வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:20:00 (29/11/2017)

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகச் சச்சினின் 10-ம் எண் ஜெர்சிக்கு விடை?

கால்பந்து ஜாம்பவான்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் அணிந்து விளையாடிய ஜெர்சி எண்ணுக்கும் விடை அளிப்பார்கள். நீண்ட காலமாக ஒரே அணிக்காக விளையாடிய வீரரைக் கௌரவிக்கும் வகையில் ஜெர்சிகளுக்கும் சேர்த்து விடை கொடுப்பது கால்பந்து விளையாட்டில் நடைமுறையில் உள்ளது. ஆனால், பிஃபா விதிகளின்படி, சர்வதேச அணிகள் எந்த ஜெர்சிக்கும் விடை கொடுக்க  அனுமதியில்லை. 

சச்சினின் 10ம் எண் ஜெர்சிக்கு விடை

கிளப் அணிகளில் மட்டும் வீரர்கள் ஓய்வு பெறும்போது, ஜெர்சிக்கும் சேர்த்து ஓய்வளிப்பது நடைமுறையில் உள்ளது. நேபோலி அணியில் இருந்து மரடோனா விலகியபோது, அவரின் 10-ம் எண் ஜெர்சிக்கு விடை பெற்றது. கடைசியாக, ஏ.சி.மிலன் ஜாம்பவான் பாலோ மால்டினி ஓய்வு பெற்ற போது,  அவரின் 3ம் எண் ஜெர்சிக்கும் விடை கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடும் எந்த வீரருக்கும் 3-ம் எண் ஜெர்சி ஒதுக்கப்படாது. 

தற்போது, முதன்முறையாகக் கிரிக்கெட் விளையாட்டிலும் ஜெர்சிக்கு விடை கொடுக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய அணிக்காகச் சச்சின் விளையாடியபோது, 10-ம் எண் ஜெர்சி அணிவது வழக்கம். சச்சின் ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதன்முறையாகக் களமிறங்கிய  இந்திய வீரர் ஷர்துல் தாக்குருக்கு 10-ம் எண் ஜெர்சி ஒதுக்கப்பட்டது. பந்துவீச்சாளரான அவர் 10-ம் எண் ஜெர்சி அணிந்து களமிறங்கியதும். ரசிகர்கள் கேலி செய்தனர். நொந்துபோன அவர், ''எனக்கு 10-ம் எண் ஜெர்சி வேண்டாம்'' எனப் பி.சி.சி.ஐ.யிடம் முறையிட்டார். 

இவரைப் போலவே பல இளம் வீரர்களும் 10-ம் எண் ஜெர்சி அணிந்து விளையாட மறுப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், 10-ம் எண் ஜெர்சிக்கு நிரந்தர விடை கொடுக்க பி.சி.சி.ஐ ஆலோசிக்கப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் செய்யாமல் அப்படியே 10-ம் எண் ஜெர்சி ஒதுக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க