மும்பை இன்டியன்ஸ் வீரர் தீபக் பூனியாவை கைதுசெய்ய கடற்படை உத்தரவு

மும்பை இன்டியன்ஸ் அணி வீரர்  தீபக் பூனியாவை கைதுசெய்ய இந்தியக் கடற்படை உத்தரவிட்டுள்ளது. 

கடற்படை கைது நடவடிக்கை

ஹரியானா ஆல்ரவுண்டர் தீபக் பூனியா கடற்படையில் பெட்டி ஆபீஸராக பணியாற்றிவருகிறார். மற்ற அணிகளுக்கு விளையாட அவருக்கு வழங்கப்பட்டிருந்த கடற்படையின் தடையில்லாச் சான்றிதழ் முடிவடைந்த பின்னர், ஹரியானா அணியின் ரஞ்சி அணியில் தீபக் விளையாடியுள்ளார். இதையடுத்து, ஐ.என்.எஸ் ஆங்ரே கடற்படை மையத்தின் கமோடர் எம்.எம்.எஸ் ஷெர்ஜில் அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார். 

2014-ம் ஆண்டு கடற்படையில் இணைந்த அவருக்கு கடற்படை வழங்கிய தடையில்லாச் சான்று முடிவடைந்த பின்னரும் கடந்த மாதம் இரு ரஞ்சி போட்டிகளில் விளையாடியதாக அவர்மீது கடற்படை குற்றம் சாட்டுகிறது. 

''தீபக் பூனியா முன்னதாக சவுராஸ்ட்ரா அணிக்காக விளையாடியுள்ளார். அவர் சமர்ப்பித்த  2016-17-ம் ஆண்டுக்கான தடையில்லாச் சான்றிதழ் சரியானதாகவே கருதுகிறோம். எனினும், தாய் நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதால், பூனியாவை விடுவித்து விடுகிறோம்'' என  பி.சி.சி.ஐ தரப்பு விளக்கமளித்துள்ளது. 

தீபக் பூனியா கூறுகையில், ''30 நாள்கள் விடுமுறை எடுத்திருந்தேன். விடுமுறையை நீட்டிக்கும்போது, அனுமதி தரவில்லை. சர்வீசஸ் அணிகளில் பணிபுரிபவர்கள் பல மாநில அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. எனக்கு மட்டும்தான் இதுபோன்ற பிரச்னை எழுகிறது'' என வேதனை தெரிவித்துள்ளார். 

பொதுவாக சர்வீசஸ் துறையில் பணியாற்றுபவர்கள் உத்தரவு வந்தால் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். சர்வீசஸ் விரும்பாத நிலையில், வேறு அணிகளுக்கு அவர்கள் விளையாட முடியாது. ஐ.பி.எல் தொடரில் தீபக் பூனியா மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!