வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (24/11/2017)

கடைசி தொடர்பு:19:11 (24/11/2017)

இரண்டு சுழல்; ஒரு வேகம் - 205 ரன்னுக்கு சுருண்டது இலங்கை

இரண்டு சூழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமரவிக்ரமா- கருணாரத்னே களமிறங்கினர். 20 ரன்னில் இந்த ஜோடியை வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா பிரித்தார். பின்னர் வந்த திரிமன்னே சிறிது நேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. 9 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். இவரைத் தொடர்ந்து மேத்யூஸ் களம் கண்டார். மறுமுனையில் அரை சதம் அடித்த கருணாரத்னே 51 ரன்னில் வெளியேறினார். இவரது விக்கெட்டை இசாந்த் கைப்பற்றினார்.

மேத்யூஸ்- சண்டிமால் ஜோடியை சுழல் பந்துவீச்சாளர் ஜடேஜா பிரித்தார். 10 ரன்னில் வெளியேறிய மேத்யூஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். பின்னர் வந்த டிக்வெல்லா 24 ரன்னிலும் ஷனகா 2 ரன்னிலும் பெரைரா 15 ரன்னிலும் ஹெராத் 4 ரன்னிலும் லக்மால் 17 ரன்னிலும் வெளியேறினர். சண்டிமால் 8வது விக்கெட்டாக வீழ்ந்தார். 57 ரன்கள் அடித்த இவர் 4 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். முடிவில் இலங்கை அணி 205 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுல், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ராகுல் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் புஜாரா விளையாட வந்தார்.  விஜய் 2 ரன்னிலும் புஜாரா 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 2வது நாள் ஆட்டம் தொடர்கிறது.