சொந்தக் காரணங்களுக்காக விலகிய புவனேஷ்வர் குமார், தவான்: இந்திய அணியில் தமிழ்நாடு கேப்டன்!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். 

Photo Credit: IPL T20


இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில், இலங்கை அணிக்கெதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் திருமணம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு, வரும் 23-ல் திருமணம் நடைபெற உள்ளது. அதேபோல, சொந்தக் காரணங்களுக்காக இரண்டாவது போட்டியிலிருந்து மட்டும் தொடக்க வீரர் தவான் விலகுவதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 

 

 

புவனேஷ்வர் குமாருக்கு மாற்றுவீரராக, இந்திய அணியில் தமிழ்நாடு ஒருநாள் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில், தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான தொடரில், இந்திய ஏ அணியில் விளையாடிய விஜய் சங்கர், 72 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மிதவேகப்பந்து வீச்சாளரான அவர், நியூஸிலாந்து ஏ அணிக்கெதிரான தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டதால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒடிசாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் சதமடித்த விஜய் சங்கர், மும்பைக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!