வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:28 (28/11/2017)

ஸ்மித் சதத்தைக் கழித்துப் பார்த்தால்... ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் ஆஸி வென்றது எப்படி? #Ashes #Analysis

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் (Ashes) தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. கிரிக்கெட்டில் ஸ்கோர் போர்டு விவரங்களை மட்டுமே கணக்கில்கொண்டு எதையும் கற்பனை செய்யமுடியாது. 25 ரன்கள் மட்டுமே அடித்த வீரர், அட்டகாசமாக 6 பௌண்டரிகள் அடித்து, லெக் சைடில் போகும் பந்தை ஃபிளிக் செய்ய முயன்று  துரதிருஷ்டவசமாக அவுட்டாகியிருப்பார். பலமுறை கண்டம் தப்பி ஒருவர் சதம் அடித்திருப்பார். கிட்டத்தட்ட, முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட் வித்தியாச வெற்றியும் இந்த ரகம்தான்.

ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் இருவருக்குமே கேப்டன்களாக இதுதான் முதல் ஆஷஸ் தொடர். இரு அணிகளிலுமே சில புதிய முகங்கள் இடம்பெற்றிருந்தன; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் சிலர்; அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆஷஸ் தொடங்குவதற்கு முன், இரு அணிகளுக்கும் 50 சதவீத வாய்ப்பு இருப்பதாகவே தெரிந்தது. முதல் டெஸ்ட்டுக்குப் பின் நிலைமை வேறு. 

Ashes - Smith
 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. அலெஸ்டர் குக் அனுபவத்தை  நம்பியிருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. ஸ்டார்க், குக்கை வெளியேற்ற, ஸ்டோன்மானுடன் புதுமுக வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அடித்தளம் அமைத்தார். ‛பிரிஸ்பேனின்  ஒரிஜினல் ஆடுகளத்தின் தன்மையில்  பாதி கூட இல்லையே’ என ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் ஒருபுறம் புலம்ப, பந்து ரப்பர் பந்து போல விக்கெட் வீழ்த்தும் தன்மைக்கு உதவாமல் ஏனாதானோவென்று சென்றுகொண்டிருந்தது. பெரிதாக ரன்களை வாரி வழங்காமல் பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் அசத்தி  இங்கிலாந்துக்கு அணை போட்டது ஆஸி.

வாய்ப்புகள் அமையாவிடில் அதை அமைத்துக்கொள்வதில் ஆஸ்திரேலியர்கள் கில்லாடிகள். ஜேம்ஸ் வின்ஸ் அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு ரன் எடுக்க முற்பட்டார். நேத்தன் லயன் மற்ற ஆஸி வீரர்கள் போல துடிப்பானவர் இல்லை என்றாலும், அவர் பந்தை நோக்கி ஓடி வந்தார். அவருக்கு எதுவாக பந்தும், பக்கத்து பிட்ச்சில் எழும்ப, ஒற்றைக்கையில் பிடித்து  direct hit செய்து வின்ஸின் சதமடிக்கும் கனவைத் தகர்த்தார். ஒரு விக்கெட் விழவே, கொஞ்சம் கிடுக்கிப்பிடி போட்டு, கம்மின்ஸ் துல்லியமாக பந்து வீச, ஜோ ரூட்டும் பெவிலியன் திரும்பினார். மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் சிறிது பாதிக்க, முதல் நாள் இரு அணிகளுமே தங்களுக்கு சாதகமாக சில விஷயங்களை முடித்ததாக நினைத்துக்கொண்டன.

Ashes


விக்கெட் கீப்பர் ஜானி பைர்ஸ்டோவ் சொதப்ப, மொயீன் அலி மற்றும் மாலன் சிறுக சிறுக ரன் சேர்க்க, 302 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இங்கிலாந்து. வார்னருடன், காலின் பான்கிராஃப்ட் களமிறங்க, ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் கூட்டணி வேகமெடுத்தது. பிராட், ஆண்டர்சன், மொயீன், மற்றும் ஜேக் பால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை 76/4 என ஆட்டம் காண வைத்தனர்.  போட்டி தொடங்குவற்கு சில  மணி நேரத்துக்கு முன்புவரை ஆடுவாரா, மாட்டாரா என கண்ணாமூச்சி ஆடிய மார்ஷ், உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்தார். இருவருமே வெகு நிதானமாக ஆடி, சரிவிலிருந்து அணியை மீட்டனர். அரை சதம் சேர்த்தபின்னர் மார்ஷ் வெளியேற, ஏழு ஆண்டுகளுக்கு பின் அணிக்கு திரும்பிய பெயின் சொற்ப ரன்களில் வெளியேற, ஆல் ரவுண்டர் ஸ்டார்க்கும் ஸ்மித்துடன் ஒத்துழைக்கவில்லை. யாரும் எதிர்பாராத விதத்தில் கமின்ஸ் அட்டகாசமாக ஆடி, 42 ரன்கள் சேர்த்தார். 
 
ஸ்மித் 141*

Steve Smith Ashes


இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற பெரிதும் உதவியது ஸ்மித் அடித்த சதம்தான். ஒரு தலைவனாக அணியை இக்கட்டான சூழ்நிலையில் எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்று நிரூபிக்கும் விதத்தில் இருந்தது அவரது ஆட்டம். மற்ற அணிகளைப்போல அல்லாமல்,  ஒரு கேப்டன் இருக்கும்போதே, அடுத்தது இவர்தான் கேப்டன் என வெளிப்படையாகவே அறிவிக்கும் வழக்கம் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு உண்டு. மார்க் டெய்லர் இருந்த காலத்திலிருந்தே இது தொடர்கிறது. டெய்லருக்கு பின் ஸ்டீவ் வாஹ், அவருக்குப் பின் ரிக்கி பாண்டிங், அவரைத் தொடர்ந்து கிளார்க், தற்போது ஸ்மித் என ஒருவரின் தலைமைப்பண்பை வெகு சீக்கிரம் கண்டறிவதும், அவர்களிடம் உச்சபட்ச பொறுப்பை ஒப்படைப்பதும், அதற்கு அவர்களை முன் கூட்டியே தயார் செய்வதும் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு கைவந்த கலை. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு வேறு எந்த நிர்வாகமும் நிகரில்லை. 
 
கடந்த 18 மாதங்களில் சென்ற இடத்தில் எல்லாம் தோல்வி என்றாலும், தலைவனாக ஸ்மித் ஜொலித்து வருகிறார். இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஐபிஎல், இந்திய அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் என எங்கும் எதிலும் முன்னின்று செயல்பட்டு வெற்றிக்காக போராடுவதில் ஸ்மித் கில்லி. அவரைப் போன்ற வீரருக்காக ஒவ்வொரு அணியும் ஏங்கும். 76/4 என அணி தத்தளித்த போதும், சிறுதும்  பதற்றப்படாமல், ஐந்தாவது ஸ்டம்ப்புக்கு வெளியே போகும் பந்துகளை கோடி ருபாய் கொடுத்தாலும் தொட மாட்டேன் என சத்தியம் செய்ததுபோல, அசராமல் ஆடிக்கொண்டே இருந்தார். பௌலர்களை தன்னுடைய பலத்துக்கு ஏற்றவாறு பந்துகளை வீச வைத்து, சிறுகச்சிறுக ரன்களை சேர்த்துக்கொண்டே வந்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தபோதும், தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளாமல் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் தன்னுடைய 21-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்மித் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கத்ததான் செய்கிறது. பரதநாட்டியம் ஆடுகிறார் என்றெல்லாம் கிண்டல் செய்தனர். ஆனால், பேட்டை அழுத்தமாக பிடித்து விளையாடும் தன்மை, பந்தை எதிர்கொள்வதற்கு முன் லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு வந்து பந்தின் லெந்த்துக்கு ஏற்ப ஷாட்டை தேர்வு செய்வதெல்லாம் ஸ்மித் ஸ்பெஷாலிட்டி!

Steve smith - Ashes


இலங்கையின் சுழல், இந்தியாவின் 'டஸ்ட் பௌல்' என குறிப்பிடப்படும் புனே போன்ற ஆடுகளங்கள், தென்னாப்பரிக்காவின் பௌன்ஸ், இங்கிலாந்தின் ஸ்விங், சொந்த மண்ணின் பன்முகத்தன்மை கொண்ட பிட்ச் என களம் எதுவானாலும் ஸ்மித் அதில் முத்திரை பதிப்பார்.  ஆஷஸ் தொடரில் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் போட்டியில் சொதப்பினால், அதை வைத்தே ஊடகங்கள், ரசிகர்கள், எதிரணியினர், வர்ணனையாளர்கள் என அத்தனைபேரும் கதகளி ஆடிவிடுவார்கள். இத்தனை பிரஷர் இருந்தும், கொஞ்சம் கூட அதை வெளிக்காட்டாமல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியை அடித்து மூன்றாம் நாள் இறுதியில் மீண்டும் ஆட்டத்தில் ஒரு சமநிலையை அடைய உதவினார் ஸ்மித்.
 
இரண்டாவது இன்னிங்ஸ்:
 
ஜோஷ் ஹேசல்வுட், மெக்ராத்திடம் படித்த பாடங்களைக் கொண்டு குக், வின்சை வெளியேற்ற, ஸ்மித்தை போல அணியைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு ரூட் தள்ளப்பட்டார். என்னதான் ரூட், விராட் கோஹ்லி, ஸ்மித், வில்லியம்சன், ஹாஷிம் ஆம்லா இவர்களோடு அடிக்கடி ஒப்பீட்டளவில் பேசப்பட்டாலும், ரூட் பெரிய சதங்களை அடிப்பதில்லை. இந்திய சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 8 அரைசதங்கள் அடித்தார். அரை சதங்களை பெரிய சதங்களாக மாற்றுவதில் திண்டாடி வருவது  தொடர்கிறது.  54 ரன்கள்  அடித்திருந்த  நிலையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய பாணியில் அடுத்தடுத்த வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேசிக்கொண்டே இருந்தனர். மொயீன் அலியின் ஸ்டம்பிங்கில் சர்ச்சை எழ, மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவித்தாலும், ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களே ‛அது அவுட் இல்லை. மொயீன் தொடர்ந்து ஆடியிருக்க வேண்டும்’ என சொன்னது ஆச்சர்யம். 

Steve Smith -Ashes
 

200 ரன்களுக்கு எங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தால் கூட கொஞ்சமேனும் அட்டாக் செய்திருக்கலாம். ஆடுகளத்தின் தன்மையும், பேட்டிங்  செய்வதற்கு ஏதுவாக மாற, பான்கிராஃப்ட் மற்றும் வார்னர் முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளைத் திருத்தி, முக்கியமாக ஆண்டர்சனின் பந்துவீச்சில் விக்கெட் ஏதும் கொடுக்காமல் அடிக்க வேண்டிய எண்ணிக்கையில் 75 சதவீதத்தை நான்காம் நாள் முடிவிலேயே கடந்து விட்டனர். மொயீன் அலியின் காயமும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கொஞ்சம் வழிவகை செய்தது.
 
இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. பிங்க் பந்தில் விளையாடப்படும் முதல் ஆஷஸ் போட்டி. பகலிரவு போட்டிகளில் எக்ஸ்ட்ரா  ஸ்விங் ஆக வாய்ப்புள்ளதால், தொடரை சமன் செய்ய இங்கிலாந்துக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு அவர்களது பேட்ஸ்மன்கள் துணைபுரிய வேண்டும். முக்கியமாக ரூட் பெரிய சதமடிக்க வேண்டும். ஆஷஸ் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த நான்கு ஆட்டங்களுமே ரோலர் கோஸ்டர் போன்று அமைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இங்கிலாந்து திருப்பி அடிக்க வேண்டிய நேரமிது!


டிரெண்டிங் @ விகடன்