7 ஆண்டுகளுக்குப் பின் ஓபனிங் பாட்னர்ஷிப் சாதனை! இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. 

Photo Credit: BCCI

 

4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இலங்கை அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி 250 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கனா ஹெராத், அரைசதம் அடித்தார். அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதையடுத்து, இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸை ஷிகர் தவானும் - கே.எல்.ராகுலும் தொடங்கினர். முதல் இன்னிங்ஸில் சோபிக்கத் தவறிய இந்த ஜோடி, இந்தமுறை இலங்கை பந்துவீச்சாளர்களை எச்சரிக்கையாக எதிர்க்கொண்டது. அதேநேரம், மோசமான டெலிவரிகளை பவுண்டரிக்கு விரட்டவும் இந்த ஜோடி தவறவில்லை. கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, தவான் ஒருநாள் போட்டிக்கான பாணியில் பேட்டிங் செய்தார். முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெலாவிடம் கேட்ச் கொடுத்து தவான் ஆட்டமிழந்தார். அவர் 116 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உதவியுடன் 94 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து, கே.எல்.ராகுலுடன், கைகோத்த புஜாரா மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார். மோசமான வெளிச்சம் காரணமாக போட்டி முன்னதாகவே 4.30 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

7 ஆண்டுகளுக்குப் பின்னர்... 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஜோடி நூறு ரன்களைக் கடப்பது கடந்த 7 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டியில் தவான் - ராகுல் ஜோடி 166 ரன்கள் எடுத்தது. இதற்கு முன்பாக கடந்த 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக டர்பனில் நடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சேவாக் - காம்பீர் ஜோடி 137 ரன்கள் எடுத்திருந்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!