வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (25/11/2017)

கடைசி தொடர்பு:16:43 (25/11/2017)

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி: பரபரப்பான சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது!

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 23-ம் தேதி ப்ரிஸ்பனில் தொடங்கியது. போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. களமிறங்கிய இங்கிலாந்து, 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் தரப்பில், யாருமே சதமடிக்கவில்லை. ஜேம்ஸ் வின்ஸ், அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்தார். கமின்ஸ் மற்றும் ஸ்டார்க் தலா மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தனர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 328 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அதிகபட்சமாக 141 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து சார்பில், ப்ராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஆஷஸ் தொடரின் போது...

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாளான இன்று தொடங்கியது இங்கிலாந்து அணி. அதிக லீட் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் எண்ணத்தில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குக், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர், முறையே 7 மற்றும் 2 என்ற சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதனால், ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. தற்போது லீடாக இங்கிலாந்து நிர்ணயித்திருப்பது வெறும் 7 ரன்கள்தான். இன்னும் இரண்டு நாள்கள் ஆட்டம் மிச்சமிருப்பதால், வெற்றி யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம் என்ற நிலையில், முதல் ஆஷஸ் போட்டியிலேயே விறுவிறுப்பு தொற்றிக்கொண்டுள்ளது.