வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (27/11/2017)

கடைசி தொடர்பு:10:03 (27/11/2017)

இன்று கூடுகிறது தேர்வுக்குழு: கோலிக்கு ஓய்வு, ரஹானே கேப்டன்?

தற்போது நடந்துவரும் இலங்கைத் தொடர், அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்ய, தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதில், மீதம் இருக்கும் இலங்கைத் தொடரிலிருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

கோலி

கடந்த ஐ.பி.எல் தொடர் முதல் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடிவருகிறார் கேப்டன் கோலி. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தனக்கும் ஓய்வு தேவைப்படும். அது தேவைப்படும்போது அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்’ எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நான்கு வகையான போட்டித் தொடர்களுக்கு அணிகளைத் தேர்வுசெய்ய, தேர்வுக் குழு இன்று கூடுகிறது. இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள், அதன்பின் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கு, இன்று இந்திய அணி தேர்வுசெய்யப்படுகிறது. 

இதில், இலங்கைத் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளிலிருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்து நடக்க இருக்கும் தென்னாப்பிரிக்கா தொடரை மனதில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாகவும் செயல்படுவார் எனத் தெரிகிறது. எனினும், இன்று தேர்வுக்குழு கூடிய பின்னர்தான் அதிகாரபூர்வமாகத் தெரியவரும்.