வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (22/11/2017)

கடைசி தொடர்பு:16:13 (22/11/2017)

சம்மரில் மஞ்சள், வின்ட்டரில் நீலம்... சி.எஸ்.கே மட்டுமல்ல சி.எஃப்.சி-க்கும் கொடி பிடிப்போம்! VikatanExclusive #LetsFootball

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணி. சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகே, நீல நிற டீ ஷர்ட் அணிந்து 50 பேர் நின்றிருந்தனர். முகங்கள் தெரியவில்லை. பைக்கில் வந்திறங்கி அவர்களோடு ஐக்கியமானவர்கள், ஏற்கெனவே நின்றிருந்தவர்களிடமிருந்து நீல டீ ஷர்ட்டை வாங்கி அணிந்துகொண்டிருந்தனர். சிலரது கையில் கொடி. ஒருவர் கையில் டீ ஷர்ட்கள் நிறைந்த பேக். ஒவ்வொருவர் கையிலும் நீலக்கலரில் துண்டு போன்ற துணி. ஏதேனும் போராட்டமா. போலீஸ் வேறு இல்லை. திடீரென ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு அணிவகுத்தனர். கொடி உயர்ந்தது... நாக்கு வெளியே நீண்டிருக்கும் திருஷ்டி பொம்மையின் படம்.  அட, சென்னையின் எஃப்.சி கொடி.

அந்த நீல டீ ஷர்ட்கள் சென்னை அணியின் ஜெர்ஸி. எல்லோர் கையிலும் சென்னை அணியின் ஏதேனும் ஒரு மெர்சண்டைஸ். 'B Stand Blues' - தங்கள் குழுவின் பேனர் பிடித்துக் கிளம்பினார்கள். கொடியை உயர்த்திப் பிடித்து, "The Boys in Blue" எனப் பாடல்கள் பாடி, சென்னையின் எஃப்.சி என ஆர்ப்பரித்து, ஐரோப்பிய கால்பந்து ரசிகர்கள் போல் ISL போட்டிகள் நடக்கும் நேரு மைதானம் நோக்கிப் படையெடுத்தனர். பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம். இப்படியொரு நிகழ்வை சென்னை இதுவரை கண்டதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸுக்குக் கூட இப்படியான ஊர்வலம் நடந்ததில்லை. கால்பந்து பலமாகக் காலூன்றிவிட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

football

“கேரளா, அஸ்ஸாம், மணிப்பூர் பக்கம்தான் ஃபுட்பால் பாக்கரவங்க இருக்காங்க. இந்த மும்பை, சென்னைலாம் வெறும் கிரிக்கெட் மட்டும்தான். அவங்களுக்கு வேறு ஒன்னும் தெரியாது" - டெல்லியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியபோது அருகிலிருந்த மும்பைவாலா புலம்பியது ஞாபகம் வந்தது. அவர் சொன்னபோது நான் அதை மறுக்கவில்லை. இங்கு கால்பந்துக்கு என்ன மரியாதை என்பது எனக்குத் தெரியும்.

கொச்சியின் ஜவஹர்லால் நேரு மைதானம் கேரளா பிளாஸ்டர்ஸின் ஹோம் கிரவுண்ட். ஒவ்வொரு போட்டியும் கூட்டம் நிரம்பி வழியும். மைதானமே மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சென்னையில் இருப்பதுவும் நேரு மைதானம்தான். இருக்கைகள் எண்ணிக்கை அதில் பாதிதான். ஒரு போட்டிக்குக் கூட முழுதாக நிரம்பியதாக நினைவில்லை. சேப்பாக்கம் அரங்கில், போட்டி தொடங்கியபிறகும்கூட டிக்கெட் கேட்டு நிற்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஐ.எஸ்.எல் நடக்கும் நேரு மைதானம் அப்படி நிரம்பியதில்லை. அதனால்தான் அந்த மும்பைக்காரர் சென்னை ரசிகர்களைக் குறைகூறியபோது எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தேன். 

நேரு மைதானத்தை நெருங்கியபோதுதான் கிரிக்கெட்டை நேசிக்கும் இந்த நகரில், கால்பந்தை சுவாசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்கள் மைதானத்தை நெருங்க நெருங்க, சத்தம் அதிகரித்தது. அதுவரை அப்படியொரு காட்சியைக் கண்டிராத சென்னைவாசிகள், அதை வீடியோ எடுக்கத் தொடங்கினர். மூர் மார்க்கெட் வழியாக மைதானம் அமைந்துள்ள ரோட்டை அடைந்தது. அங்கு நின்றிருந்த போலீஸார் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் விசித்திரமாகப் பார்த்தனர். ஸ்டேடியம் நோக்கி நடக்கையில், அங்கு இன்னொரு குழு - சூப்பர் மச்சான்ஸ். சென்னையின் எஃப்.சி என கோஷமிட்டுக்கொண்டிருந்தவர்கள், இவர்களைப் பார்த்து, தாங்களும் ஊர்வலம்போக சென்ட்ரல் கிளம்ப ஆயத்தமாகினர். சென்னையின் எஃப்.சி பேருந்து வந்துகொண்டிருந்தது. கோஷம் விண்ணைப் பிளந்தது. வீரர்களுக்கு அதிர்ச்சி. கடந்த 3 ஆண்டுகளில் இப்படியொரு காட்சியை அவர்கள் கண்டதில்லை. ரசிகர்கள் சுற்றி நின்று கத்தியிருக்கிறார்கள். ஆனால், இப்படி நூற்றுக்கணக்கில் ஜெர்ஸி, கொடியென சுற்றி நின்று பாடியதில்லை. ஒருவேளை ஐரோப்பிய ரசிகர்கள்கூட அவர்கள் கண்முன் வந்துபோயிருக்கலாம். 

chennaiyin

நம்மவர்கள் பிரீமியர் லீக், லா லிகா போன்ற தொடர்களை விரும்புவதற்கு வீரர்கள் மட்டும் காரணமல்ல. அங்கிருக்கும் ரசிகர்கள். கால்பந்தை முழுமையாக்குவது ரசிகர்கள்தான். அவர்களைப் பார்த்தாலே கால்பந்தின் மீது காதல் ஏற்பட்டுவிடும். வெறுமனே கத்திக்கொண்டுமட்டும் இருக்க மாட்டார்கள். பாடுவார்கள். ஒவ்வோர் அணிக்கும், ஒவ்வொரு Fan club-க்கும் ஒரு ஸ்பெஷல் பாடல் இருக்கும். அதைக் கோரஸாகப் பாடுவார்கள். அப்போதெல்லாம் சிலிர்த்துப்போகும். பிரீமியர்லீக் தொடருக்கு அதிக ரசிகர்கள் இருக்கக் காரணம் அதுதான். விளையாடுவதை மட்டுமன்றி, அந்த விளையாட்டுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் நம்மால் உணர்ந்திடமுடியும். அந்த மதிய வேளையில் அதே உணர்வு. ஆனால், அது வெயில் சுட்டெரிக்கும் சென்னையில் என்பதுதான் ஆச்சர்யம்.
சென்னையின் எஃப்.சி பேருந்து நுழைந்ததும், பயிற்சியாளர் க்ரிகரியில் இருந்து அனைவரின் பெயரையும் கூறிப் பாடத் தொடங்கினார்கள்.

ஐரோப்பிய ரசிகர்களுக்கு மத்தியில் நின்ற ஃபீலை உணர்ந்துகொண்டிருந்தபோது, மேலும் அதிர்ச்சியளித்தான் ஒரு சிறுவன். "கரன்ஜித்... கரன்ஜித்.... ஹே... தோய் சிங்... அகஸ்டோ... நல்லா விளையாடு" எனக் கத்திக்கொண்டிருக்கிறான். நேரு ஸ்டேடியத்தின் சுவர் கம்பிகளைப் பிடித்து ஏறிக்கொண்டான். கம்பிகள் வழியே வீரர்கள் பேருந்திலிருந்து இறங்குவதைப் பார்த்து குதூகலத்தில் பொங்குகிறான். அவனுக்கு 8-9 வயதுதான் இருக்கும். இந்த வீரர்களின் பெயரெல்லாம் அறிந்துவைத்திருக்கிறான் என நினைத்தபோதுதான் இந்த நகரில் கால்பந்துக்கான விதை எப்போதோ விதைக்கப்பட்டுவிட்டது என்பது புரிந்தது. சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸின் மஞ்சளாய் மாறுமெனில், நேரு ஸ்டேடியம் இனிமேல் ப்ளூ என்பது புரிந்தது!

football

மைதான வாயிலெங்கும் சென்னை அணியின் ஜெர்சி, பேன்ட் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. CFC  என்ற மூன்று எழுத்துகளை ரசிகர்களின் முகத்தில் பெயின்ட் கொண்டு எழுதிக்கொண்டிருந்தனர் சிலர். இரு கன்னங்களிலும் எழுத 50 ரூபாய்! யோசிக்காமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலரும் எழுதிக்கொண்டனர். கிரிக்கெட், கபடி போட்டிகள் தொடங்குவதற்கு முன், மைதானத்துக்கு முன் நின்று டிக்கெட் கேட்பவர்களெல்லாம் பெரியவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அப்போது நின்றதெல்லாம் 10, 15 வயதுச் சிறுவர்கள். "அண்ணா டிக்கெட் இருந்தா கொடுங்கண்ணா" என டிக்கெட்டோடு சுற்றியவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிருபர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையில் ISL என எழுதியிருக்கவே, "உள்ளதான போறீங்க, எங்களையும் கூட்டிட்டுப் போங்க" என்ற அந்தக் கண்களில் கால்பந்தை நேரில் காண முடியாத ஏக்கம். 

"ஃபுட்பால் பாப்பியா?".

"ம்ம்..பாப்பேனே...அதான் எனக்கு ரொம்ப புடிக்கும்"

"எந்த ப்ளேயர் உனக்கு ஃபேவரிட்". மெஸ்ஸி அல்லது ரொனால்டோ என்னும் பைனரி பதிலை எதிர்பார்த்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

"மெண்டோசா" - கொஞ்சம் அதிர்ச்சிதான். அவனுக்கு 11 வயது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அணிக்காக ஆடிய வீரனை நினைவு வைத்திருக்கிறான். அப்போதே இந்த விளையாட்டை வெறித்தனமாய் ரசித்திருக்கிறான். 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையை நேரில் கண்டபோது இருந்த மகிழ்ச்சியைவிட அப்போது அதிகமாகவே இருந்தது. கால்பந்து வேரூன்றி படரத் தொடங்கிவிட்டது என்ற நம்பிக்கை பிறந்தது. 

football

மைதானம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிரம்பியது. 19,500 தான் நேரு ஸ்டேடியத்தின் இருக்கை வசதி. வெள்ளிக்கிழமை இரவு கொச்சியில் நடந்த தொடக்க விழாவில் 40,000 ரசிகர்கள். பார்க்கவே மெர்சலாக இருந்தது. இங்கு சென்னையை நினைக்கையில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. முதல் பாதி முடியும் தருவாயில் 18,213 என்று 'அட்டெண்டன்ஸ் அப்டேட்' வந்துசேர்ந்தது. குறைவுதான். ஆனால், வெளியே ஊர்வலம் போன அந்த ரசிகர்படையும், டிக்கெட் கேட்டுத் திரிந்த அந்தச் சிறுவர்களுமே போதும். VIP டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, டி.வி-யில் முகம்காட்டிவிட்டு, அணி தோற்கும் எனத் தெரிந்தாலே எழுந்துபோகும் பிளாஸ்டிக் ரசிகர்கள் கால்பந்துக்குத் தேவையில்லை. கால்பந்தை நேசிக்கும் அந்த நூற்றுச்சொச்சம் ரசிகர்கள் அரங்கினுள் இருக்கிறார்கள். 

பிரஸ் ஏரியாவை ஒட்டித்தான் மைதானத்தின் B stand. அந்த B stand Blue குரூப் கொஞ்சம் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தது. பயிற்சிக்கு வீரர்கள் வரத்தொடங்கியதிலிருந்தே சத்தம். புது பயிற்சியாளர் க்ரிகரியை வரவேற்றது, பழைய பயிற்சியாளர் மடரசிக்கு நன்றி தெரிவித்தது என அப்படியே பிரீமியர் லீக் ரசிகர்களைப்போல் மாறியிருந்தனர். 38-வது நிமிடம், சென்னை 3-0 எனப் பின்தங்கிவிட்டது. உற்சாகம் குறையவில்லை. அவர்களின் அந்த ஆரவாரம்தான் இரண்டாம் பாதியில் சென்னைக்குக் கம்பேக் கொடுத்தது என்றே சொல்லலாம். எதிர்ப்புறமிருந்த சூப்பர் மச்சான்ஸ் குழுவும் ஆர்ப்பரிக்க, மெரினா அரினா அதிரத்தொடங்கியது. 90 நிமிடங்கள் முடிந்தன. சென்னை தோற்றுவிட்டது. மேற்கூறிய அந்த பிளாஸ்டிக் ரசிகர்கள் உடனே வெளியேறத் தொடங்கிவிட்டனர். போட்டி முடிந்ததும் ரசிகர்கள் வீரர்களுக்கும், வீரர்கள் ரசிகர்களுக்கும் நன்றி சொல்வது கால்பந்து கலாசாரம். வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறும்வரை அவர்கள் கிளம்பவில்லை. "We are the chennai guys" என்று முழங்கிக்கொண்டே இருந்தனர். 

'யாருடா இந்த வெறித்தன ரசிகர்கள்' என்று அவர்களைச் சந்தித்தேன். ராஜா, செல்வபாண்டியன், அழகுராஜா, மணி என ஒவ்வொருவரும் கால்பந்தின் மீதான நேசத்தை, கடந்த வாரம் பெய்த மழையைப் போல் இடைவிடாமல் கொட்டினார்கள். "Footballதான் எல்லாமே. வெறித்தனமான செல்சீ ஃபேன் நாங்க. வாராவாரம் ஸ்க்ரீனிங் வைப்போம். அண்டர் 17 வேர்ல்டு கப் இந்தியால இந்த அளவு சக்ஸஸ் ஆனதும், நம்ம கேம்ம முடிஞ்ச அளவு ப்ரமோட் பண்ணனும்னு முடிவு செஞ்சோம். அதனால்தான் இந்த ஏற்பாடு" என்கிறார் செல்வபாண்டியன். ஒவ்வொரு செல்சீ மேட்சையும் ஸ்க்ரீனிங்கில் பார்ப்பதற்காக மேல் மருவத்தூரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னை வருகிறார்கள் அழகுராஜாவும் அவரும். இருவரும் மருத்துவர்கள். சென்னையின் எஃப்.சி-காக ஒருபடி மேலே செல்லத் தயாராகிவிட்டார்கள்.

"B stand-ல நாங்க எப்போமே இருக்கறதால B stand Blues (BSB)-னே பேரு வெச்சிட்டோம். டீம் ஓனர் அபிஷேக் பச்சன் சாரை மீட் பண்ணியிருக்கோம். எங்களோட சப்போர்ட் பாத்து பாராட்டிருக்கார். ISL முதல் மூனு சீசனும் வீக் டேஸ்ல (Week days) நடந்ததால எல்லாராலும் எல்லா மேட்சும் போக முடியல. கோ-ஆர்டினேட் பண்ண முடியாம போச்சு. ஆனா, இந்த முறை 5 மாச சீஸனா மாத்தி, week end மட்டும் மேட்ச்கள் நடக்கறதால, சென்னை டீம்க்கு எவ்ளோ சப்போர்ட் பண்ண முடியுமோ அதைப் பண்ணனும்னு முடிவு பண்ணோம். அதனால செல்சீ ரசிகர்கள் மட்டுமில்லாம, ஸ்க்ரீனிங் ஏற்பாடு செய்ற எல்லா டீம் ரசிகர்களையும் ஒருங்கிணைச்சோம். இப்பக்கூட நிறைய பேரால வரமுடியல. 150 பேர் எதிர்பார்த்தோம். பிளானிங் சரியா இல்ல. இனி அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு அதிகம்பேர் வருவாங்க" என்கிறார் அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா. 

BSB

கால்பந்தைப் பொறுத்தவரையில் ஒரு அணிக்கு நாம் எந்தளவு சப்போர்டிவாக இருக்கிறோம் என்பது away games-ஐப் பொறுத்துதான். எதிரணியின் சொந்த ஊரில் நம் அணிக்கு ஆதரவளிக்கவேண்டும். அந்த அணியின் ஆயிரக்கணக்கான ரசிகர்களைத்தாண்டி, மிகச்சொற்பமாக இருக்கும் நம் குரல் ஒலிக்கவேண்டும். இந்த ரசிகர்கள் அதற்கும் தயாராகிவிட்டனர். சென்னை அணியின் away ஆட்டங்களுக்கும் படையெடுத்து, அணிக்கு ஆதரவளிப்பது என முடிவெடுத்துள்ளனர். வெளியூர்களுக்குச் செல்வதற்கு டிக்கெட்டிலிருந்து, பேருந்து வரை அனைத்தும் ரெடி. கால்பந்து மட்டும் தரம் உயர்ந்தால் போதாது. ரசிகர்களும் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும். இதோ BSB பாய்ஸ் கிளம்பிவிட்டனர். சென்னை மட்டுமல்ல, கால்பந்து எனும் விதை இந்தியா முழுக்க விருட்சமடைந்துகொண்டிருக்கிறது. இதோ ஒரு கால்பந்து தேசம் பிறந்துகொண்டிருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்