம்பித்தார் மாதவி. “பொதுப்பிரிவுப் போட்டிகளைவிட மாற்றுத்திறனாளிகளுக்கானப் போட்டிகளை ஏற்பாடு செய்வது மிகவும் கடினம். எங்களுக்கான போக்குவரத்து வசதிகள், தங்கும் விடுதிகள், கழிவறைகள் என எல்லா வகைகளிலும் எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட சதவிகிதம் மிகக் குறைவு. இந்த நிலைமை மாற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் என எங்களை ஒதுக்கிவிடக் கூடாது. `ஈக்விட்டி' அவசியம். எங்களையும் சமமாக நடத்த வேண்டும். சமநிலை வந்தாலே பல திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஊனமுற்றவர்களின் ஆழ்மனதில் இருக்கும் `முடியாது' என்ற எண்ணமும் பயமும் நீங்க வேண்டும். சாதிக்கத் துடிக்கும் எத்தனையோ திறமையாளர்கள் உள்ளனர். அவர்களை ஒடுக்கிவிடக் கூடாது" என, கோவம் கலந்த வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.

“தற்போது 14  மாநிலங்களில் செயல்பட்டுவரும் WBFI அமைப்பை, மீதம் உள்ள 15 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களிலும் நிறுவி, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் திறமையையும் வெளிக்கொண்டுவந்து பாராலிம்பிக்ஸ், ஆசியப் போட்டிகள் என அத்தனை போட்டிகளிலும் இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கான முயற்சியைத் தொடர்வேன்" என்று நெகிழ்ந்தார் மாதவி.


டிரெண்டிங் @ விகடன்