வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (19/11/2017)

கடைசி தொடர்பு:08:13 (20/11/2017)

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன்! வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான்

Photo Courtesy: Afghan Cricket Board


19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூரில் நடந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 248 ரன்கள் சேர்த்தது. இக்ரம் அலி கில் அதிகபட்சமாக 107 ரன்கள் சேர்த்தார். 249 ரன்கள் வெற்றி இலக்கோடு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 22.1 ஓவர்களில் 63 ரன்னுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்த இக்ரம் அலி கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றதும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தை முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். தேசியக் கொடியுடன் மைதானத்தை வலம் வந்தனர். ஏனெனில் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி பெறும் முதல் பட்டம் இதுவாகும்.  
இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் மக்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வீரர்களுக்கு பாராட்டு மழை  குவிந்துவருகிறது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியும் வீரர்களைப் பாராட்டியுள்ளார்.