வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (27/11/2017)

கடைசி தொடர்பு:21:15 (27/11/2017)

`பேட்டிங் குறித்து வீரர்கள் வெட்கப்பட வேண்டும்' - கொதி கொதிக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளதை அடுத்து, இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், `எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டம் குறித்து வெட்கப்பட வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார். 

Nic Pothas

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. 

இந்தப் படுதோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், `ஆட்டம் குறித்து என்ன வேண்டுமானாலும் வெகு நேரம் பேசலாம். அது குறித்து திட்டம் தீட்டலாம். அதேநேரத்தில், அதை செயல்படுத்த வேண்டும். இன்று எங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏனென்றால், பேட்டிங்கில் நன்றாகச் செயல்பட வேண்டும் என்பதால், கடுமையாக உழைத்தோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. இலங்கை வீரர்கள், அவர்களின் ஆட்டம் குறித்து வெட்கப்பட வேண்டும். ரன்கள் எடுக்காமல் நெட் பயிற்சி மட்டும் எடுத்துக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை' என்று கறார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.