வெளியிடப்பட்ட நேரம்: 07:13 (30/11/2017)

கடைசி தொடர்பு:08:45 (30/11/2017)

ஆர்ம் ரெஸ்லிங் உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற ஶ்ரீமந்த்... அங்கீகரிக்க ஆளில்லை!

2016-ம் ஆண்டில் போலாந்தில் நடைபெறவுள்ள Para-arm wrestling போட்டியில் கலந்துகொள்வதற்காக ஶ்ரீமந்த் ஜா-வின் பெயர் அறிவிக்கப்படுகிறது.  சிறுவயதிலிருந்தே உடல் குறைபாடு காரணமாக, பல்வேறு புறக்கணிப்புகளைச் சந்தித்த ஶ்ரீமந்த் ஜா-வுக்கு தன்னை நிரூபிப்பதற்காகக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு அது. ஆனால், தான் தேர்வானது குறித்து மகிழ்ச்சியைவிட  துக்கமே அடைந்தார். போலாந்து செல்லத் தேவைப்படும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு எங்கே போவது என்ற கவலை. 2013-ம் ஆண்டில் இதுபோன்ற ஓர் அறிவிப்பின்போதும் இதே கவலைதான். ஆனால், அப்போது அவரது தாயார் தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் விற்று 60,000 ரூபாய் பணம் கொடுக்கவே, போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இதுவரை ஐந்து முறை உலக அளவிலான Para-arm wrestling போட்டியில் பதக்கம் வென்றுள்ள ஶ்ரீமந்த் ஜாவுக்கு, ஒவ்வொருமுறை போட்டிக்குத் தேர்வாகும்போதும் பணத்துக்கு என்ன செய்வதென்ற அச்சம் ஏற்படுகிறது. பல பிரபலங்களிடமும் என்.ஜி.ஓ-க்களிடமும் பலமுறை உதவி கேட்டும் எந்தப் பயனுமில்லை. 2016-ம் ஆண்டில் இரண்டு முறை முதலமைச்சரைச் சந்திக்க வாய்ப்புக் கேட்டும் வழங்கப்படவில்லை. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே arm wrestling  பயிற்சிகளை மேற்கொண்டுவரும் ஶ்ரீமந்த் ஜா, சமீபத்தில் போலந்தில் நடந்த Para-arm wrestling உலகக் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்று திரும்பியுள்ளார். விமானநிலையத்தில் மலர்கொத்துகளோடு வரவேற்று செல்ஃபி எடுக்கும் காட்சிகள் அரங்கேறாமல், ஏதாவது பரிசுத்தொகை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துவிட்டு மறுநாள் அலுவலகம் கிளம்பியிருப்பார் அந்த வீரர்.

ஶ்ரீமந்த் ஜா

சத்தீஸ்கரைச் சேர்ந்த ஶ்ரீமந்த் ஜா, பிறவியிலேயே இரண்டு கைகளிலும் முறையே நான்கு விரல்களை மட்டுமேகொண்டவர். பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பச் சூழலில்தான் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்ளப்படாத ஶ்ரீமந்த் ஜா, பள்ளியில் கால்பந்து அணியில் சேர முயற்சி செய்ய  அங்கும் விரல் குறைபாடு காரணமாக  நிராகரிக்கப்பட்டுள்ளார். அதனால் மனமுடைந்திருந்த ஶ்ரீமந்தை, அவரது தாயும் நண்பர்களும் சேர்ந்து ஊக்கப்படுத்தி அருகில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்த்தனர். இப்படித்தான் ஆரம்பமானது ஶ்ரீமந்த்தின் மல்யுத்தப் பயணம்.

Arm wrestling விளையாட்டுக்கு கைகளின் பலம் மிகவும் முக்கியம். தன் பிரச்னையைப் பொருட்படுத்தாது தீவிரமாகப் பயிற்சி பெற்றுள்ளார் ஶ்ரீமந்த். இரும்புக் கம்பளி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை பார்க்கும் தந்தையின் சொற்ப வருமானத்தில் கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு தன் உடலைத் தயார்படுத்தியுள்ளார். படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். விளையாட்டு வீரர்கள் பலரும் போட்டிகளில் பதக்கம் வென்றதும் அவர்களுக்கு பல தரப்பிலிருந்து பரிசுத்தொகைகள் தருவதாக அறிவிப்பு வரும்போதெல்லாம், நமக்கும் இதுபோல கிடைக்கும் பரிசுத்தொகை மூலம் தன் குடும்ப வறுமையைப் போக்கிவிடலாம் எனக் கனவுகண்டுள்ளார். இதுவரை சென்று வந்த உலக அளவிலான போட்டிகள் அனைத்துக்குமே சிரமப்பட்டு பணத்தை தானே ஏற்பாடு செய்து சென்று வந்துள்ளார். தற்போது அவருக்கு அரசு வேலை தருவதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. ``பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு நாட்டுக்காக பதக்கம் வெல்வதுதான் என் கனவு'' என ஶ்ரீமந்த் ஜா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீமந்த் ஜா

தொடர்ந்து நமது நாட்டில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவது அரிதினும் அரிதாகவே உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மகளிர் ஹாக்கிப் போட்டியில் பதக்கம் வென்று வந்த இந்திய மகளிர் அணியினரை விமானநிலையத்தில் வரவேற்க ஆள் இல்லாமல் இருந்த சம்பவம் நமக்கு நினைவுக்கு வரலாம். இன்று கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க, ஸ்பான்ஸர்களும் தொழிலதிபர்களுமே காரணம். விளையாட்டாக மட்டுமே இல்லாமல் வியாபாரமாக கிரிக்கெட் உருவெடுத்ததன் விளைவுதான் அதில் ஊழல், மோசடி என அடுக்கடுக்காக குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுகளுக்கும், தடகளப் போட்டிகளுக்கும் குறைந்த அளவே முக்கியத்துவம் தரப்படுகிறது. கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்து ஷூகூட இல்லாமல் தடகளத்தில் சாதிக்க நினைக்கும் பல திறமைசாலிகளும் அரசு சார்பில் எந்தவித உதவியும் கிடைக்காமல்தான் உள்ளனர். ரயில்களில் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில் பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து போட்டிகளில் பங்கெடுத்துவரும் விளையாட்டு வீரர்களை நாம் பார்த்திருப்போம். அப்படி சிரமப்பட்டுச் வென்று வரும் வீரர்கள் அதன் பிறகு கவனம் பெற்றாலும், அவர்களைப்போல வெற்றியை நோக்கிப் போராடும் வீரர்களின் பக்கம் கவனம் செலுத்த மறந்துவிடுகிறது அரசு.

பதக்கப்பட்டியலில் நமது நாட்டின் பெயரைப் பார்ப்பது அரிதாக இருப்பது நம்மைவிட குடும்பத்தின் பொருளாதார நிலையால் விளையாட்டைக் கைவிட்ட வீரர்களை ரணப்படுத்தும். தான் வெல்ல முடியாத பதக்கத்தை தான் பயிற்சியளிக்கும் மாணவர்களாவது வெல்ல வேண்டும் என சுயவிருப்பத்தின் காரணமாக பயிற்சியளித்துவரும் பல்வேறு பயிற்சியாளர்களை அவ்வப்போது பேட்டிகளில் பார்த்திருப்போம். தொடர்ந்து இதுபோன்ற தடகளப் போட்டிகளில் வெல்பவர்கள் அனைவரும் நிதி கிடைக்காமல் சிரமப்பட்டு வெல்வதாகவே பேட்டிகள் வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ஸ்பான்ஸர்கள் கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கக்கூடியது. தங்கள் நிறுவனங்களுக்கு `அம்பாசிடர்கள்' வேண்டும் என்பதற்காக ப்ரீமியர் லீக்-கள் நடத்துபவர்கள் அதில் சிறிதளவு தொகையையாவது மற்ற போட்டிகளுக்கும் அளித்தால் ஶ்ரீமந்த் ஜா போன்ற வீரர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

இன்னும் சில வருடங்கள் கழித்து ஶ்ரீமந்த் ஜா பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வார். அதன்பிறகே  அவரை இந்தச் சமூகம் கவனிக்கத் தொடங்கும். அப்போது இன்னும் பல நூறு `ஶ்ரீமந்த் ஜா'-க்கள் தங்கள் வெற்றிக்காகப் போராடிக்கொண்டிருப்பார்கள்!


டிரெண்டிங் @ விகடன்