வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (27/11/2017)

கடைசி தொடர்பு:20:47 (27/11/2017)

பெங்களூரு அணி டாப்... சாம்பியன் கொல்கத்தா தோல்வி, சென்னை வீரர் டாப் ஸ்கோரர்! #ISL #LetsFootball

களைகட்டத் தொடங்கிவிட்டது ஐ.எஸ்.எல் சீஸன் - 4. மொத்தம் 10 அணிகள் விளையாடிவரும் இந்தத் தொடரின், இரண்டாவது வாரத்தில் செம விறுவிறுப்பு. பெங்களூரு அணி 4 - 1 என்ற கோல்கணக்கில் டெல்லியைச் சாய்க்க, நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை 4 - 1 என சாய்த்தது புனே. மற்ற போட்டிகளில், கோவா 1 - 2 என்ற கோல்கணக்கில் மும்பையிடம் தோற்க, கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையே போட்டி டிராவில் முடிந்தது.

பெங்களூரு எஃப்சி - டெல்லி டைனமோஸ் எஃப்சி

பெங்களூரு எஃப்சி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், இந்த ஐ.எஸ்.எல் சீஸனின் காஸ்ட்லி வீரரான மிக்கு மற்றும் மிட்ஃபீல்டர் லென்னி ரோட்ரிக்யூஸ் ஆகியோரின் கோல்களுடன், எரிக் பார்டலுவின் இரண்டு சூப்பரான ஹெட்டர்களும் டெல்லியை வீழ்த்த, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றது பெங்களூரு அணி.

ISL

பெங்களூருவின் டிபென்ஸ் லைனைத் தாண்டி பந்து செல்லவே இல்லை. டெல்லி வீரர்களின் சிறந்த முயற்சிகள் எல்லாம் கோல்களாக மாற பெங்களூரு டிபெண்டர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவுக்கும் பெரிதாக எந்த ஒரு தலைவலியும் இல்லை. தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் மோடில் இருந்த பெங்களூரு அணிக்கு, முதல் பாதியிலேயே 2 - 0 என்ற முன்னிலை கிடைத்தது. இரண்டு முறையும் பந்தை வலைக்குள் திணித்தவர் ஆஸ்திரேலியா நாட்டவரான எரிக் பார்டலு. அந்த இரண்டு கோல்களும் சூப்பர் ஹெட்டர்கள். அந்த இரண்டு முறையும் கோல்களுக்கு அடித்தளமாக இருந்தவர் ஸ்பெயின் நாட்டவரான எடு கார்சியா. கோல் வேட்டைக்கு வந்த பெங்களூரு அணி அடித்த ஷாட்டுகள் மொத்தம் 20. அதில் 13 ஷாட்டுகள் இலக்கை நோக்கி துல்லியமாக அடிக்கப்பட்டவை.

டெல்லியைப் பொறுத்தவரை பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. 84-வது நிமிடத்தில் டெல்லி வீரர் செய்த்யசென் சிங் க்ராஸ் செய்த பந்து, பெங்களூரு டிஃபெண்டர் ஜான்சன் கையில் பட்டுவிட, ஹேண்ட் பால் மூலம் டெல்லிக்கு ஆறுதலாக ஒரு பெனால்டி கோல் மட்டுமே கிடைத்தது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூருவின் எரிக் பார்டலுவும், எமர்ஜிங் பிளேயர் விருதை டெல்லியின் வினித் ராயும் பெற்றனர். 

ATK - எஃப்சி புனே சிட்டி

கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த ATK மற்றும் எஃப்சி புனே சிட்டி அணிகளுக்கிடையேயான போட்டியில் புனேயின் `மேஜிக்கல்' மார்செலின்ஹோ இரட்டைக் கோல் அடித்து மிரட்ட, கொல்கத்தா அணியை எளிதாக  நொறுக்கி, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது புனே.

ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே ஆதிக்கம் செலுத்தினாலும், 13-வது நிமிடத்திலேயே புனே அணிக்கு முதல் கோல் விழுந்தது. தொலைவிலிருந்து வந்த பந்தை லாகவமாகப் பெற்று, கொல்கத்தாவின் டிஃபெண்டரை ஏமாற்றிவிட்டு கோல் பாக்ஸுக்குள் நுழைந்த அந்த அணியின் எமிலியானோ அல்ஃபாரோ, சுயநலமாக யோசிக்காமல் சென்டர் பொசிஷனில் இருந்த கேப்டன் மார்சலினியோவுக்கு பந்தை பாஸ் செய்ய, அதை அவர் பெர்ஃபெக்டாக கோலாக்கி புனேவுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். பதில் கோல் திருப்ப முயன்ற கொல்கத்தா அணியால், முதல் பாதி வரை எதுவும் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு டிஃபன்ஸில் வலுவாக இருந்தனர் புனே அணியினர்.

50-வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில் கொல்கத்தாவின் பிபின் சிங் அருமையாக கோல் அடிக்க, ஆட்டம் சமநிலைக்கு வந்தது. பிபினால் துல்லியமாக உதைக்கப்பட்ட பந்தை, புனே கோல் கீப்பர் கமல்ஜித்தால் தடுக்க முடியவில்லை. ஆனால், அடுத்த நிமிடத்திலேயே கிடைத்த கார்னர் வாய்ப்பில் `சூப்பர் ஜம்ப்பிங் ஹெடர்' மூலம் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார் புனேயின் ரோகித் குமார்.

ISL

இறுதியில் புனே அணி, 4 - 1 என்ற கோல்கணக்கில் கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது. ஆட்ட நாயகன் விருதை புனேயின் மார்சலினியோ பெற, கொல்கத்தாவின் பிபின் சிங் எமர்ஜிங் பிளேயர் விருதைத் தட்டிச் சென்றார்.

மும்பை சிட்டி எஃப்சி - எஃப்சி கோவா
மும்பையில் நடந்த மும்பை சிட்டி எஃப்சி மற்றும் எஃப்சி கோவா அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் தியாகோ சாண்டோஸ் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 2 - 1 என்ற கோல்கணக்கில் கோவாவை வீழ்த்தி இந்த சீஸனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மானுவேல் ராட்ரிக்யூஸ் மூலம் கோவா அணி 83-வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமன்படுத்தியும், கோல் கீப்பர் கடைசி நேரத்தில் சொதப்பியதால் வெற்றி பறிபோனது. மும்பை அணியின் முதல் கோலை 59-வது நிமிடத்தில் எவர்டன் சாண்டோஸ் அடித்தார். 

கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் 

கொச்சியில் நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கிடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் சமபலத்தோடு டிஃபென்ஸில் கெத்துகாட்ட, ஆட்டத்தில் எப்போது கோல் விழும் எனக் காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆட்டத்தில் பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கேரளாவின் இயான் ஹியூம், சி.கே.வினீத் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரரான டிமிடர் பெர்படோவ் ஆகியோரின் முயற்சிகள் எதுவும் கோலாக மாறவில்லை.

ISL

யார் டாப்?

இரண்டாவது வாரமான இப்போது அனைத்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. முறையே புனே, சென்னை, கோவா, மும்பை மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை வீரர் ரஃபேல் அகஸ்டோ, பெங்களுரு வீரர் எரிக் பார்டலு, புனே வீரர்களான எமிலியானா அல்ஃபாரோ மற்றும் மார்சலினியோ ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்து டாப் ஸ்கோரர்கள் லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்திருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்