வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/11/2017)

கடைசி தொடர்பு:19:00 (25/11/2017)

டெண்டுல்கரின் சாதனையை முந்திய ஸ்டீவ் ஸ்மித்... ஆஷஸ் தொடரில் முத்திரை!

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெண்டுல்கரை முந்தி ஒரு சாதனையைப் படைத்துள்ளார். 

ஸ்டீவ் ஸ்மித்


ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 23-ம் தேதி ப்ரிஸ்பனில் தொடங்கியது. போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. களமிறங்கிய இங்கிலாந்து, 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 328 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அதிகபட்சமாக 141 ரன்கள் விளாசினார். தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாளான இன்று தொடங்கியது இங்கிலாந்து அணி. அதிக லீட் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் எண்ணத்தில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குக், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர், முறையே 7 மற்றும் 2 என்ற சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதனால், ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. தற்போது லீடாக இங்கிலாந்து நிர்ணயித்திருப்பது வெறும் 7 ரன்கள்தான். இப்படிப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில்தான் ஸ்டீவ் ஸ்மித் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

ஸ்மித், அவரது 57 வது டெஸ்ட் போட்டியிலும் 105 வது இன்னிங்ஸிலும் ஆடி வருகிறார். இந்த இன்னிங்ஸில் அவர் தனது 21 வது சதத்தை அடித்ததன் மூலம், டெண்டுல்கரை முந்தியுள்ளார். சச்சின் அவரது 110 வது இன்னிங்ஸில்தான் 21 வது சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.