வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (18/11/2017)

கடைசி தொடர்பு:12:44 (18/11/2017)

 புஜாரா அரை சதம்! - இந்தியா 172 ரன்களுக்கு ஆல்அவுட்

கொல்கத்தா டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. புஜாரா, அரை சதம் அடித்தார்.

புஜாரா


மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடருடன் இந்திய சுற்றுப்பயணத்தை இலங்கை அணி தொடங்கியது. மழையின் இடையூறுடன் கடந்த 16-ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். மழையால் பாதிக்கப்பட்ட முதல்நாளில் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டநிலையில் ஆட்டம் முடிக்கப்பட்டது. லக்மலின் அபார பந்துவீச்சில் ராகுல், விராட் கோலி இருவரும் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர். முதல்நாள் முடிவில், இந்தியா 3 விக்கெட் 17 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. வெறும் 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 47 ரன்களுடனும் சாஹா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இன்று, மூன்றாம் நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். அரை சதத்தைக் கடந்த புஜாரா, 52 ரன்களில் காமேஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு களம் இறங்கிய ஜடேஜாவும் சாஹாவும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினர். இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. ஸ்கோர் 127 ரன்களை எட்டியபோது, ஜடேஜா ஆட்டம் இழந்தார். அடுத்து, சாஹாவும் வீழ்ந்தார். முகமது ஷமி, 24 ரன்கள் எடுத்தார். 59.3 ஓவர்களில் இந்தியா 172 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார். காமேஜ், சனகா, பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி விளையாடிவருகிறது.