வெளியிடப்பட்ட நேரம்: 08:03 (23/11/2017)

கடைசி தொடர்பு:08:03 (23/11/2017)

ஆஸ்திரேலியாவின் வெற்றி வரலாற்றை திருத்தி எழுதுமா இங்கிலாந்து?! #Ashes

"You hit me once I hit you back. You gave a kick I gave a slap"

'ஆஷஸ்' தொடரின் முன்னோட்டத்தை இப்படித்தான் ஆரம்பித்து வைத்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். ஏன் இப்படி என நினைப்பதற்குள்,  2013-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஹைலைட்ஸைப் போட்டு, இந்த ஆஷஸ் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது அந்த சேனல். அன்று கெவின் பீட்டர்சன், ஜானதன் டிராட், க்ரீம் ஸ்வான் என ஒரு தலைமுறைக்கான இங்கிலாந்து வீரர்களை நிலைகுலையவைத்த 'ஆஷஸ்' இன்று தொடங்குகிறது.  இந்தமுறை, கொஞ்சம் கட்டுக்கோப்புடன் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வீரர்களின் நடத்தை குறித்து பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC). கால்பந்தில் இருப்பதைப்போல, யெல்லோ, ரெட் கார்டுகளை கள நடுவர்கள் வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளது. மேலும், ஐபிஎல் போன்ற போட்டிகளால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நட்புடன் பழகும்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஆனாலும், ஆஷஸின் அந்த மாஸ் எலிமன்ட்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

Ashes

வரலாறு:

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 1882-ல் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றவுடன், அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்று, "இங்கிலாந்தில் கிரிக்கெட் செத்துவிட்டது' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிடவே, அதுமிகப்பெரிய மானக்கேடாகி போனது. அந்த போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸை எரித்து, அதனின் சாம்பலைக் கொண்டு நிரப்பப்பட்ட சிறிய கோப்பை ஒன்றுக்காக விளையாடப்படும் தொடர்தான் ஆஷஸ். ஆனால், இதையெல்லாம் தாண்டி வெவ்வேறு குணாதிசயங்களும், பாரம்பரியமும் இதற்கு உண்டு. 

முன்னோட்டம்:

மைக்கேல் கிளார்க், அலிஸ்டர் குக் இருவரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வித்தைகளை கற்று, இன்று தங்கள் அணிகளுக்கு தலைவர்களாக உயர்ந்து நிற்கும் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். இதை இருவரும் பலமுறை நிரூபித்து விட்டனர். ஸ்டீவ் ஸ்மித், இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற முக்கியமான சுற்றுப்பயணங்களில் ஏற்பட்ட படுதோல்விகளுக்கு தன்னுடைய சொந்த மண்ணில் ஆறுதல் தேட ஆயத்தமாகி இருப்பார். அதே நேரத்தில், கேப்டனாக, ஜோ ரூட்டிற்கு சவாலான ஒரு தொடராக இது அமையும். முதன்முறையாக ஆஸ்தேரேலிய மண்ணில் திறம்பட வழிநடத்தி, தொடரை வெல்லும் முனைப்பில் ஜோ ரூட் தன்னையும் அணியையும் தயார்படுத்தியிருப்பார்.

ஆஸ்திரேலியா v இங்கிலாந்து  (பேட்டிங்)

ஆஷஸ்

இந்த தொடரைப் பொறுத்த வரையில், இரு அணிகளுக்குமே பெரிய தலைவலியாக இருக்கப்போவது நடுவரிசை ஆட்டக்காரர்கள்தான். இரு அணிகளிலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தால் நிலைத்து நின்று, 'இந்த ஒரு பேட்ஸ்மேன் அணியைத் தூக்கி நிறுத்திவிடுவார்' என்று சொல்லத் தகுந்த வீரர்கள் இல்லை. சுய கட்டுப்பாடில்லாத காரணத்தால் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட, ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சோபிக்காமல்இருப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பெரிய இழப்பு

இங்கிலாந்தின் மிடில் ஆர்டரில் ஜோ ரூட்டைத் தவிர, சொல்லிக்கொள்ளும்படி வேறு யாரும் இல்லை. விக்கட் கீப்பராக ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலியின் பன்முகத்தன்மையை நம்பி புதிய வீரர்களையும், அதிக அனுபவமில்லாத வீரர்களையும் களமிறக்குகிறார்கள். இதில், யாரேனும் ஒருவர் சொதப்பினாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வீரரை கட்டம்கட்டி தூக்கி விடுவார்கள். இப்படித்தான் சென்ற முறை, ஜானதன் டிராட், "நான் விலகிக்கொள்கிறேன்.." என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இரண்டு போட்டிகளிலேயே விலகிக்கொண்டார். க்ரீம் ஸ்வானுக்கும் கிட்டத்தட்ட அதே கதி. ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, பத்திரிகைகள், ரசிகர்களின் கூச்சல், ஏச்சுக்கள் என எதிரணியினரை ஆஸ்திரேலியா டீல் செய்வதே வேற லெவலில்தான். இந்த ஒரு காரணத்தினாலேயே, ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிபெறுவதும், சாதிப்பதும் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகி விட்டது.

ஆஷஸ்

ஆஸ்திரேலியாவும் இந்தமுறை கடும் சவாலைச் சந்திக்கும். எதிரணி மூலம் அல்ல, தன்னுடைய சொந்த வீரர்கள் மூலமாகவே. வார்னர், ஸ்மித் என இரண்டு வீரர்களைச் சுற்றியே மற்றவர்கள் ஆட வேண்டுமென்கிற கட்டாயம். ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா போன்றவர்கள் அவ்வப்போது ஜொலித்தாலும், ஆஸ்திரேலியாவின் தரத்துக்கேற்ப அவர்கள் உள்ளனரா என்றால் ஆஸ்திரேலியர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நெடுங்காலமாக தன்னுடைய திறமையை நிரூபிக்காமல் இருந்த மேத்யூ வேடை நிர்வாகம் ஓரம்கட்டியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார் விக்கட் கீப்பர் டிம் பெயின். அவரது செயல்பாடு அனியின் வெற்றி/தோல்வியில் பெரும் பங்கு வகிக்கும்.

பௌலிங்:

Ashes

இரு அணிகளுமே பௌலிங் டிபார்ட்மெண்டில் சம பலத்தில் உள்ளன. ஏறக்குறைய ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவருக்குமே இது கடைசி ஆஷஸ் தொடராக அமையக்கூடும். ஆனாலும், இன்னமும் டெஸ்ட்அரங்கில் அட்டகாசமாகச் செயல்படும் வேகப்பந்து வீச்சாளர்கள். மொயீன் அலி தன்னுடைய திறமையை அப்படியே பௌலிங் பக்கம் திசை திருப்பி உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னராக உருமாறியுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமில்லாத ஆடுகளங்களில் தன்னுடைய உடம்பை வளைத்தும், மணிக்கட்டிலிருந்து வெவ்வேறு ஆங்கிள்களில் பந்தை விடுவித்து விக்கெட் வீழ்த்துவதிலும் வித்தைக்காரர். 

ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்தைப் போல, அனுபவம் நிறைந்த பந்துவீச்சாளர்கள் இல்லையென்றாலும், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹெசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயான் போன்றவர்கள் வேகம், ஸ்விங், துல்லியம், ஸ்பின் என அனைத்து பாக்ஸ்களிலும் டிக் அடித்து வைத்துள்ளனர். முதல் போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் மைதானம் ஆஸிக்கு ராசியான மைதானம். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதால், முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கை ஒங்குமென்றே தெரிகிறது.


டிரெண்டிங் @ விகடன்