வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (24/11/2017)

கடைசி தொடர்பு:12:59 (24/11/2017)

அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்!

19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் நாகலாந்து அணி இரண்டு ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒரு ரன் எக்ஸ்ட்ரா. எதிர் அணிக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது கேரளா மகளிர் அணி.

மாநிலங்களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜே.கே.சி கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாகலாந்து- கேரளா அணிகள் மோதின. முதல் முறையாக இந்தப்போட்டியில் களமிறங்கிய நாகலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க வீரர்களாக மென்ஹா-முஸ்கான் ஆகியோர் களம் கண்டனர். அணியின் ஸ்கோர் 2 ரன்னாக இருந்தபோது மென்ஹான் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 18 பந்தில் இந்த ரன்னை எடுத்தார்.

பின்னர் தீபிகா களமிறங்கினார். இவர் மென்ஹானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரு ரன்கூட எடுக்காமல் வெளியேறியது. 20 பந்தை சந்தித்த மென்ஹானும் 15 பந்தை சந்தித்த தீபிகாவும் டக் அவுட் ஆனார்கள். பின்னர் வந்தவர்கள் சீட் கட்டுப்போடு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களில் ஒருவர்கூட ரன் எடுக்கவில்லை. அனைவரும் டக்அவுட் ஆனார்கள். கேரளா அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ஓவரில் நாகலாந்து அணி அனைத்துவிக்கெட்டுகளை இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஒரு ரன் எக்ஸ்ட்ராவில் வந்தது. கேரளா தரப்பில் மின்னுமணி 4 ஓவர்கள் வீசி மெய்டன் பெற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அலினா 3 ஓவர் வீசி 2 மெய்டன், 2 விக்கெட்டும், செளபரியா 6 ஓவர்கள் வீசி 6 மெய்டன், 2 விக்கெட்டும், சன்ரா சுரேன் 2 ஓவர்கள் வீசி 2 மெய்டன், 1 விக்கெட்டும், பீபை சீபஸ்டீன் 2 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேரளா அணியில் தொடக்க வீரர்களாக அன்சு ராஜூவும் ஜோசினாவும் களமிறங்கினர். நாகலாந்து பந்துவீச்சாளர் தீபிகா வீசிய முதல் பந்து நோபாலானாது. இரண்டாவது பந்து ஒய்டு வீசினார். கடைசிப் பந்தில் அன்சு ராஜூ பவுண்டரி விளாசினார். இதனால் 5 ரன்கள் பெற்ற கேரளா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.