வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (21/11/2017)

கடைசி தொடர்பு:18:51 (21/11/2017)

`கனவு நனவான கணம்!' - இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக வீரர் நெகிழ்ச்சி!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர், `கனவு நனவான கணம்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விஜய் சங்கர்

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில், இலங்கை அணிக்கெதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் திருமணம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு, வரும் 23-ல் திருமணம் நடைபெற உள்ளது. அதேபோல, சொந்தக் காரணங்களுக்காக இரண்டாவது போட்டியிலிருந்து மட்டும் தொடக்க வீரர் தவான் விலகுவதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு மாற்றுவீரராக, இந்திய அணியில் தமிழ்நாடு ரஞ்சிக் கோப்பை அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில், தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான தொடரில், இந்திய ஏ அணியில் விளையாடிய விஜய் சங்கர், 72 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மிதவேகப்பந்து வீச்சாளரான அவர், நியூஸிலாந்து ஏ அணிக்கெதிரான தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டதால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒடிசாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் சதமடித்த விஜய் சங்கர், மும்பைக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.  

இந்நிலையில், தான் தேர்வானது குறித்து விஜய் சங்கர், `இந்திய அணிக்குத் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எந்தவித கிரிக்கெட் விளையாடினாலும், அதில் என் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதேவேளையில், ஒரு போட்டியிலோ அல்லது தொடரிலோ நான் நன்றாக விளையாடினால், அடுத்தகட்டத்துக்கான போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கனவு நனவாக ஆன கணம் இது. இந்திய கிரிக்கெட் அணியினருடன் இருக்கப்போவதைப் பற்றி மிகவும் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று கூறினார் நெகிழ்ச்சியுடன்.