வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (01/12/2017)

கடைசி தொடர்பு:10:24 (01/12/2017)

WWE இப்படித்தான் தொலைக்காட்சியின் `கிங்' ஆனது! - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 2

WWE

பகுதி -1 

இன்று தொலைக்காட்சி உலகின் அரசனாக அரியணையில் அமர்ந்திருக்கிறது WWE. 150 நாடுகளில் பலகோடி மக்களை பார்வையாளர்களாக கொண்டிருக்கும் WWE, ஆண்டுக்கு 700 மில்லியன் டாலர்களுக்கு மேல் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது. வாரவாரம் திங்கட்கிழமைகளில் ஒளிபரப்பாகும் `ரா', 1250 எபிஸோடுகளைத் தாண்டி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஸ்மேக்டவுனும் 950வது எபிஸோடை கடந்துவிட்டது. இந்த இடத்தை பேருந்தில் சீட் பிடிப்பதுபோல் கர்சீஃபை தூக்கிப்போட்டு பிடித்துவிடவில்லை. பல ஆண்டுகள் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அடிப்பட்டு, மிதிப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறது. பதினாறு வருட போர். போர்... ஆமாம் போர்...

"சிறந்ததொரு இடத்தை அடைய நான் செய்வதெல்லாம் ஒன்றுதான்.

என்றும் என் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை"

- டால்ஃப் ஸிக்லர்

நம் ஊரில் `கலக்கப்போவது யாரு'க்கு போட்டியாக `அசத்தப்போவது யாரு', `ஜோடி நம்பர் ஒன்'னின் போட்டியாக `மானாட மயிலாட' என கிளம்பியதைப்போல் 80'களில் WWE-க்கு போட்டியாக WCW முஷ்டியை முறுக்கி நின்றது. நம்பர் ஒன் இடத்தை அடைய இரண்டு நிகழ்ச்சிகளும் போட்டி போட, ரெஸ்ட்லிங் ரசிகர்கள் பால்பாயாசத்தோடு மல்யுத்த விருந்தை அனுபவித்தனர். இந்த காலக்கட்டம் ப்ரோ ரெஸ்ட்லிங்கின் பொற்பாயாசம்... ஸாரி, பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

மன்டே நைட் வார்

80'களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் கேபிள் தொலைக்காட்சிகள் வேகமாய் பிரபலமடைந்து கொண்டிருந்தன. குறைந்த தயாரிப்புச் செலவில் பெரிய இலாபம் ஈட்டும் ரெஸ்ட்லிங் நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. WWE அப்போது WWF என்ற பெயரில் சீரும் சிறப்பும் செம்மையுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, WWF-ன் ஆல் அமெரிக்கன் ரெஸ்ட்லிங் நிகழ்ச்சி யுஎஸ்ஏ நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது. மற்றொருபுறம் TBS ( டெட் டர்னர் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் ) சேனலில் GCW எனும் ரெஸ்ட்லிங் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதுவும் WWF முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் திணற, CGW நிகழ்ச்சியையே WWF நிறுவனத்திற்கு விற்றுவிட்டு கிளம்பிவிட்டார்கள் அதன் உரிமையாளர்கள். பாவத்த..!

`ஆப்பனன்ட்டா ஆளே இல்ல, சோலா ஆகிட்டேன்' என டப்பாங்குத்து ஆடிக்கொண்டிருந்த WWF-ன் உரிமையாளர் வின்ஸ் மெக்மேஹனைப் பிடித்து ஊமைக்குத்து குத்தியது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள். விதி வலியது! TBS சேனலில் ஒளிபரப்பான WWF நிறுவனத்தின் நிகழ்ச்சி, ரேட்டிங்கில் அதளபாதாளத்துக்கு சென்றது. கண்ணைப் பறிக்கும் கலர்களில் சொக்காய்களை போட்டுக்கொண்டு திரிவது, குறுக்க மறுக்க குடுகுடுவென ஓடுவது என குழந்தைகள் பார்க்கும் கார்டூன்களின் ரியல் வெர்ஷனைப் போல் இருந்த WWF நிகழ்ச்சியை மக்கள் வெறுத்தனர். WWF பார்ப்பதை விட, ஓடாத வெறும் டிவியை பார்ப்பதே நிறைய சுவாரஸ்யமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் கொலைவெறி கோபத்திற்கு ஆளான TBS சேனலின் உரிமையாளர் டெட் டர்னர்,`கல்லா கட்டு, இல்லை கடையை சாத்து' என மெக்மேஹனின் கழுத்தை நெறித்தார். இறுதியாக, TBS-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த WWF-க்கு சொந்தமான நிகழ்ச்சியை, `ஜிம் க்ராக்கெட் புரொமோஷன்' எனும் நிறுவனத்திற்கு விற்றுவிட்டு நடையைக் கட்டினர் மெக்மேஹன். அடுத்த மூன்று ஆண்டுகளில், அதே நிகழ்ச்சியை `ஜிம் க்ராக்கெட் புரொமோஷன்' நிறுவனத்திடமிருந்து சேனல் உரிமையாளர் டெட் டர்னரே வாங்கிவிட்டார். நிகழ்ச்சியின் பெயர் WCW என மாற்றப்பட்டது, ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது, இரு உரிமையாளர்களின் வயிறு மாறிமாறி எரிந்தது, பதினாறு வருடப்போரும் ஆரம்பமானது.

தொலைக்காட்சியில் WWE

யுஎஸ்ஏ நெட்வொர்க்கில் WWF-ன் நிகழ்ச்சியும் டிபிஎஸ் சேனலில் WCW நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி பல சலசலப்புகளும் சர்ச்சைகளும் எழுந்தன. WCW நிகழ்ச்சி காசுக்கு (PAY PER VIEW) ஒளிபரப்பாகும் அதேநேரம் WWF நிகழ்ச்சி இலவசமாக ஒளிபரப்பப்படும். இது தலைகீழாகவும் நடக்கும். `வாழு, வாழ விடு' என தல சொன்னதை மறந்து, `ஒண்ணு நீ வாழணும், இல்ல நான் வாழணும்' என சண்டையிட்டுக் கொண்டார்கள். விட்டுக்கொடுத்துப்போனால் கெட்டுப்போகக்கூடிய சூழ்நிலை வராதென தெரிந்தும், ஈகோ இருவரையும் ஆட்டிப்படைத்தது.

"வலியை மறந்துடுவிடுவேன். சண்டையில் ஒருவனை உதைக்கும்போது என் கால் வலிக்குமே,

அந்த வலியை மறந்துவிடுவேன் "

- ரேன்டி ஆர்டன்.

1993, `மன்டே நைட் ரா' நிகழ்ச்சியை தொடங்கியது WWF நிறுவனம். ஒரு ரெஸ்ட்லிங் நிகழ்ச்சியை கேபிள் ரசிகர்களுக்கு பிடித்தாற்போல் எப்படி கொடுக்கவேண்டும் என்பதை மாற்றியமைத்தது. பெரிய அரங்கம், ஸ்டுடியோ வாய்ஸ் ஓவர் என புத்தம்புது ஐடியாக்களோடு களமிறங்கிய `மன்டே நைட் ரா'வை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். மறுபுறம் க்ளைமாக்ஸில் புதைகுழியில் மாட்டிய கதாபாத்திரத்தைப் போல் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க்கொண்டிருந்தது WCW. பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டு, WCW நிறுவனம், `மன்டே நைட் ரா' நிகழ்ச்சிக்கு போட்டியாக `மன்டே நைட்ரோ' எனும் நிகழ்ச்சியை தொடங்கியது. தொடங்கியது மட்டுமில்லாமல் `ரா' ஒளிபரப்பாகும் அதேநாள், அதேநேரம் `மன்டே நைட்ரோ'வும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அது `மன்டே நைட் ரா', இது `மன்டே நைட்ரோ'. தட் `நாகபதனி, நாகப்பதனி' மொமண்ட்.

WCW நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடன்ட் எரிக் பிஷஃப், WWF-யை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். `மன்டே நைட் ரா' நிகழ்ச்சியின் பெண்கள் சாம்பியனை WCW-க்கு வரச்சொல்லி, அவர் கையாலேயே சாம்பியன்ஷிப் பெல்ட்டை குப்பைத்தொட்டிக்குள் போடவைத்தார். அப்போது `மன்டே நைட் ரா'வில் சூப்பர்ஸ்டார்களாக இருந்தவர்களின் பழைய, தோற்றுப்போன சண்டைகளை ஒளிபரப்பத் தொடங்கினார். உச்சக்கட்டமாக, WWF மேட்ச் ரிசல்ட்டுகளை முன்கூட்டிய WCW நிகழ்ச்சிகளில் வைத்து சொல்ல ஆரம்பித்தார் எரிக். எரிக்கின் இந்தச் செயல் பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

நியூ வேர்ல்டு ஆர்டர்

இப்படி போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் இருக்கும் "நிகழ்ச்சியிலேயே இருக்கும் மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது" என பலவீரர்கள் WCW-க்கு தாவினார்கள். காரணம், அதிக சம்பளம். 1996 ஆம் ஆண்டு, WWF-ன் மிகப்பிரபலமான வீரர்களான கெவின் நேஷ் மற்றும் ஸ்காட் ஹால் WCW-க்கு கிளம்பினார்கள். அதற்குமுன் கடைசியாக ஒரு மேட்ச் ஆடிவிட்டுப் போலாம் என நினைத்தது, பெரும் வினையாகிப்போனது. ஷான் மைக்கேல்ஸ், ட்ரிபிள் ஹெச், கெவின் நேஷ் மற்றும் ஸ்காட்ஹால் நால்வரும் சண்டையிட்டனர். சண்டை முடிந்ததும் மேடையில் வைத்தே ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து பிரியப்போவதை நினைத்து ஃபீலிங்காக , அதிர்ச்சியானார்கள் ரசிகர்கள். ஒருவருக்கு ஒருவர் பரம எதிரிகளைப் போல் சித்தரித்து வந்தது WWF. அவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து நட்பு பாராட்டுவதைப் பார்த்ததும்தான் மக்களுக்கு பிசிறு தட்டியது. WWF ஸ்க்ரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தனர்.

கெவின் நாஷ் மற்றும் ஸ்காட் ஹால் WCW மன்டே நைட்ரோ நிகழ்ச்சியில் காலடி எடுத்துவைத்ததும், அங்கே வசூல்மழை வெளுத்துவாங்கியது. ரேட்டிங் எகிறியது. நியூ வேர்ல்டு ஆர்டர் என புது அணியை உருவாக்கி மெர்சல் காட்டினார்கள் இருவரும். 1996-ன் இடையில் இருந்து 1998 வரை `ரேட்டிங் ரேஸில்' நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. தள்ளாடிக் கொண்டிருந்த WWF, இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க தலையை பிய்த்துக் கொண்டிருந்தது. இறுதியாக கண்டுபிடிக்கவும் செய்தது, அதுதான் `ஆட்டிட்யூட் எரா'. ஸ்டோன் கோல்டு, தி ராக், ட்ரிபிள் ஹெச், கர்ட் ஆங்கிள், ஷான் மைக்கேல்ஸ், அண்டர்டேக்கர், கேன், மெக் ஃபோலி, ரிக்கிஷி, க்றிஸ் ஜெரிக்கோ, எட்ஜ் என WWF-ன் பெரியதலைக்கட்டுகள் உருவானது அப்போதுதான். இன்றைய WWF-ன் ஆதி ஊற்று, `தி ஆட்டிட்யூட் எரா'. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். ஆர் யூ ரெடி?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்