Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்!’’ - விஜய் சங்கர் #VikatanExclusive #INDvSL

Chennai: 

‘‘கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கர் எண்டில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த மாதிரியான சூழலில் யார் பெளலராக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ 

‘‘வேர்ல்டுலயே யார் பெஸ்ட் பெளலரோ, அவர்தான் வேணும். அவரோட பந்துல சிக்ஸ் அடிச்சி வின் பண்ணணும். அந்த பெளலர் பந்தை அடிச்சாத்தான், எனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்’’ என்றார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர். அந்த நம்பிக்கைதான் அவர் 18 மாத காயத்திலிருந்து மீண்டு வரக் காரணம்; இன்று முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம். 

விஜய் சங்கர்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக  இடம்பெற்றிருக்கிறார் விஜய் சங்கர். ஆல் ரவுண்டர். தமிழகத்திலிருந்து இந்திய அணிக்குத் தேர்வான 27-வது வீரர். 2011-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முதல் தமிழக வீரர். 

2014-15 ரஞ்சி சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர் விருது வாங்கிய விஜய் சங்கர், இந்திய அணிக்குத் தேர்வானது ஆச்சர்யமில்லை. இந்திய அளவில் ஃபாஸ்ட் பெளலிங் ஆல் ரவுண்டர்களில் முக்கியமானவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டியவர். இந்த அழைப்பே கொஞ்சம் தாமதம்தான். ரஞ்சிப் போட்டிகளில் பிஸியாக இருந்த விஜய் சங்கர், முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற தகவல் அறிந்ததும் படு குஷி. 

‘‘இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப் போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும். செலக்டர்ஸ் கூப்பிட்டு, ரெடியா இருன்னு சொன்னாங்க. அஃபீஸியலா நியூஸ் வந்ததும் செம ஹேப்பி’’ என்றார். ‘புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதால், அநேகமாக பிளேயிங் லெவனிலேயே கூட இடம் கிடைக்கலாம். இல்லையா’ என்றதும், ‘‘செலக்ட் பண்ணா கலக்கலாம். இப்போதைக்கு நான் அதைப் பத்தியெல்லாம் யோசிக்கலை ப்ரோ. இந்தியன் டீம்ல செலக்ட் ஆனதே பெரிய விஷயம். எப்ப, எந்த இடத்துல இறக்கிவிட்டாலும், எந்த ரோல் கொடுத்தாலும் என்னை நான் ப்ரூவ் பண்ணிடுவேன். எப்படியோ, இந்தியன் டீம்ல இருக்கணும்ங்குற கனவு பலிச்சிடுச்சு’’ என்று சொன்னவர், நாளை இந்திய அணியுடன் இணைகிறார். 

2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர்களில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம். அந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7! இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ எனச் சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA). 

விஜய் சங்கர்

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தபோதிலும், அவரை அடையாளம் காட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான். கடந்த சீசனில் யுவராஜ் சிங்குக்குப் பதிலாக இறங்கிய விஜய் சங்கர், 49 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். டேவிட் வார்னருடன் இணைந்து முக்கியமான கட்டத்தில் 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளேயிங் லெவனில் இடம்பெறாத போட்டிகளில், சப்ஸ்டிட்யூட் பிளேயராக வசீகரித்தார். குறிப்பாக, கடந்த சீசனில் அவர் பிடித்த இரண்டு கேட்ச்கள் அட்டகாசம். தினமும் இரண்டு மணி நேரம் ஃபீல்டிங் பிராக்டீஸ் செய்பவரால் மட்டும்தான் இவையெல்லாம் சாத்தியம். இரண்டு கைகளிலும் டேரக்ட் ஹிட் அடிக்கக் கூடிய அளவு துல்லியமானவர். ஆல் ரவுண்டர் என்பதால் பேட்டிங், பெளலிங் பயிற்சிக்கே நேரம் போதாது. அப்படியிருந்தும், ஃபீல்டிங்குக்கும் தனிக் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. 

விராட் கோலி நினைக்கும் ஒரு ஃபீல்டருக்குரிய அத்தனை இலக்கணமும் விஜய்க்கு அத்துப்படி. தவிர, உள்ளூர் போட்டிகளில் பெரும்பாலும் நெருக்கடியான நேரத்தில்தான் வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பதால், இன்றில்லை என்றாலும் ஒருநாள் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிரட்டுவார்.  

Vijay Shankar

சுரேஷ் ரெய்னாவைப் போல விஜய் சங்கர் டீம் பிளேயர். எந்த பெளலர் விக்கெட் எடுத்தாலும் முதல் ஆளாக அவரைப் பாராட்டுவார். தட்டிக் கொடுப்பார். இது அவரது ப்ளஸ் என்பர் சேப்பாக்கத்தில் ரஞ்சி போட்டிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்கள். ரசிகர்கள் மட்டுமல்ல, தேர்வாளர்களும் அவர்மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தனர். ‘‘அணித்தேர்வின்போது எப்போதுமே விஜய் சங்கர் பரிசீலனையில் இருப்பார்’’என்றார் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். 

இலங்கைக்கு எதிரான தொடரை மனதில்வைத்து மட்டுமே இந்தத் தேர்வு நடந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், கடந்த மூன்று ஆண்டுகளாக ‘இந்தியா ஏ’ அணியில் தவறாது இடம்பிடித்துவிடும் விஜய் சங்கர், சமீபத்தில் ‘தென் ஆப்பிரிக்கா ஏ’ அணிக்கு எதிராக மிரட்டியிருந்தார். அதுவும் தென் ஆப்பிரிக்காவில்... இலங்கை பயணத்துக்குப் பின் இந்தியா, தென் ஆப்பிரிக்கா செல்லவிருப்பதால், அந்த அணியிலும் விஜய் சங்கர் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், கொல்கத்தா டெஸ்ட்டில் ஸ்பின்னர்களை விட, வேகப்பந்து வீச்சாளர்களுக்கே அதிக ஓவர் கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்துக்குச் சாதகமாக இருக்கும். அங்கு கூடுதல் ஸ்பின்னருடன் பயணிப்பதை விட, ஃபாஸ்ட் பெளலருடன் பயணிப்பது நலம். அவர், பெளலிங் ஆல் ரவுண்டராக இருந்தால் இன்னும் சிறப்பு. இந்த எதிர்பார்ப்புகளை விஜய் சங்கர் நிறைவேற்றுவார் என நம்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement