வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (19/11/2017)

கடைசி தொடர்பு:13:40 (19/11/2017)

ஹெராத் அசத்தல் அரைசதம்: கொல்கத்தா டெஸ்டில் இலங்கை அணி 122 ரன்கள் முன்னிலை

கொல்கத்தா டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Photo Credit: BCCI


4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4-ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. டிவெல்லா 35 ரன்களுடனும், ஷனாகா ரன் எதுவும் எடுக்காமலும்,  கேப்டன் தினேஷ் சண்டிமால் 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி, 201 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்குச் சென்றது. இதையடுத்து கைகோர்த்த தில்ருவர் பெரேரா - ரங்கனா ஹெராத் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது. பெரேரா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 250 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கணா ஹெராத், அரைசதம் அடித்தார். அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரங்கா லக்மல் 16 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இன்னிங்ஸ் 294 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இலங்கை அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.