சூப்பர் கிங்ஸ் போல மாஸ் கம்பேக் கொடுத்த சென்னையின் எஃப்.சி! #ISL2017 #LetsFootball

ஒரு போட்டியில் தோற்றுவிட்டால், அடுத்த போட்டியில் தெறிக்கவிடுவதுதான் சி.எஸ்.கே ஸ்டைல். அவர்களைப் போலவே நேற்றிரவு நடந்த போட்டியில் பட்டையைக் கிளப்பியது சென்னையின் எஃப்.சி அணி. நான்காவது ஐ.எஸ்.எல் சீசனின் முதல் போட்டியில் கோவாவிடம் தோற்றிருந்த நிலையில், நேற்று நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியைப் பந்தாடி, இத்தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது சென்னையின் எஃப்.சி. ரஃபேல் அகஸ்டோ, முகமது ரஃபி இருவரும் கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. #ISL2017 

ISL

வென்றது எப்படி?

ஞாயிற்றுக்கிழமை மாலை கோவா அணிக்கெதிராக இந்த சீசனைத் தொடங்கியது சென்னை அணி. புதிய பயிற்சியாளர் கிரிகரியின் திட்டங்கள் கைகொடுக்காமல் போக, 34 நிமிடங்களில் 3 கோல்கள் வாங்கியது. 3-4-3 ஃபார்மேஷனில் டிஃபன்ஸ், மிட்ஃபீல்ட் என அனைவரும் சொதப்பினர். முன்களமும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. எதிரணியின் தவறுகளால் இரண்டாம் பாதியில் எப்படியோ 2 கோல்கள் கிடைத்தது. ஆனால், நேற்றைய போட்டியில் பக்காவாகத் திட்டமிட்டுத் தூக்கியது சென்னையின் எஃப்.சி.

பெரும்பாலான கால்பந்து அணிகள் பயன்படுத்தும், ரிஸ்க் இல்லாத 4-2-3-1 ஃபார்மேஷன். 4 நபர் டிஃபன்ஸுக்குத் திரும்பியது சென்னை. 4 வீரர்கள் மாற்றப்பட்டனர். கடந்த போட்டியில் சொதப்பிய தனசந்ரா சிங் வெளியே. சப்ஸ்டிட்யூட்டாகக் களமிறங்கி அசத்திய நெல்சன், பிக்ரம்ஜித் இருவரும் உள்ளே. அதிரடி காட்டினார் கிரகரி. செரேனோ - மெய்ல்சன் டிஃபன்ஸிவ் கூட்டணி அரணாக நின்றது. பாக்சுக்குள் நார்த் ஈஸ்ட் வீரர்கள் அடித்த லாங் பாஸ்களை பக்காவாக டீல் செய்தார் கேப்டன் செரேனோ. ஃபுல்பேக் இருவரும் பக்கா. இனிகோ கால்டிரான் டிஃபன்ஸ், ஃபார்வெர்ட் இரண்டிலும் ஆசம்! 

ISL

முந்தைய போட்டியில் தடுமாறக் காரணமே நடுகளம்தான். இந்தப் போட்டியில் டிஃபன்ஸிவ் மைண்ட்செட் கொண்டவர்களான பிக்ரம்ஜித் சிங், தனபால் கனேஷ் இருவரும் அந்தக் குறையைப் பூர்த்தி செய்தனர். நார்த் ஈஸ்ட் வீரர்கள் நடுகளத்தில் வித்தை காட்ட முடியாத வகையில் சிறப்பாக விளையாடினர். ஃப்ரான்செஸ்கோ ஃப்ரான்கோ, நெல்சன் இருவரும் முன்களத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு பிரச்னையாக இருந்தனர். 

11-வது நிமிடம். நார்த் ஈஸ்ட் அணியிடமிருந்து பந்தைக் கைப்பற்றி, அற்புதமாக 'ஒன்-டூ' பாஸ் செய்தனர் கிரகரி நெல்சன், ரஃபேல் அகஸ்டோ இருவரும். அகஸ்டோ ட்ரிபிள் செய்து, பாக்சினுள் நின்றுகொண்டிருந்த ஜீஜேவுக்கு lofted pass கொடுத்தார். அந்தப் பாஸை க்ளியர் செய்ய நினைத்து, நார்த் ஈஸ்ட் டிஃபண்டர் அப்துல் ஹக்கு ஹெட் செய்ய, அது சரியாகப் படாமல் கோல் போஸ்டினுள் விழுந்து 'own கோல்' ஆனது. 

நடுகளத்தில் பந்தை வசப்படுத்தியிருந்த பிக்ரம்ஜித் சிங், வலது புறமிருந்து இடது பக்கம் பந்தை 'க்ராஸ்' செய்தார். க்ரிகரி நெல்சனால் அதை கோலாக மாற்ற முடியாது. எனவே, அவர் அருகில் நின்றிருந்த ஜீஜேவுக்குச் செல்லும் வகையில், மெதுவாக 'ஹெட்' செய்தார். ஆனால், நார்ட் ஈஸ்ட் டிஃபண்டரின் காலில் பட்டு பந்து 'டிஃப்ளக்ட்' ஆனது. சட்டென்று சுதாரித்துக்கொண்ட ரஃபேல் அகஸ்டோ, இடது காலால் ஷூட் செய்து, அணியின் இரண்டாவது கோலை அடித்தார். 24 நிமிடங்களில் 2 கோல் முன்னிலை பெற்றது சென்னை.

ISL

84-வது நிமிடத்தில் நெல்சனை, நிர்மல் சேத்ரி foul செய்ய சென்னை அணிக்கு பாக்சுக்கு அருகிலேயே ஃப்ரீ-கிக் கிடைத்தது. ஸ்பெய்ன் வீரர் ஜாமி கேவிலான்  அதை இடது டாப் கார்னரைக் குறிவைத்து அடித்தார். நார்ட் ஈஸ்ட் கோல்கீப்பர் ரெஹனேஷ், அதைத் தடுக்க முயல, அவர் கையிலும், கோல்போஸ்டிலும் பட்டு பந்து rebound ஆனது. ஜீஜேவுக்குப் பதிலாகக் களமிறங்கிய முகமது ரஃபி ஹெடர் மூலம் கோலடித்து அசத்தினார். 

அடுத்த போட்டியில் சென்னை அணி, புனேவை சந்திக்கிறது.  இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ள சென்னை அணி, இந்த ஓய்வுக்குப் பிறகு அதே வேகத்தில் பாய்வது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!