வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (20/11/2017)

கடைசி தொடர்பு:14:32 (20/11/2017)

சென்னையைத் தோற்கடித்த அந்த நான்கு தவறுகள்..! #VikatanExclusive #PoduMachiGoalu #LetsFootball #CHEGOA

ஐ.எஸ்.எல் நான்காவது சீஸனை, தோல்வியுடன் தொடங்கியுள்ளது சென்னையின் எஃப்.சி (#CHEGOA). ஸ்கோர் என்னவோ 3 - 2 என கௌரவமான ஸ்கோர்தான். ஆனால், ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் சென்னை அணி எந்த அளவுக்குத் திணறியது என்று. 39 நிமிடத்தில் மூன்று கோல்கள் அடித்து சென்னையை ரணகளப்படுத்தியது கோவா. இரண்டாம் பாதியில் கஷ்டப்பட்டு கம்பேக் கொடுத்து, கோவா கோல்கீப்பரின் தயவில் இரண்டு கோல்கள் அடித்து டீசன்டாக ஆட்டத்தை முடித்தது. ஆனால், சென்னையின் எஃப்.சி-யின் திட்டங்களும், அவற்றைச் செயல்படுத்திய விதமும் மிக மோசம். 38 நிமிடத்தில் மூன்று கோல்கள் விழக் காரணம் என்ன. ஒரு ஃபீல்டு கோல்கூட அடிக்க முடியாமல் போனது ஏன். இந்த மோசமான பெர்ஃபாமன்ஸின் காரணம் என்ன. இன்ச் பை இன்ச் அனாலிஸிஸ்...

#CHEGOA

`மெரினா அரினா' எனப்படும் நேரு மைதானத்தில் இருந்த 18,213 ஆதரவாளர்களும் முதல் பாதி முடிந்தபோது முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தனர். 14 நிமிட இடைவெளியில் மூன்று கோல்கள் அடித்திருந்தது கோவா. அவர்களின் கோல் போஸ்டையும் பெரிதாக நாம் முற்றுகையிடவில்லை. முதல் பாதியில் சென்னை அணி இவ்வளவு சொதப்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் இந்தச் சொதப்பல் பெர்ஃபாமன்ஸுக்குக் காரணம் பயிற்சியாளர் ஜான் க்ரிகரி வகுத்திருந்த வியூகங்கள்தான். அவர் செய்த நான்கு தவறுகள். 

தவறு 1:

க்ரகரி, நேற்றைய போட்டியில் பயன்படுத்தியது 3 - 4 - 3 ஃபார்மேஷன். அதாவது மூன்று டிஃபண்டர்கள், நான்கு நடுக்கள வீரர்கள், மூன்று ஃபார்வேர்டுகள். இந்த ஃபார்மேஷன் இப்போதுதான் பிரபலமடைந்துவருகிறது. பொதுவாக, கால்பந்து அணிகள் நான்கு டிஃபண்டர்கள்கொண்ட ஃபார்மேஷனையே பயன்படுத்துவார்கள். மூன்று டிஃபண்டர்கள் உள்ளடங்கிய ஃபார்மேஷனைப் பயன்படுத்த வேண்டுமெனில், ஒன்று வீரர்கள் அதற்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வீரர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னையின் எஃப்.சி-யைப் பொறுத்தவரை இரண்டுமே இல்லை. டிஃபன்ஸில் ஆடிய தனசந்திரா சிங், செரேனோ, மெய்ல்சன் மூவருமே மூன்று டிஃபண்டர் ஃபார்மேஷனுக்குப் பழக்கப்படாதவர்கள்; ஒன்றாக இணைந்து விளையாடியதும் இல்லை. இந்த `செட்டப்'புக்கு மிகவும் முக்கியமான புரிதல் வீரர்களிடம் கொஞ்சமும் இல்லாதபோது அதைப் பயன்படுத்தியது பயிற்சியாளர் செய்த மிகப்பெரிய தவறு.

#CHEGOA

க்ரிகரி, 1998 - 2002ம் ஆண்டு வரை ப்ரீமியர் லீக்கில் ஆஸ்டன் விலா அணியின் மேலாளராக இருந்தவர். அப்போது அவர் இந்த ஃபார்மேஷனைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். அதனால், இங்கு அதைப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், முதல் போட்டியிலேயே பயன்படுத்தியதுதான் மிகப்பெரிய தவறு. 1998-ம் ஆண்டில் ஆஸ்டன் விலா மேலாளர் ஆன புதிதில், அதுவரை அந்த அணி ஆடிய நான்கு டிஃபண்டர் ஃபார்மேஷனைத்தான் பயன்படுத்தினார். அதன் பிறகு வீரர்களின் தன்மை அறிந்து அவர்களை தன் புதிய திட்டத்துக்குத் தயார்படுத்தினார். சென்னையின் அணியோடு அவர் இருந்த காலம் மிகவும் குறைவு. சென்னையில் பெய்த தொடர் மழையால், `ஃப்ரீ சீஸன்' போட்டிகளும் பயிற்சிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், முதல் போட்டியில் வீரர்களுக்குப் பழக்கப்பட்ட நான்கு டிஃபண்டர் ஃபார்மேஷனோடு களமிறங்கி, பிறகு தன் ஐடியாவைச் செயல்படுத்தியிருக்கவேண்டும்.

தவறு 2:

இதைப் பயன்படுத்தியது சரி, வீரர்களையேனும் அதற்குத் தகுந்தாற்போல களமிறக்கினாரா, இல்லை. `விங் பேக்'கில் கொஞ்சமும் அனுபவமில்லாத, அதைப் பற்றிய ஐடியாவே இல்லாத தோய் சிங், வலது விங் பேக்கில். இனிகோ கால்டிரான், மிட் ஃபீல்டில். இந்த ஃபார்மேஷனில் ஆடும் இரண்டு மிட் ஃபீல்டர்களும் `பாக்ஸ் டு பாக்ஸ்' ஆட வேண்டும். அந்த பொசிஷனில் 35 வயது இனிகோ! இத்தனைக்கும் அவர் வலது விங்கில் ஆடும் டிஃபண்டர். தோய் சிங்கோ சென்ட்ரல் மிட் ஃபீல்டர். ஜெர்மன்ப்ரீத் சிங்குக்குக் காயம். நடுக்களத்தில் அனுபவ வீரர் வேண்டுமென்பதால், அங்கு இனிகோவைக் களமிறக்கியிருக்கிறார் க்ரிகரி. தோய் சிங்காலும் அந்த பொசிஷனில் ஜொலிக்க முடியவில்லை. இனிகோ கால்டிரானின் பெர்ஃபாமன்ஸைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அடுத்து, மூன்று நபர் டிஃபண்ஸில் தனசந்திரா சிங் - லெஃப்ட் பேக். அவருக்கும் அந்த ஃபார்மேஷனுக்கும் சுத்தமாக செட் ஆகவில்லை.

#CHEGOA

தவறு 3:

இன்று பல முன்னணி ப்ரீமியர் லீக் அணிகள் 3 - 4 - 3 தான் பயன்படுத்துகின்றன. அந்த மூன்று ஃபார்வேர்டுகளில் இருவர், ஸ்ட்ரைக்கருக்குப் பின்னால் கொஞ்சம் நெருக்கமாக, சென்டராக ஆடுவர். ஆனால், க்ரகரியின் திட்டம் இங்கும் வேறு மாதிரி இருந்தது. இடது விங்கில் ஆடிய போடோவும் சரி, வலதுபக்கம் ஆடிய மிஹெலிவிச்சும் சரி, மிகவும் `வொய்டா'க ஆடினார்கள். அகஸ்டோ, கால்டிரான் இருவருமே டிஃபண்சிவ் மைண்ட் செட் உடையவர்கள். இதனால் கோவாவின் சென்ட்ரல் பகுதியில் சென்னை அணியால் துளியும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய `க்ரியேட்டிவ் ஸ்பார்க்' சுத்தமாக மிஸ்ஸிங்.

தவறு 4:

இடது விங் பேக்கில் ஆடிய ஜெர்ரிக்கு 19 வயது. இடது விங்கராக ஆடிய அபோரிங்டோ போடோவுக்கு 18 வயது. இருவருமே நன்றாகத்தான் விளையாடினார்கள். ஆனால், சேர்ந்துதான் இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இருவரும் இணைந்து இரண்டு முறை மட்டுமே `ஒன் - டூ' பாஸிங் செய்தனர். அவையும் கோவா டிஃபண்டர்களால் முறியடிக்கப்பட்டன. இரண்டாம் பாதியில் க்ரிகரி நெல்சன் இடது விங்கராக களம்கண்டார். ஜெர்ரியும் நெல்சனும் இணைந்தபோது சென்னை அணி இடது விங்கில் கொஞ்சம் அச்சுறுத்தியது. அணியின் `லைன்அப்'பை முடிவு செய்தபோதே பயிற்சியாளர் அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். 

பயிற்சியாளர் செய்த தவறுகள் இருக்கட்டும், வீரர்கள்...  தோய் சிங், தனசந்திரா போன்ற வீரர்கள் ஜொலிக்க முடியாமல்போனதற்கு க்ரிகரியின் முடிவுகளையே காரணமாகச் சொல்லலாம். ஆனால், அந்த 18,000 ரசிகர்களும் ஏகோபித்து ஆதரித்த ரஃபேல் அகஸ்டோ திறமையாக ஆடினாரா. கேப்டன் செரேனோ என்ன செய்தார். துணை கேப்டனும், லிவர்பூல் அணியின் முன்னாள் வீரருமாகிய இனிகோ கால்டிரான் தனது தேர்வை நிரூபித்தாரா. கடந்த சீஸனில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய ஜெர்ரி நேற்று ஜொலித்தரா. நிச்சயமாக இல்லை. மிகவும் எதிர்பார்த்த இந்த வீரர்கள் சொதப்பல் ஆட்டம்தான் ஆடினர். ஆட்டத்தின் போக்கில், அவர்கள் இழைத்த தவறுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள்...

#CHEGOA

சீன் 1 : கோவாவின் இரண்டாவது கோல்

கோவாவின் பகுதியிலிருந்து பந்தை ட்ரிபிள் செய்து முன்னேறுகிறார் கோவா வீரர் லான்சரோட்டி. கால்டிரான், அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. பாஸ் செய்ய வேண்டும். வலது விங்கில் மந்தர் ராவ் தேசாய். ஜெர்ரி அவரை மார்க் செய்யவில்லை. லான்சரோட்டிக்கு அருகில் வருகிறார் எடுவாட்ரோ பெலேஸ். அவரை மார்க் செய்யவேண்டிய அகஸ்டோ, லான்சரோட்டிக்குப் பின்னால் இருக்கிறார். வலதுபக்கம் பிராண்டன் ஃபெர்ண்டான்ஸ். தோய் சிங், செரேனோ இருவரும் அவரை ஃப்ரீயாக விட்டுவிடுகின்றனர். தனசந்திரா சிங் கோரோமினாஸைச் சரியாக கவர் செய்யாமல்போக, அவர் வேகமாக முன்னேறுகிறார். இப்படி லான்சரோட்டிக்கு நான்கு ஈஸி ஆப்ஷன்கள். அந்த அளவுக்குக் தூங்கிக்கொண்டிருந்தனர் சென்னை வீரர்கள்.

கோரோவுக்கு பாஸ் போகிறது. பாக்ஸுக்குள் சென்று ஷூட் செய்கிறார். கரன்ஜித் தடுத்துவிடுகிறார். அடுத்து தேசாய் வசம் சிக்குகிறது பந்து. இப்பவும் ஜெர்ரி தவறான இடத்தில் பிராண்டன் வளைந்து நெளிந்து அடிக்கிறார். அதையும் கரஜ்னித் தடுத்துவிட, லான்சரோட்டியை நோக்கிச் செல்கிறது பால். இப்போதும் அவருக்கு அதே நான்கு ஆப்ஷன்கள் இருக்கின்றன. பிராண்டனுக்கு பாஸ் போடுவது மட்டும் கொஞ்சம் சிரமம். மற்றபடி மற்ற மூன்று ஆப்ஷன்களும் சுலபமானவையே. என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கின்றனர், பாக்ஸுக்குள் இருந்த ஆறு சென்னை வீரர்கள். இது ஒருபுறமிருக்க, ரஃபேல் அகஸ்டோ - சென்னை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த வீரர் ஜாகிங் செய்துகொண்டிருக்கிறார். லான்சரோட்டி, கோரோவுக்கு முதல் பாஸைப் போட்டபோது அவருக்கு பத்து அடி பின்னால்தான் இருந்தார் அகஸ்டோ. பாஸ் போட்ட ஒன்பதாவது நொடி, மீண்டும் பாக்ஸுக்குள் அவரிடமே சென்றது பந்து. அகஸ்டோ இன்னும் பாக்ஸைக்கூட நெருங்கவில்லை. ஒரு பெனால்டி கோல் அடித்ததற்கு கொண்டாடித் தீர்த்துவிட்டோம் இதையெல்லாம் மறந்துவிட்டு. மூன்று ஆப்ஷன்கள் இருந்தும் அவரே ஷூட் செய்ய, 29 நிமிடத்தில் இரண்டு கோல்கள் லீட் எடுத்தது கோவா. 

#CHEGOA

சீன் 2 : கோவாவின் மூன்றாவது கோல்

38-வது நிமிடம். அஹ்மதிடம் பந்தை எளிதாக இழக்கிறார் அகஸ்டோ. கோரோவின் பாஸ் லான்சரோட்டியை அடைகிறது. இடதுபுறம் தேசாய் ஃபுல் ஃப்ரீ. கேப்டன் செரேனோ ஆளையே காணவில்லை. மூன்றாவது கோல். இந்த சீஸனில் இந்தியரின் முதல் கோல். 38 நிமிடத்தில் ஆட்டத்தையே முழுமையாக இழந்திருந்தது சென்னையின் எஃப்.சி. செரேனோ இப்படிப் பல தருணங்களில் காணாமல்போனார். மெய்ல்சன் அவ்வப்போது அதை பேலன்ஸ் செய்துகொண்டிருந்ததால், கோவா அணியின் கோல் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

சீன் 3: 65-வது நிமிடம். 

சென்னை அணி சொதப்பியது தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல, முன்களத்திலும்தான். கால்டிரான் கொடுத்த லாங் பாஸை ஜெர்ரிக்குத் தட்டிவிட்டு முன்னேறுகிறார் நெல்சன். இப்போது ஜெர்ரியின் வசம் பந்து. 3 - 4 - 3 ஃபார்மேஷனுக்கு முக்கியமானதே co-ordinationதான். ஒரு வீரரிடம் பந்து இருக்கும்போது, பாஸ் செய்ய அவருக்கு மூன்று ஆப்ஷன்களாவது இருக்க வேண்டும். அதுவும் நடுக்களத்தில் இருக்கையில் குறைந்தது மூன்று ஆப்ஷன்கள் இருக்க வேண்டும். ஆனால், ஜெர்ரிக்கு அந்த ஆப்ஷன்கள் இல்லை. மிட் ஃபீல்டர்கள் பிக்ரம்ஜித், அகஸ்டோ இருவரும் கம்பெனி கொடுக்கவில்லை. வலதிலிருந்து இடது சென்டர் பேக் பொசிஷனுக்கு மாறியிருந்த கேப்டன் செரேனோவும் அட்ரஸ் இல்லை. ஜீஜே-வுக்கு பாஸ் கொடுத்தால் possession இழக்க நேரிடும். போடோ வொய்டாக இருக்கிறார். ஜெர்ரியை நோக்கி நகராமல் அப்படியே நிற்கிறார். பாஸ் கொடுக்கக்கூடிய ஒரே ஆப்ஷன் நெல்சன். அவர் இருப்பது offside-ல். என்ன செய்வான் அந்த 19 வயது இளைஞன். ஜீஜேவுக்குத் தூக்கி பாஸ் போட, டிஃபண்டர்களின் பிரஷரால் எதுவும் செய்ய முடியவில்லை.

#CHEGOA

இந்த மூன்று சம்பவங்களிலேயே அகஸ்டோ, கால்டிரான், ஜெர்ரி, செரேனோ என நம்பிக்கை நாயகர்கள் அனைவரின் பெர்ஃபாமன்ஸும் தெரிந்துவிட்டது. ஜெர்ரி ஃபார்வேர்டு கேமில் கொஞ்சம் நம்பிக்கை அளித்தாலும் டிஃபண்ஸில் கோட்டைவிட்டார். முதல் கோல் விழவும் அவர் செய்த தவறுதான் காரணம். சென்னையின் கார்னர் க்ளியர் செய்யப்பட, காலில் இருந்த பந்தை அவர் தாரைவார்த்துக்கொடுக்க, கவுன்டர் அட்டாக்கில் இந்த சீஸனின் முதல் கோலை அடித்தார் கோரோமினாஸ். செரேனோ ஏரியல் பால்கள் ஜெயித்தாலும் அடிக்கடி காணாமல்போயிருந்தார். அகஸ்டோ இரண்டு, மூன்று நல்ல மூவ்கள் செய்தார். ஆனால், அணியிலேயே மிக மோசமான பெர்ஃபாமன்ஸ் அவருடையதுதான். நடுக்களத்தை மொத்தமாக கோவாவுக்குப் பரிசளித்துவிட்டார். ஜீஜே - இரண்டு ஸ்டிரைக்கர்களுள் ஒருவராக ஜொலிப்பவர், out and out ஸ்ட்ரைக்கராக ஆடத் திணறுகிறார். 

இப்படி, பயிற்சியாளர் முதல் நட்சத்திர வீரர்கள் வரை அனைவரின் ஆட்டமும் சொதப்பலே. இந்த ஆட்டத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது, 18 வயது போடோ மற்றும் க்ரகரி நெல்சன் ஆகியோரின் ஆட்டம்தான். போடோ பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஓரளவு நம்பிக்கை கொடுத்துள்ளார். இந்தத் தோல்வி இருக்கட்டும், அடுத்த போட்டியில் வெற்றிபெற தவறுகளைத் திருத்திக்கொள்வதில்தான் இருக்கிறது. டிஃபன்ஸும் நடுக்களமும் தரம் உயர்ந்தால் மட்டுமே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வெல்ல முடியும்.


டிரெண்டிங் @ விகடன்