வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (25/11/2017)

கடைசி தொடர்பு:18:35 (25/11/2017)

விஜய், புஜாரா சதம் அடித்து அசத்தல்... முன்னிலை பெற்றது இந்தியா!

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் முரளி விஜய், புஜாரா சதம் அடிக்க முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

விஜய்

Photo Credit: BCCI

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்து இருந்தது. ராகுல் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். முரளி விஜய், புஜாரா தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. விஜய், புஜாரா ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதத்தைக் கடந்தனர். இலங்கை பவுலர்கள் இந்த இணையைப் பிரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை. இருவரும் சதத்தை நோக்கி பயணித்தனர். முதலில் விஜய் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் அவருடைய 10 வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 216 ரன்னாக உயர்ந்தபோது விஜய் (128 ரன்) ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அடுத்து கேப்டன் கோலி களம் இறங்கினார். சிறிது நேரத்தில் புஜாராவும் சதம் அடித்தார். அது அவருடைய 14 வது சதமாக அமைந்தது. இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். கோலி அரைசதத்தைக் கடந்தார். இன்றைய ஆட்டநேர இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன் சேர்த்துள்ளது. புஜாரா 121 ரன்னுடனும் கோலி 54 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.