ஐந்து நாள்களுக்குமே பேட்டிங்! எலைட் லிஸ்டில் இணைந்த புஜாரா

டெஸ்ட் போட்டியின் ஐந்து நாள்களுமே பேட் செய்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை சட்டீஸ்வர் புஜாரா படைத்தார். 

Photo Credit; BCCI

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்துவரும் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா இந்த சாதனையைப் படைத்தார். மழையால் பாதிக்கப்படவே, போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. முதல்நாளில் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. முதல்நாள் முடிவில் புஜாராவும், ரஹானேவும் களத்தில் இருந்தனர்.  இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படவே, அன்றைய தினம் முழுமையாக 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. புஜாரா 47 ரன்களுடனும், சாஹா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய புஜாரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 172 ரன்களில் சுருண்டது. 

இதையடுத்து, மூன்றாம் நாளில் களமிறங்கிய இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. நான்காம் நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இலங்கை 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களம்கண்ட இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 94 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் 73 ரன்களுடனும், புஜாரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். போட்டியின் ஐந்தாம் நாளான இன்றும் புஜாரா பேட் செய்தார். இதையடுத்து, ரவி சாஸ்திரி மற்றும் எம்.எல். ஜெய்சிம்ஹா ஆகிய இருவருக்குப் பின் டெஸ்ட் போட்டி ஒன்றில் 5 நாள்களுமே பேட் செய்த இந்தியர் என்ற சாதனையை புஜாரா படைத்தார். சர்வதேச அளவில் இந்தச் சாதனையைப் படைக்கும் 9-வது நபர் புஜாரா ஆவார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!