Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 1

WWE

Chennai: 

பகுதி 1:

வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் சுருக்கமாக `WWE'. சீமான் ஸ்டைலில் சொன்னால், உலக மற்போர் மகிழ் கலை நிறுவனம். பல ஆண்டுகளாக `ப்ரோ ரெஸ்லிங்' எனப்படும் வல்லுநர் மல்லாடல் போட்டிகளை நடத்திவரும் மிகப் பிரபலமான நிறுவனம். வெறும் ஜட்டிதான் அணிந்திருப்பார்கள். ஆனால், பெல்ட்டுக்காக அடித்துக்கொள்வார்களே... அவர்களேதான். அவர்களைப் பற்றித்தான் இந்தத் தொடர் முழுக்கப் பேசவிருக்கிறோம். ஏனெனில், கிரிக்கெட், சினிமாவைத் தாண்டி பெரும்பாலான இந்தியச் சிறுவர்களின் பேசுபொருளாக இருந்தவர்கள் / இருக்கிறவர்கள் இந்த பெல்ட் ப்ரியர்கள்தான்.

நாம் கிழித்துப் போட்ட காலண்டர் பேப்பர்களிலும், கடிகார முள் கடந்து வந்த நேரத்திலும் பசை தடவி அவர்களை ஒட்டவைத்திருக்கிறோம். என்றோ ஒருநாள் அவர்களின் முகமோ, பெயரோ நம் மூளைக்கு எட்டும்போது, அங்கே ஒட்டியிருந்தவர்கள் நம்மை பிற்காலத்துக்கு இழுத்துவிடுகிறார்கள். அந்தத் தாள்களும் நிமிடமும் தாங்கியிருக்கும் வேறு பல நினைவுகளையும் மீட்டெடுத்து தருகிறார்கள். எனவே, இது ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை உங்களுக்குள் கிளப்பிவிடும் பயோ டெக்னாலஜி தொடராகவும் இருக்கலாம்! 

WWE

முதல் நாள் மாலை `ரா'வையோ, `ஸ்மேக் டவுனை'யோ பார்த்துவிட்டு, அன்றிரவே அதன் மறுஒளிபரப்பையும் `கொட்ட கொட்ட' கண் விழித்துப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் காலையும் அலாரம்வைத்து எழுந்து அதன் `மறுமறு'ஒளிபரப்பையும் பார்த்தவர்கள் நிறையபேர். சிலர் ஆர்வமின்மை, நேரமின்மை போன்ற காரணங்களால் பார்ப்பதை நிறுத்தியிருப்பீர்கள். இன்னும் சிலர் ஒருசில எபிசோடுகளை மட்டும் பார்த்துவிட்டு, `இது ஃபேக். அத்தனையும் நடிப்பு. இதெல்லாம் எப்படித்தான் பார்க்கிறாய்ங்களோ!' எனச் சலித்திருப்பீர்கள். உண்மையில், ப்ரோ ரெஸ்லிங்கில் வீரர்கள் நிஜமாகவே அடித்துக்கொள்வதில்லை என்பது, பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெரியும். பிறகு ஏன் அதை ரசிக்கிறோம்?

ப்ரோ ரெஸ்லிங் போட்டிகள் `ஃபேக்'கானது எனும் வார்த்தையைவிட `ஸ்க்ரிப்ட்' செய்யப்பட்டது எனும் வார்த்தைதான் பொருத்தமானதாக இருக்கும். சண்டை தொடங்குவதற்கு முன்பே இங்கே வெற்றியாளன் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறான். ஒரு மேடை நாடகத்தில் வரும் சண்டைக்காட்சியைப் போன்றுதான் ப்ரோ ரெஸ்லிங் போட்டிகளைப் பார்க்க வேண்டும். அது எவ்வளவு சுவாரஸ்யமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் மேட்டர். சில நேரங்களில் அதை அரங்கேற்றும்போது ஏற்படும் தவறுகளால் நிஜமாகவே அடிபடும், எலும்பு உடையும், சதை கிழியும், ரத்தமும் வழியும். சண்டைனா சட்டை கிழியத்தானே செய்யும்!

உங்களைப் போன்றே `WWE' பற்றி மணிகணக்காகப் பேசிய, டிரம்ப் கார்டுகள் வாங்கிக் குவித்த, தலையணைக்கு அண்டர்டேக்கர் ஸ்மேக் போட்ட, அட்டையை வெட்டி சாம்பியன்ஷிப் பெல்ட் செய்த, ட்ரிப்பிள் ஹெச்சைப் போன்று தண்ணீரைத் தனக்குதானே துப்பிக்கொண்ட WWE-யின் வெறித்தன ரசிகனாகத்தான் இதை எழுதுகிறேன். கோல்டன் ஏஜ், நியூ ஜெனரேஷன். ஆட்டிட்யூட் எரா, ரூத்லெஸ் அக்ரஷன் எரா, பிஜி எரா, தி ரியாலிட்டி எரா, தி `நியூ' எரா என அனைத்து எரா இறால் குழம்பையும் ரௌடி பைப்பர் முதல் ரோமன் ரெய்ன்ஸ் வரை எல்லா படா பயில்வான்கள் பரும்பு சாம்பாரையும் பற்றிப் பேசுவோம். 

அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர், ஸ்டோன் கோல்டு தம்பிதான் கோல்டுபெர்க் போன்ற கலகலப்பான விஷயங்களையும், கிறிஸ் பெனாய்ட் மரணம், மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப் போன்ற சலசலப்பான விஷயங்களையும், த்ரிஷ் ஸ்ட்ராடஸ், லீடா, டோரி வில்ஸன் போன்ற கிளுகிளுப்பான விஷயங்களையும் இன்னும் சுவாரஸ்யமான பல அம்சங்களையும் அடுத்தடுத்து வரும் பகுதிகளில் ஆற அமர அலசுவோம்.

WWE-யில் ரசிகர்களாக இருக்கும் பிரபலங்களின் பேட்டிகளும் லிஸ்ட்டில் இருக்கின்றன. ஆர் யூ ரெடி?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement