டிக்ளேர் பண்ணலாமா? முதல்ல நீ சதம் அடி...! சைகையில் பேசிய கோலி - ரவி சாஸ்திரி #kohli

கொல்கத்தா டெஸ்ட்டின் கடைசி நாள். இரண்டாவது செஷனில் ஒரு டிரிங்ஸ் பிரேக். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 321/7. கிட்டத்தட்ட 200 ரன்கள் முன்னிலை. விராட் கோலி 86 ரன்களில் நாட் அவுட். இன்னும் ஒரு Session மட்டுமே உள்ளது. என்ன செய்யலாம்? யோசிக்கிறார். களத்தில் இருந்தபடியே, டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சைகையில் பேசுகிறார்.

கோலி: டிக்ளேர் செய்யலாமா?

ரவி  சாஸ்திரி: இன்னும் 20 ரன்கள் , 4 ஓவர் (சைகையில்)...

விராட் கோலி

இது கோலிக்குப் புரியவில்லை. ‘சப்ஸ்டிட்யூட் பிளேயரிடம் தகவலைச் சொல்லி அனுப்புங்கள்’ என சிக்னல் கொடுக்கிறார். ரவி சாஸ்திரி உடனடியாக ஒரு சப்ஸ்டிட்யூட் பிளேயரை களத்துக்கு அனுப்புகிறார்.

இன்னும் 4 ஓவர்கள்... 20 ரன்கள் இலக்கு...

இதுதான் கோலிக்கு ரவி சாஸ்திரி சொல்லி அனுப்பிய மெசேஜ். அதாவது, விராட் கோலியின் சதத்துக்கு இன்னும் 14 ரன்கள் மட்டுமே தேவை. அந்த நான்கு ஓவர்களில் சதம் அடித்துவிட வேண்டும். அதேநேரத்தில் இலங்கைக்கும் ஒரு டார்கெட் பிக்ஸ் செய்தது போலிருக்கும். கோலிக்கு விஷயம் புரிந்தது. முடிந்தவரை விரைவாக சதம் அடிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், எதிர்முனையில் இருந்த புவனேஷ்வர் குமார், காமேஜ் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் திணறினார்.

நான்காவது பந்தில் புவனேஷ்வர் குமார் அவுட். முகமது ஷமி இன். கடைசி பந்தில் அவர் ரன் எடுக்காமல் இருந்திருந்தால், விராட் அடுத்த ஓவரில் சட்டுபுட்டுன்னு வேலையை முடித்திருப்பார். வினை... எட்ஜ் வழியே வந்தது. கடைசி பந்தில் ஷமி ஒரு சிங்கிள் எடுக்க, வேறு வழியில்லாமல் லக்மல் வீசிய அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் அவரே எதிர்கொண்டார். நல்லவேளை மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வந்த அடுத்த நிமிடமே ஆக்ரோஷமானார் கோலி. ஃபுல் லென்த் டெலிவரியை அசால்ட்டாக  எக்ஸ்ட்ரா கவரில் பளிச்சென ஒரு அறை. வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்ரேக்கர்  ‘வாவ்’ என அலறினார். ஆம், அற்புதமான சிக்ஸ். அடுத்த மூன்று பந்துகளில் கோலி எடுத்தது நான்கு ரன்கள். இந்தியாவின் ஸ்கோர் 333/8. விராட் கோலி 92 ரன்கள். சர்வதேச அரங்கில் 50-வது சதத்தை அடிக்க இன்னும் 8 ரன்களே தேவை. 

கோலி

காமேஜ் வீசிய அடுத்த ஓவரில் கோலி சந்தித்த இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார். அதேநேரத்தில் ஷமி அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விளாச, கோலி பொறுமை காத்தார். விராட் 97 ரன்களில் நாட் அவுட். இந்தியா  221 ரன்கள் முன்னிலை. ‘போதுமா, டிக்ளேர் செய்துவிடலாமா?’- களத்தில் இருந்து ரவி சாஸ்திரியிடம் கேட்கிறார் கோலி.  ‘இன்னும் ஒரு ஓவர்’ என ரவி சாஸ்திரியிடம் இருந்து பதில் வந்தது. பந்துவீச வந்தார் லக்மல். முதல் பந்தில் தேர்ட்மேன் ஏரியாவில் ஒரு சிங்கிள். அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு பந்தை வேஸ்ட் செய்து, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார் ஷமி. நான்காவது பந்து. எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. இரண்டு ஸ்டெப் இறங்கி வந்து மீண்டும் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ். விராட் சதம். சர்வதேச அரங்கில் 50-வது சதம். வழக்கம்போல தனக்கே உரிய பாணியில் கொண்டாட்டம்.

ரசிகர்கள் கைதட்டுகின்றனர்; டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த வீரர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். ரவி சாஸ்திரி கைதட்டுகிறார். Mission accomplished. நான்கு ஓவர்களில் 20 ரன்கள் டார்கெட் வைத்தார் அவர். ஆனால், இந்தியா அடித்தது 31 ரன்கள். அதில் விராட் அடித்தது 19. ஒருவழியாக சதமும் அடித்துவிட்டார். இருவருக்கும் பரம திருப்தி. இலங்கையின் இலக்கு 231 ரன்கள். டீ பிரேக்குக்கு அரை மணி நேரத்துக்கு முன்பே டிக்ளேர் செய்துவிட்டது இந்தியா. டிஃபென்ஸிவ் மைண்ட் செட்டில் விளையாடியதால் இலங்கை 26.3 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்தது. மேட்ச் டிரா

கோலி

ஒரு கட்டத்தில், முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவியது. அப்படி செய்திருந்தால், 45-க்கும் மேற்பட்ட ஓவர்களில் 200 ரன்கள்தான் இலக்கு என்றிருந்திருக்கும்.ஒரு session- முழுமையாக இருப்பதால், இலங்கையும் சேஸ் செய்ய முனைப்புக் காட்டியிருக்கும். ஆனால், ரவி சாஸ்திரி சொன்னபடி அந்த நான்கு ஓவர்கள் விளையாடியதால், required run rate நான்கில் இருந்து ஐந்துக்கு எகிறியது.

கோலி அடிக்கடி ‛தனி நபர் சாதனையை விட  அணியின் நலன் முக்கியம்’ என சொல்லியிருக்கிறார். அவர்தான் கேப்டன் என்பதால், சதம் அடித்தபின், மற்ற விஷயத்தைப் பற்றி யோசித்திருக்கலாம். அதேநேரத்தில், அவர் ரவி சாஸ்திரி சொன்னதை அப்படியே கேட்டுக் கொண்டதும் பாஸிட்டிவான விஷயம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!