வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (20/11/2017)

கடைசி தொடர்பு:15:36 (21/11/2017)

கோலியின் 50 வது சதம், ஃபாஸ்ட் பெளலர்கள் அள்ளிய 17 விக்கெட்... டிராவிலும் திருப்தியே! #INDvSL

காலே -  ஜூலை 20, 2010. டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள். இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 520-ஐ துரத்திய இந்திய அணி, 276 ரன்களுக்கு ஆல் அவுட். இப்போ எதுக்கு இது. விஷயம் இருக்கு. அதுதான் இந்த 7 ஆண்டுகளில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போட்டி. அதற்குப் பிறகு, இப்போதுதான் இலங்கையைவிடக் குறைவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்தது இந்தியா. ஆனால், முடிவு மட்டும் வேறு. அந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. இப்போது டிரா. கடைசி தருணங்களில் வெற்றி என்னவோ இந்தியாவின் கைகளைத்தான் பிடித்திருந்தது. வெளிச்சமின்மையைக் காரணம் காட்டி கோலியின் கையிலிருந்து அதைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார் நடுவர் நைஜல் லாங். #INDvSL

#INDvSL

அந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்ட போட்டிதான். ஆனால், அதற்கும் இந்தப் போட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது மலிங்கா டெஸ்ட் போட்டியில் ஆடிய காலம். சங்கக்காரா, ஜெயவர்தனே, தில்ஷன், முரளிதரன் ஆகியோர் கிரிக்கெட் விளையாடிய காலம். இலங்கை, உலகத்தரம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்த காலம். மலிங்கா, முரளி, ஹெராத் என அச்சுறுத்தும் பௌலிங் யூனிட்டும் சங்கக்காரா - தில்ஷன் மாஸ்டர் கிளாஸ் கூட்டணியும் கொண்டிருந்தது இலங்கை. இந்திய அணியிலும் பல மாற்றங்கள். ஆனால், இரு அணிகளும் இரு வேறு திசை நோக்கிப் பயணித்திருக்கின்றன இந்த 7 ஆண்டுகளில். இந்தியா ஏணிகளைத் தேட, இலங்கையோ பாம்பின் வால்பிடித்து கீழ்நோக்கி வீழத் தொடங்கிவிட்டது. இன்று, வங்கதேசம்கூட இலங்கையைச் சுருட்டிவீசுகிறது. இப்படிப்பட்ட இலங்கையிடம்தான் முதல் இன்னிங்ஸ் லீடை பறிகொடுத்தது இந்தியா.

ஆட்டத்தின் நான்காம் இன்னிங்ஸ். இந்தியா பௌலிங்.

கிட்டத்தட்ட இந்த இன்னிங்ஸ் ஸ்பின்னர்களுக்கானது; அஸ்வின், ஜடேஜாவுக்கு நேர்ந்துவிடப்பட்டது. ஆனால், இந்தமுறை அப்படியில்லை. இந்த டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கான முன்னோடி. அங்கு ஸ்பின்னர்களைவிட Seamer-களை நம்பித்தான் வண்டி ஓட்ட வேண்டும். ஆக, கோலி ஸ்மார்ட்டாக முடிவெடுத்தார். "நீங்கள் ஃபீல்டர்கள் மட்டும்தான்" - இது அஸ்வின், ஜடேஜாவுக்கு கோலி சொல்லாமல் சொன்ன மெசேஜ். உலகின் டாப் 2 ஸ்பின்னர்களுக்கு ஷாக் இல்லை. ஏனெனில், முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டையும் வீழ்த்தியது வேகப்பந்துவீச்சாளர்கள்! இந்தியாவில் ஃபாஸ்ட் பௌலர்கள் அனைத்து விக்கெட்டையும் எடுத்தார்களா. ஆம். சுழல மட்டும் செய்யும் இந்தியாவில், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈடன் கார்டன் பிட்ச்சில், வழக்கத்துக்குமாறாக வேகப்பந்துவீச்சாளர்கள் டெஸ்டில் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். புவனேஷ்வரைப் பொறுத்தவரை இது சொர்க்க பூமி. பந்து 5 நாள்களும் ஸ்விங் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஷமிக்கு இது சொந்த ஊர். இருவரும் முதல் இன்னிங்ஸில் எட்டு இலங்கை விக்கெட்டுகளைப் பதம் பார்த்திருந்தனர். அவர்கள் இருவரையும் ஆயுதமாக்கிப் படையை வழிநடத்தினார் கிங் கோலி.

#INDvSL

ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தபட்சம் 3 பேராவது ஸ்லிப்பில் நிற்கிறார்கள். ஓவர்கள் முடிந்ததும் விக்கெட்டுகள் மாற, சஹாவிலிருந்து அஸ்வின் வரை ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு பந்து போட்டு முடித்ததும், ஸ்டார்ட் அப் நோக்கி ஓடுகிறார்கள் பௌலர்கள். தோல்வியின் பிடியிலிருந்து மீண்டுவந்த இந்தியா குறிவைத்தது டிராவை அல்ல. வெற்றியை. வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட கோலி முழுக்க முழுக்க அட்டாக்கில் இந்திய அணியை வழிநடத்தினார். முதல் ஓவரிலேயே சமரவிக்ரமாவின் விக்கெட்டை வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் தன் 50 வது விக்கெட்டைக் கொண்டாடினார் புவி. வீரர்களின் வேகம் குறையவில்லை. கருணரத்னே. திரிமன்னே...ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினார். ஷமி, புவி, யாதவ் ஆகியோரின் மும்முனைத் தாக்குதல் இலங்கையைப் போட்டுத்தாக்கிவிட்டது. இலங்கை கேப்டன் சந்திமால் வெளியேறும்போது அவர் கண்களில் அவ்வளவு விரக்தி. ஆதிக்கம் செலுத்த வேண்டிய போட்டியில் அட்ரெஸ் இல்லாமல் தொலைந்துகொண்டிருந்தது இலங்கை. நேற்று இந்தியா பேட்டிங் பிடிக்க வந்தபோது இவரைவிட சந்தோஷமானவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

இலங்கையைவிட 122 ரன்கள் பின்தங்கியிருக்கிறது இந்தியா. தவான் - ராகுல் இணை களம் கண்டபோது இருவர் மீதும் எக்கச்சக்க நெருக்கடி. இருவரும் முதல் இன்னிங்ஸில் முறையே 0, 8 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தனர். கடந்த தொடரில் வைட் வாஷ் செய்த இந்த 'கத்துக்குட்டி' இலங்கையிடம் தோற்றுவிட்டால், அது மிகப்பெரிய அடி. அதுவும் இரண்டு நாள்களின் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஒரு டெஸ்ட் போட்டியைத் தோற்றுவிட்டால் அவமானம்தான். அதுமட்டுமின்றி, இருவரில் யார் சோபிக்காவிடிலும் முரளி விஜயிடம் அடுத்த போட்டிக்கான இடத்தை இழக்கக்கூடும். அதனால், ஒரு நல்ல தொடக்க நிச்சயம் தேவை. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை மூட்டைகட்டிய லக்மல் ஒருபக்கம் மிரட்டுகிறார். ஆடுகளம் இன்னும் ஸ்விங்குக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. கவனமாக ரன் கணக்கைத் தொடங்கியது அந்தக் கூட்டணி. 

#INDvSL

ராகுல் கொஞ்சம் பொறுமைகாட்ட, தவான் ஒருநாள் போட்டியைப்போல் அடித்து ஆடத் தொடங்கினார். 13 வது ஓவரில் 50 ரன்களைக் கடந்த இந்தியா, 24 வது ஓவரில் 100-ஐத் தொட்டது. அப்போதுதான் இந்தப் போட்டியில் முதன்முதலாக இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. நல்ல தொடக்கம் இருந்தாலும், 50 ரன் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அதில் நம்பிக்கை நாயகன் புஜாராவும் அடங்கும். களத்தில் கேப்டன் கோலி. இந்த மைதானத்தில் இதுவரை அரைசதம் அடித்ததில்லை. முதல் இன்னிங்ஸிலோ டக். இதைவிடப் பிரஷர் சிசுவேஷன்களை அசால்டாக ஹேண்டில் செய்தவராயிற்றே. கூலாக ஆடத்தொடங்கினார். வழக்கமான கவர் டிரைவ்கள், லெக் சைட் ஃப்ளிக் ஷாட்ஸ், ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்கள், போதாதென்று இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவரில் 2 சிக்ஸர்கள். சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் தன் 50 வது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி. கிரிக்கெட்டில் அறிமுகமான 9 ஆண்டுகளில் 50 சதங்கள். வாட்டே பிளேயர்!

எக்ஸ்ட்ரா கவர் திசையில் அந்த சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தபோதுதான் கோலியின் முகம் அந்த வழக்கமான ஆக்ரோஷக் கனலை வெளியிட்டது. அதுவரை சோர்ந்துதான் இருந்தார் கோலி. முதல் இன்னிங்ஸில் டக். ரிவ்யூ எடுத்தும் பலனில்லை. அணியும் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது. அடுத்து ஆடிய இலங்கை, இந்தியாவின் இந்தச் சரிவைப் பயன்படுத்திக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தது. பொறுமையாக விளையாடியது. அடுத்தடுத்து விக்கெட் போயிருந்த நிலையில் 9-வதாகக் களமிறங்கி ஹெராத் அரைசதம் அடித்தால்... எந்தக் கேப்டனால் ஏற்றுக்கொள்ள முடியும். ஒருவழியாக இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாகப் பேட்டிங் செய்தாயிற்று. 230 ரன்கள் முன்னிலையோடு ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் கோலி. குறைந்தபட்சம் 45 ஓவர்கள் ஆட வேண்டும். அடித்து ஆடி வெற்றி பெற முயற்சி செய்தால் தோற்க நேரிடும். டிராவை இலக்காகக் கொண்டு களமிறங்கியது இலங்கை. டிரெஸ்ஸிங் ரூமில் வெற்றியைத் தவிர வேறு வார்த்தையைச் சொல்லியிருக்க மாட்டார் விராட்.  

#INDvsSL

ஷமியின் பந்துவீச்சில் சந்திமல் வீழ்ந்தபோது இலங்கையின் ஸ்கோர் 69. இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகளே தேவை. அடிக்கடி தண்ணீரை ஆடுகளத்துக்கு அனுப்பத் தொடங்கினார் சந்திமால். அப்படி நேரம் கடந்தால், போடப்படும் ஓவர்கள் குறையும். தோல்வியைத் தவிர்த்துவிடலாம். கோலி நடுவர்களிடம் புகார் தெரிவித்தார். ஏற்கெனவே, அங்கு டிக்வெல்லாவுக்கும் ஷமிக்கும் புகைந்துகொண்டிருந்தது. ஆட்டம் இன்னும் சூடு பறக்கத் தொடங்கியது. பந்தை பௌலருக்குக் கொடுப்பதில் ஃபீல்டர்கள் ஒரு நொடிகூடத் தாமதிக்கவில்லை. ஒரு பால் போட்டுவிட்டு, அடுத்த பந்துக்குத் தயாராக பௌலர்களும் புயலாகப் புறப்பட்டனர். இந்தியா வெற்றியைத் துரத்த, தோல்வியை விரட்டிக்கொண்டிருந்தது இலங்கை.

போதாக்குறைக்கு 2001 ஆஸ்திரேலிய டெஸ்டின் நினைவுகள். முதல் இன்னிங்ஸில் பேரடி வாங்கிவிட்டு இந்தியா வெற்றி பெற்ற தருணம் மனதில் வந்துவந்து போகிறது. அதே ஈடன் காடர்ன். அதைப் போன்றதொரு சூழ்நிலை. மீண்டும் ஒரு கம்பேக் வெற்றி... சாத்தியமா. சாத்தியம்தான்... புவியின் ஸ்விங்குகள் அதைச் சாத்தியமாக்கும் என நம்பினர் ரசிகர்கள். ஒரு பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவுட் ஸ்விங். அடுத்த பந்து அதே லைனில் குத்தி, இன்ஸ்விங்... மிரண்டது இலங்கையின் மிடில் ஆர்டர். டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் காலி. கோலி ரசிகர்களை நோக்கிக் கையை உயர்த்த, ஈடனின் கரகோஷம் இலங்கை மீதான பிரஷரை அதிகப்படுத்தியது. அவ்வப்போது வெளிச்சம் எவ்வளவு இருக்கிறதென நடுவர் நைஜல் லாங் செக் செய்ய, இந்திய ரசிகர்களின் ஹார்ட் பீட் கூடியது.

#INDvsSL

"நேற்றுவரை டிரா செஞ்சாப் போதும்னு இருந்தோம். இப்போ வெற்றியைக் கண்ணுல காட்டிட்டாங்க. இனி, டிராவ ஏத்துக்க முடியுமா" புலம்பிய ரசிகர்களின் கனவை உடைத்தெறிந்தார் நடுவர். 'Bad light. Game stopped. Match drawn' என்று அறிவிக்கப்பட, நொந்துபோனார்கள் இந்திய ரசிகர்கள். ஆரம்பத்தில் நடுவர்களிடம் கோலி விளக்கம் கேட்டாலும், மகிழ்ச்சியுடன் டிராவை ஏற்றுக்கொண்டார். ஏனெனில், வெறும் 3 செஷன்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது இந்தியா. கெத்தாக போட்டியை முடித்துவிட்டோம். இலங்கையின் 17 விக்கெட்டுகளும் இந்திய ஃபாஸ்ட் பௌலர்களுக்கே. ஆட்ட நாயகன் புவனேஷ்வருக்கு 8. மனிதன் பட்டையைக் கிளப்பிவிட்டார். 7 போட்டிகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்தியா, இலங்கை போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தப் போட்டியை இந்தியா மோசமாகத் தொடங்கியிருந்தாலும், தொடரை நன்றாகவே தொடங்கியுள்ளது. ஸ்பின்னர்களைப் பயன்படுத்தாமல் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்தே வெற்றியை நெருங்கியதே போதும். இதுவே இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றிதான்!


டிரெண்டிங் @ விகடன்