ஆஷஸ்... இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைக் கடந்த அரசியல் சதுரங்கம்! #VikatanExclusive #Ashes | Why Ashes is so important

வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (24/11/2017)

கடைசி தொடர்பு:14:51 (24/11/2017)

ஆஷஸ்... இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைக் கடந்த அரசியல் சதுரங்கம்! #VikatanExclusive #Ashes

ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் தலைமையிலான இரு படைகளும் தயாராகிவிட்டன. பல இங்கிலாந்து வீரர்களின் வாழ்க்கையை முடிக்கப்போகிறோம் என சவால் விடுத்திருக்கிறார் நாதன் லயான். இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் இந்தப் போரைக் காண ஆயத்தமாகிவிட்டினர். நைட் ஷிப்ட் முடிந்து வந்தும், அதிகாலை 5 மணிக்கு சோனி சிக்ஸ் முன் அமர்ந்துவிட்டனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இது, இங்கிலாந்து  - ஆஸ்திரேலியா மேட்ச் மட்டுமல்ல;  இரு நாடுகள் மட்டும் சம்பந்தப்பட்ட மேட்ச் அல்ல. கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் யுத்தம். ஆஷஸ்... கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய யுத்தம், தன் பாணியிலேயே தொடங்கியிருக்கிறது.

Ashes

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மோதுகிறதென்றால் கடைகள் சீக்கிரம் மூடப்படும். சாலைகள் வெறிச்சோடிவிடும். கல்லூரியில் ப்ராக்சிகள் அதிகம் விழும். மைதானத்தில் போலீஸ் படையே நின்றிருக்கும். முக்கியமாக வாகா எல்லையில் உஷ்ணம் அதிகரித்திருக்கும். முக்கிய போட்டியெனில் பிரதமர்கள் மைதானத்தில் அட்டெண்டன்ஸ் போட்டிருப்பார்கள். கிரிக்கெட் போட்டிதான். ஆனால், மொத்த தேசத்தையும் கட்டிப்போட்டிருக்கும். ஆஷஸ்... இதற்கெல்லாம் ஒரு படி மேல். அரசியல் பதற்றம் இல்லை. ஆனால், மொத்த உலகமுமே உற்று நோக்கும். ஒவ்வொரு வீரனின் பேட்டியிலிருந்து, களத்தில் கொடுக்கும் சின்ன ரியாக்ஷன் வரை அனைத்தும் அனல் தெறிக்கும்.

இது டி-20 யுகம். வங்கதேசம்கூட டி-20 லீக் நடத்தத் தொடங்கிவிட்டது. இந்திய அணிக்கு ஸ்பான்சர் பிடிக்க பி.சி.சி.ஐ திணற, ஐ.பி.எல் அணிகளின் சட்டை முதல் ஹெல்மட் வரை ஸ்பான்சர்களின் லோகோக்கள். இந்தியாகூட சேவாக்குக்காக மட்டும்தானே டெஸ்ட் போட்டிகள் பார்த்தது. ஆனால், இந்த இரு நாட்டவர் மட்டும் இன்னும் அந்தப் பழைய போரிங் ஃபார்மட்டையே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களே ஏன்? ஐ.பி.எல் போட்டியில் விளையாட டெஸ்ட் போட்டியிலிருந்து மலிங்கா ஓய்வுபெற்றால், டெஸ்ட் போட்டியில் விளையாட, மிட்சல் ஸ்டார்க் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுகிறாரே ஏன்? ஆஷஸ்... ஒரு சாதாரண டெஸ்ட் போட்டி என்பதற்கும் மேல்... அது கிரிக்கெட்டுக்கும் மேல்...

Ashes

கிரிக்கெட், இங்கிலாந்தில்தான் உருவம் பெற்றது. சூதாட்டம் நடத்த மிகப்பெரிய வாய்ப்பிருப்பதால், அது அவர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காக மாறியது. உலக நாடுகளின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதில் பிஸியானவர்கள், அங்கு பொழுதுபோவதற்காக கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார்கள். எவ்வளவு நாடுகளை ஆண்டபோது ஆஸ்திரேலியாவைத் தேர்வு செய்தது ஏன்? அதற்கு ஹிஸ்டரி, ஜியாக்ராஃபியை கொஞ்சம் தூசு தட்டவேண்டும்.

ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் கால்பதித்தது 1606-ல். இங்கிலாந்துக்காரர்கள் 80 ஆண்டுகள் கழித்துத்தான் ஆஸ்திரேலியாவை அடைந்தனர். 1770 வாக்கில் நியூ சவுத் வேல்ஸை சொந்தம் கொண்டாடத் தொடங்கி, தங்களின் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஆஸ்திரேலியா, பரப்பளவில் இந்தியாவைவிட இரண்டு மடங்கு பெரிய நாடு. ஆனால், மக்கள்தொகை மிகவும் குறைவு. இன்றைய தேதியில் சுமார் இரண்டரைக் கோடி மக்கள்தான் அங்கு வசிக்கிறார்கள். இது, இந்தியாவைவிட 60 மடங்கு குறைவு. 18-ம் நூற்றாண்டிலோ மக்கள்தொகை மிகச்சொற்பம். அதனால், பல ஆங்கிலேயர்கள் இங்கு புலம்பெயரத் தொடங்கினர். பாண்டிச்சேரி பிரெஞ்சுக் காலனி ஆனதுபோல், ஆஸ்திரேலியாவில் பல நகரங்கள் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அதனால், இங்கிலாந்து அரச குடும்பம் இந்தியா, தென்னாப்பிரிக்காவில் செய்ததுபோல் அங்கு அடக்குமுறையைக் கட்டவிழ்க்கவில்லை.

Australia

ஆஸ்திரேலிய கலாசாரம், ஆங்கிலேய கலாசாரத்தோடு பிண்ணிப் பிணைந்தது. 'Aussies', 'Oz', 'Down under' என்ற பெயர்கள்கூட ஆங்கிலேயர்கள் வைத்ததுதான். ஒருகட்டத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியர்களுக்கும் ஃபேவரிட் கேம் ஆனது. 1872-ல் கால்பந்தை ஸ்காட்லாந்தின் துணைகொண்டு சர்வதேச அரங்குக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து, ஐந்து ஆண்டுகள் கழித்து கிரிக்கெட்டை உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்ல திட்டமிட்டது, அதுவும் ஆஸ்திரேலியாவின் துணையுடன்...

1877, மார்ச்  15 - உலகின் முதல் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. கிரிக்கெட்டைத் தோற்றுவித்தவர்களுக்கு முதல் போட்டியிலேயே தோல்வி. சுமார் 10 ஆண்டுகள் இந்த இரு அணிகள் மட்டுமே மோதின. ஆனால், இங்கிலாந்தால் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை. ஆஸ்திரேலியாவும் ஈடுகொடுத்து வெற்றிகள் பெற்றதால், இங்கிலாந்து வேறு பிளான் போட்டது.

1889, போர்ட் எலிசபத் - அடுத்த அடிமை தென்னாப்பிரிக்காவை காலி செய்யும் பொருட்டு, கிரிக்கெட் அந்தஸ்து கொடுத்து அவர்களோடு மோதியது. இப்படித்தான், தான் ஆட்சிபுரிந்த ஒவ்வொரு நாட்டிலும் கிரிக்கெட்டை விதைத்தது இங்கிலாந்து. 1877-ல் ஆஸ்திரேலியா, 1889-ல் தென்னாப்பிரிக்கா, 1928-ல் மேற்கிந்தியத் தீவுகள், 1930-ல் நியூசிலாந்து, 1932-ல் இந்தியா என சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த ஒவ்வொரு அணிகளுமே இங்கிலாந்தின் காலனிகளாக இருந்தவை. இந்த 5 நாடுகளும் தங்களின் முதல் போட்டியில் எதிர்த்து விளையாடிய அணி -  இங்கிலாந்து. அதன்பிறகு 52-ல் பாகிஸ்தான், 75-ல் இலங்கை, 83-ல் ஜிம்பாப்வே, 86-ல் வங்கதேசம் ஆகிய அணிகள் கிரிக்கெட் அரங்கினுள் நுழைந்தன. அந்த நாடுகளும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவையே. ஆக, கிரிக்கெட் என்பது இங்கிலாந்து எனும் எஜமான், தன் அடிமைகளை விளையாட்டு எனும் போர்வை போத்தி அடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கேம் என்பதே நிதர்சனம். ஆனால் என்ன... காலனிகளெல்லாம் உலகக்கோப்பையை பலமுறை வென்றுவிட, இங்கிலாந்து இன்னமும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறது.

சரி, ஆஷஸ் பக்கம் போவோம்...

England

ஆஸ்திரேலியர்களுக்கு இந்த வெற்றி முக்கியமாக இருப்பதற்குக் காரணம் இதுதான். தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களை வீழ்த்தவேண்டும். 1982-83 சீசனில் அந்த அணிகளுக்கு இடையிலான தொடர் 'ஆஷஸ்' எனப் பெயரிடப்பட்டதும், அதன் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்தது. ஆஸி.க்கு தனி வரலாறு இல்லை. பெருமிதப்பட்டுக்கொள்ள 'கார்கில்', 'பேர்ல் ஹார்பர்' போன்ற யுத்தங்களில் அவர்கள் வென்றதில்லை. நெப்போலியன், கொலம்பஸ் என உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த ஆளுமைகளும் அங்கிருந்து வரவில்லை. அவ்வப்போது சிலர் செய்திகளில் வந்தாலும், உலக நாளிதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து இடம்பிடித்த முதல் ஆஸ்திரேலியப் பெயர் - டொனால்ட் பிராட்மேன். கிரிக்கெட் வீரர். ஆக, கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. அது ஆஸ்திரேலியாவின் அடையாளம். இங்கிலாந்தை, தங்களை ஆண்டவர்களை எதிர்த்ததால் கிடைத்த அடையாளம். 'ஆஷஸ்' வெற்றிகள் கொடுத்த அடையாளம்.

இதனால்தான், டி-20 கோலோச்சும் இந்த ஜென்Z தலைமுறையிலும் ஆஷஸ் முக்கியத்துவம் பெறுகிறது. விளையாட்டு என்பது தேசம், மொழி, கலாசாரம் கடந்தது என்பார்கள். அதற்கு ஆஷஸ் விதிவிலக்கு. இது இந்த இரு நாடுகளின் கௌரவம் சார்ந்தது. அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கு இடையேவும் மிகச்சிறந்த உறவு நிலவுகிறது. ஆனால், இந்தக் கிரிக்கெட் களத்தில் தோற்பது அரசியல் அவமானமாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தத் தொடர்களில் விளையாடியது வீரர்களின் பேட்டும், பந்தும் மட்டுமல்ல. அங்கு உணர்வுகள் பெரும்பங்கு வகித்தன. இன்று நாம் கூறும் 'ஸ்லெட்ஜிங்' எனும் வார்த்தை, இரு அணிகளின் மூதாதையர் தூவிய விதை. உண்மையில் இந்த இரு அணிகளும், ஆஷஸ் போட்டிகளை ஒரு போர் போலத்தான் பாவித்தன. ஊடகங்களும் ஏதோ உலகப் போர் ரேஞ்சுக்கு கவர் செய்தன. 

Bradman

1930 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றுவிட, 1932-33 சீசனில் 'பாடி லைன்' என்ற யுக்தியைக் கையாண்டது இங்கிலாந்து. பௌன்சர்கள் வழக்கத்துக்கு வந்தது இப்படித்தான். கள மோதல்கள் அதிகரித்தன. வார்த்தைப் போர்கள் பத்திரிகைகளில் தலையங்கமானது. ஒருநாள் போட்டி, உலகக்கோப்பை என கிரிக்கெட் மாறியது. அங்கு சாதிக்க முடியாமல்போக, 1975 முதல் 1987 வரை நடந்த 6 ஆஷஸ் தொடர்களில் ஐந்தை வென்று கொக்கரித்தது இங்கிலாந்து. ஆஷஸ் வெற்றியின்மூலம், தங்களைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டனர் இங்கிலாந்து மக்கள். ஆஷஸ் - இரு நாட்டு மக்களுக்குமே மிகமுக்கிய தொடரானது!

"நாங்கள் கார் வாங்குவது எங்கள் குழந்தைகளை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புவதற்காக. நாங்கள் விவசாயம் செய்வது எங்கள் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிடுவதற்காக. எங்கள் தேசம் மற்ற விளையாட்டுகளை விளையாடுவதன் காரணம், எல்லா விளையாட்டிலும் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக. அவர்களை தோற்கடிப்பதுதான் எங்களுக்கு ஆனந்தம். அதை எங்களுக்குத் தரும் மிகப்பெரிய ஆயுதம் ஆஷஸ்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் ஆஸ்திரேலியர் ஒருவர். ஏதோ கிரிக்கெட் வெறி முற்றிப்போன இளைஞன் எனப் பார்த்தால், புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவர். இதுதான் இத்தொடர் ஏற்படுத்தும் தாக்கம். 

இங்கிலாந்தில் ஒரு படையே இருக்கிறது - 'பார்மி ஆர்மி'. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்  'ஃபேன் க்ளப்'. இங்கிலாந்து அணியின் போட்டிகளில் அவர்களை ஆதரிக்கக் கூடினார்கள். உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டுத் தொடர்களிலும் தங்கள் அணியை ஆதரிக்கச் செல்வதுதான் அவர்களின் வாழ்நாள் கடமை. அதில் மெம்பர் ஆவதற்குக் கட்டணம். வெளிநாட்டு டூர்களுக்கு பிளான்கள் என வெப்சைட் வைத்துச் செயல்படுகிறார்கள். கொடி, பேனர், பதாகைகள் எல்லாம் தயார் செய்து அரங்கினுள் வரும் இவர்களின் கூச்சலையும் சேர்ந்துதான் எதிரணி இவர்களை வெல்ல வேண்டும். இங்கிலாந்து அணியின் 12-த் மேன் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் இவர்களைக் குறிப்பிடுவதுண்டு. இவர்களின் மிகப்பெரிய இலக்கு ஆஷஸ்தான்.

Barmy army

இந்த இரண்டு நாடுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் இது ஒரு திருவிழா! இந்த அணிகள் மோதும் போட்டி ஒரு பக்கம் டெஸ்ட் எனும் கிளாசிக்கை ரசிக்க வைக்குமென்றால், வீரர்களின் ஆக்ரோஷம், பேச்சு, மேனரிசங்கள் அதற்கு கமர்ஷியல் எலிமன்ட்ஸ் சேர்க்கும். பிரிஸ்பேனில் முதல் போட்டி தொடங்க, காபா மைதானம் நிரம்பிவிட்டது. கிரிக்கெட்டுக்கு சுத்தமும் சம்பந்தம் இல்லாத மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் ஸ்க்ரீனிங் செய்துகொண்டிருக்கிறார்கள். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தைப் பார்க்க நள்ளிரவு 2.30 மணிவரை முழித்திருந்த இந்திய இளைஞன், 5.30 மணிக்குத் தொடங்கும் ஆஷஸ் போட்டியைப் பார்க்க உறங்காமல் இருக்கிறான். ஐ.பி.எல் மொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டிருக்கும். ஆனால், இந்த டெஸ்ட் தொடர் மொத்த உலகையும் கட்டிப்போட்டிருக்கிறது. ஏனெனில், இதன் பெயர் ஆஷஸ்!


டிரெண்டிங் @ விகடன்