வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:00 (29/11/2017)

டெல்லி டெஸ்ட்டில் இருந்து ரங்கனா ஹெராத் விலகல்! 

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் காயம் காரணமாக விலகியுள்ளார். 

ஹெராத்


இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் முக்கியமான போட்டியாகக் கருதப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சே-வை மாற்று வீரராக இலங்கை அணி தேர்வுசெய்துள்ளது. 27 வயதான வாண்டர்சே, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. டெல்லி டெஸ்டின் ஆடும் லெவனில் இடம்பெற்றால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது அறிமுகப் போட்டியாக அது இருக்கும். 

இலங்கை அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரரான ஹெராத், நடப்புத் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 8 ஓவர்கள் மட்டுமே அவர் பந்துவீசினார். நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட் செய்த ஒரே இன்னிங்ஸில் 39 ஓவர்கள் வீசி, அவர் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.