Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியக் கால்பந்தில் ஐ.எஸ்.எல் பங்கு என்ன... ஐந்து மாதம் நடப்பதால் என்ன பலன்? #ISL

Chennai: 

சென்னை நேரு மைதானத்தின் இருக்கைகள் தூசு தட்டப்பட்டுவிட்டது. எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறது பிராக்டீஸ் மைதானமான நேரு பார்க். ஹயாட் ஹோட்டலில் எங்கெங்கும் சென்னையின் எஃப்.சி கிளப் ஜெர்ஸிகள். ஓராண்டுக்குப் பின் சந்திக்கின்றனர் இரு கால்பந்து நிருபர்கள். ஆம், ஐ.எஸ்.எல் (ISL) வந்து விட்டது. நான்காவது சீசன். ஜாம்ஷெட்புர், பெங்களூரு எப்.சி என இரு புது அணிகள். ஆக, இந்தமுறை மொத்தம் பத்து அணிகள். இதுவரை பத்து வாரங்கள் மட்டுமே நடந்த சீசன் இப்போது ஐந்து மாதங்கள் நீள்கிறது. 2014 சீசனில் 70 நாள்களில் 61 போட்டிகள். அடுத்த  இரண்டு சீசன்களில் 79 நாள்களில் 61 போட்டிகள். ஆனால், இந்த முறை அப்படி அல்ல. 108 நாள்களில் 90 போட்டிகள். பிளே ஆஃப் இரு வாரங்கள் நடப்பது கணக்கில் சேராது. வீக் எண்ட் மட்டுமே அதிக மேட்ச் நடக்கும். கிட்டத்தட்ட இங்கிலீஷ் பிரீமியர் லீக் போல, ஸ்பெயினில் நடக்கும் லா லிகா போல...

ISL

ஒரு வழியாக இந்தியன் சூப்பர் லீக் (ISL), லீக் என்பதன் வடிவத்தை எட்டியுள்ளது. முற்றிலுமாக இல்லை. ஏனெனில், இன்னும் லீக் ஃபார்மட்டுக்குப் பொருந்தாத அரையிறுதி, ஃபைனல் என்ற நடைமுறை எல்லாம் இருக்கிறது. மற்றபடி, களத்தில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைத்திருப்பதும், எந்நேரமும் ஆறு இந்திய வீரர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதும் பாராட்டுக்குரியது. சென்னையின் எஃப்.சி போன்ற கிளப்கள் மார்க்கீ பிளேயர் என, ஃபீல்ட் அவுட்டான மொக்கை வெளிநாட்டு வீரர்களுக்கு லட்சங்களை செலவழிக்கவில்லை என்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் மற்ற கிளப்களும் சென்னையைப் பின்தொடரலாம். பிளேயர்களுக்கு மட்டுமல்லாது, அவர்கள் குடும்பத்தினரும் இந்தியாவில் மூன்று மாதம் இன்பச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கலாம்.

கடந்த முறை கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப்பை ஃபைனல் வரை கொண்டு சென்ற பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பெல், "இந்திய கால்பந்து அணி, FIFA தரவரிசையில் முன்னேற்றம் அடைய ஐ.எஸ்.எல்-தான் காரணம்’’ என்றார். அவர் சொல்வது ஒரு வகையில் உண்மை. இந்தமுறை அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜாம்ஷெட்புர் அணியில், ஏகப்பட்ட இந்திய முகங்கள். பெங்களூரு எஃப்.சி கிளப் ஐ-லீக்கில் இருந்து நேரடியாக ஐ.எஸ்.எல் தொடருக்கு ஷிஃப்டாகி இருப்பதும் இந்தியக் கால்பந்துக்கு நல்லது. ஏனெனில், கிளப் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் அவர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. பெங்களூரு எஃப்.சி-யில்தான் சுனில் சேத்ரி, குர்ப்ரீத் சிங் சந்து போன்ற சீனியர் வீரர்கள் உள்ளனர். 

ISL

இந்தமுறை ஐ.எஸ்.எல் சாம்பியன் பட்டம் வெல்லும் கிளப், ஏ.எஃப்.சி கோப்பையில் விளையாடத் தகுதிபெறும். இதன் மூலம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், ஆசிய அளவிலான கிளப்களுடன் போட்டிபோட வாய்ப்பு கிடைக்கும். அப்படி மோதும்போது இங்குள்ள கிளப் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். எல்லா அணிகளும் ஏ.எஃப்.சி கோப்பையில் விளையாடத் துடிக்கும். அதற்கு அவர்கள் முதலில் ஐ.எஸ்.எல் சாம்பியனாக வேண்டும். முன்பாவது எட்டு அணிகள். இந்தமுறை பத்து அணிகள் என்பதால், முதல் நான்கு இடங்கள் பிடிப்பதற்கே போட்டாபோட்டி இருக்கும். ஆக, ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு புள்ளியும் முக்கியத்துவம் பெறும். 

லீக் நடக்கும் காலம் அதிகரிப்பதால் பொருளாதார ரீதியாகவும் கிளப்களுக்கு நல்ல வருமானம். பிளேயிங் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கான செலவும் பெருவாரியாகக் குறைந்துள்ளது. முந்தைய சீசன்களில், மார்க்கீ வீரர் எனப்படும் ஓய்வுபெற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து கைகளைச் சுட்டுக் கொண்ட ஒரு கிளப் உரிமையாளர், இந்த முடிவை வரவேற்றுள்ளார். "சட்டையை முழுதாகக் கழற்றிவிடுவதை விட, அதில் சின்ன ஓட்டை இருந்தால் பரவாயில்லை’’ என்றார். அந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார். 

ISL

ஐ.எஸ்.எல் தொடரைப் பொறுத்தவரை, ஒளிபரப்பு உரிமம் மூலம் 45 சதவீதம், டிக்கெட் மூலம் 15 சதவீதம், ஸ்பான்சர்கள் மூலம் 40 சதவீதம் கிளப்களுக்கு வருமானம் கிடைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளப்களுக்கு ஸ்பான்சர் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையின் எஃப்.சி போல, மும்பை அணியும் மார்க்கீ பிளேயருக்குச் செலவழிக்காமல், வெளிநாட்டு வீரர்களின் சம்பளம் மூலம் ஏற்படும் செலவைக் குறைத்துள்ளது. போட்டிகள் வீக் எண்டில் மட்டும் என்பதால் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகம். இந்த வருமானம் இந்திய வீரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம்.

அடுத்து வீரர்கள்....புதன்கிழமையன்று மியான்மர் அணியுடன் இந்திய தேசிய அணி, ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடியது. ஜீஜே கோல் அடித்ததும் ரசிகர்கள் அவரது ஸ்டைலில் கைகளை உயர்த்திக் கொண்டாடினர். பைசுங் பூட்டியாவும், சுனில் சேத்ரியும் மட்டுமே தெரிந்த இந்திய ரசிகர்களுக்கு ஜீஜேவை அறிமுகப்படுத்தியது ஐ.எஸ்.எல்தான். அந்த அங்கீகாரமே அவரை இந்த இரண்டு ஆண்டுகளில் சூப்பர் ஸ்ட்ரைக்கராக, சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. தடுப்பாட்டக்காரர்கள் சந்தேஷ் ஜிங்கன், பிரதம் கோதல் என அனைவரையும் மைதானத்தில் உற்சாகப்படுத்துகின்றனர் ரசிகர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய அணி எங்கு, எந்தப் போட்டியில் விளையாடுகிறது என்பது பல மீடியாக்காரர்களுக்குத் தெரியாது. ஆனால், இன்று அவர்கள் ஆடும் போட்டி ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மைதானத்தில் ரசிகர்கள் பேனர் பிடித்து அமர்ந்திருக்கின்றனர். இந்திய உடையணிந்து ஆடும் வீரனுக்கு அதைவிட என்ன வேண்டும்!

ISL

இந்த அங்கீகாரம் மட்டுமே ஐ.எஸ்.எல் தொடரின் வெற்றி அல்ல. இளம் வீரர்களை அடையாளம் கண்ட வகையிலும் இந்திய அணிக்கு, இந்தத் தொடர் ஒரு சப்போர்டாக இருந்துள்ளது. போன சீசனில் சென்னையின் FC சோபிக்காத நிலையிலும், அசத்தல் ஹீரோவாக உருவெடுத்தார் டிஃபண்டர் ஜெர்ரி. அவர் மட்டுமல்ல, கீன் லீவிஸ்,  ஜிங்கன் எனப் பல்வேறு வீரர்களை லைம்லைட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இளம் வீரர்களை மெருகேற்றவேண்டும் என்ற நோக்கோடு, ஒவ்வோர் அணியும் குறைந்தபடசம் 2 'டெவலப்மென்ட் ' வீரர்களாவது இருக்கவேண்டும் என்ற விதியை அமல்படுத்தியுள்ளனர். அனிருத் தாபா, பொடோ போன்ற வீரர்கள் அடுத்த கட்டத்துக்குப் பயணிக்க, இந்தத் தொடர் மிகச்சிறந்த தளம்.

அணிகளின் கட்டமைப்பும் மாறியுள்ளது. எல்லா அணிகளும் அகாடமிகளை ஏற்படுத்தியுள்ளனர். கிராஸ்ரூட் லெவலிலிருந்து கால்பந்தை கற்றுக்கொடுப்பதுதான் எதிர்காலத்தில் இந்திய அணி ஜொலிப்பதற்கான ஒரே வழி. பெங்களூரு FC அணி, மற்ற ஐ.எஸ்.எல் அணிகளுக்கு முன்பாகவே அகாடமி அமைத்து அசத்தி வருகிறது. புனே அணி இன்னும் ஒரு படி மேலே போய் 18 வயதுக்குட்பட்டோர் அணி, பெண்கள் அணியெல்லாம் அமைத்து, பிரீமியர் லீக் க்ளப் போல் செயல்பட்டு வருகிறது. இவை, கால்பந்தின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அந்த விளையாட்டின் மீதான ஈர்ப்பையும் அதிகரிக்கும். அண்டர் 17 உலகக்கோப்பை சமீபத்தில்தான் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கால்பந்து தெரியாத பலரும் இந்தியா இந்தத் தொடரை நடத்தியதால், அதைபற்றிப் பேசினர். அடுத்த ஒரு மாதத்தில் ஐ.எஸ்.எல் நடக்கிறது. முதல் போட்டி நடக்கும் கொச்சி மைதானம் ஹவுஸ் ஃபுல். 

Let's football

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement