வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (01/12/2017)

கடைசி தொடர்பு:13:07 (01/12/2017)

அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா...? எண்கள் சொல்லும் உண்மை! #Analysis #VikatanExclusive #INDvSL

வார்னேவால் முடியவில்லை... முரளிதரனால் முடியவில்லை... வாசிம் அக்ரம், மெக்ராத், டேல் ஸ்டெய்ன் எவராலும் முடியவில்லை. அதிவேகமாக 300 விக்கெட் எடுத்த பௌலர் என்ற டெனிஸ் லில்லியின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. 1981-ல் அரங்கேறிய அந்தச் சாதனையை சுழல் ஜாம்பவான்கள் என்று புகழப்பட்டவர்களாலும், வேகச் சூறாவளிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களாலும் அசைக்க முடியவில்லை. கடந்த 24-ம் தேதி நாக்பூரில் அந்த 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்துவிட்டார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

54 போட்டிகளில் 300 விக்கெட்டுகள். அந்த மைல்கல்லை எட்டிவிட்டார். டெனிஸ் லில்லியைவிட 2 போட்டிகள் குறைவாக. அஷ்வின் எப்படி சாதிக்கிறார்? அவர் விக்கெட்டுகளை அள்ளுவது எப்படி? இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர் இவர்தானா? சர்வதேச அளவிலும் இவரை மிஞ்ச ஆளில்லையா?  எல்லா கோணங்களிலிருந்தும் அலசுவோம்.

அஷ்வின்

இந்திய டெஸ்ட் அணியில் அசைக்க முடியாத பெயர்களில் ஒன்று அஷ்வின். கடந்த 6 ஆண்டுகளில் 7 தொடர்நாயகன் விருதுகள். பல போட்டிகளில் மேட்ச் வின்னர். எப்போதுமே எதிரணிக்கு சிம்ம சொப்பனம். குறுகிய காலத்தில் அதிக தொடர்நாயகன் விருது வாங்கிய ஒரே இந்திய வீரர். ஹர்பஜன் சிங் என்ற ஜாம்பவானை வெயிட்டிங் லிஸ்டுக்கு அனுப்பியவர். ஜடேஜாவுடன் இணைந்து பௌலிங்கில் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை இந்திய மண்ணில் அலறவிட்டவர்.  நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அஷ்வினுக்காக நேர்ந்து விடப்பட்ட அணிகள். 52 பந்துகளுக்கு ஒருமுறை அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்துகிறார். அதாவது ஒவ்வொரு 9 ஓவருக்கும் 1 விக்கெட்.

"சொடுக்கு பால் போட்டேனு வச்சுக்கயேன் அவன ஈஸியா அவுட்டாக்கிடலாம்" - சென்னை 28 படத்தில் ஜெய் குறிப்பிடும் அந்த சொடுக்கு பால் பற்றி கிரிக்கெட் விளையாடுபவர்களில் பலருக்கும் அர்த்தம் புரிந்திருக்காது. இன்று 'கேரம் பால்' என்று பிராண்ட் ஆகியிருப்பது அந்த 'சொடுக்கு பால்'தான். 1940-களில் சிலர் அந்த வகையான பந்துகளை வீசியுள்ளனர். பின்னர் அஜந்தா மெண்டிஸ் அடிக்கடி அதைப் பயன்படுத்த 'கேரம் பால்' எனப் பெயர் பெற்றது. அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றவர் அஷ்வின். 

 

 

தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். மெண்டிஸ் பின்னாளில் காணாமல் போக, அஷ்வின் இன்று டாப் பௌலராக உருவெடுத்துள்ளார். ஏனெனில், அஷ்வின் அதை மட்டுமே பயன்படுத்தவில்லை. வழக்கமாக பந்து வீசிக்கொண்டிருப்பார், திடீரென கேரம் பால் வந்து விழும். அந்த சர்ப்ரைஸ் டெலிவரிகள்தான் அஷ்வினின் ட்ரம்ப் கார்டு. அதற்கு நடுவில் பல்வேறு வகையான யுக்திகளையும் கையாண்டார்.  ஆஃப்-ப்ரேக், ஆர்ம் பால், கேரம் பால், தூஸ்ரா என்று ஆஃப் ஸ்பின்னின் அனைத்து வெரைட்டிகளையும் கலந்து கட்டி அடிப்பவர், துல்லியமாக லெக்-ப்ரேக் போட்டு பேட்ஸ்மேன்களை அலறவிட்டுள்ளார். கூக்ளியும் அஷ்வினுக்கு அத்துப்படி. 

பேட்ஸ்மேன்கள் அஷ்வினை எதிர்கொள்வதில் இதுதான் பிரச்னை. பந்து ஆஃப்-ஸ்பின் ஆகும் என்று தெரிந்து நின்றாலே, அது ஸ்பின் ஆகும் தன்மை முதல், பிட்ச் ஆகும் இடம் வரை அனைத்தையும் கணித்து ஆடவேண்டியிருக்கும். ஆனால், தன்னை நோக்கி வரும் பந்து எப்படிப்பட்டது என்று கொஞ்சமும் கணிக்க முடியாமல் இருக்கும்போது? எப்படிப்பட்ட பேட்ஸ்மேனும் திணறத்தானே செய்வான். அஷ்வினின் வெற்றிக்குக் காரணமே அவர் தன்வசம் கொண்டிருக்கும் இத்தனை ஆயுதங்கள்தான். 

 

 

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலும் அஷ்வினின் பெர்ஃபாமன்ஸ் வேற லெவல். இங்கு விளையாடியுள்ள 41 போட்டிகளில் 259 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். ஒவ்வொரு போட்டிக்கும் குறைந்தபட்சம் 6 விக்கெட்டுகள். அதில் 26 முறை ஐந்து விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். வார்னே, முரளிதரன், கும்ப்ளே போன்ற சுழல் ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்ட ஸ்பின்னர்கள் ஏகம்பேர். ஆனால், அவர்களுள் அஷ்வினின் உயரத்தை எட்டியவர்கள் சொற்பம்.

ரங்கனா ஹெராத், சயீத் அஜ்மல் தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. நாதன் லயான், தாஹிர் போன்றவர்களும்கூட அவ்வப்போது காணாமல் போய்விடுகிறார்கள். இப்போது ஜடேஜா...டெஸ்ட் போட்டிகளில் 1 விக்கெட் வீழ்த்த லயான் எடுத்துக்கொள்வது 61 பந்துகள். ஜடேஜாவுக்குத் தேவைப்படுவது 60. ஹெராத், தாஹிருக்கு முறையே 60, 69. ஷகிப் அல் ஹசன் ஒவ்வொரு 64 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்துகிறார். ஆக, இன்றைய வீரர்களில் அஷ்வினைப் போல் விக்கெட் வீழ்த்தும் ஸ்பின்னர் யாரும் இல்லை என்றே சொல்லலாம். 

அஷ்வின்

'இவர்தான் இந்தியாவின் தலைசிறந்த பௌலர்' என்ற புகழாரம் ஒருபக்கம், 'அவர் உள்ளூர்ல மட்டும்தான் ஜொலிக்கிறார்' என்ற தூற்றல் மறுபக்கம். அஷ்வினின்  பெர்ஃபாமன்ஸை எப்படித்தான் ஒப்பீடு செய்வது? ஒரு பௌலரை சிறந்த பௌலர் என்று வரையறுக்கும்போது, உலகின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் அவரது செயல்பாட்டை ஒப்பிடுவது அவசியம். 'தலைசிறந்த பௌலர்' என்று அஷ்வினை அடையாளப்படுத்தும்போது முரளி, வார்னே, கும்ப்ளே போன்ற பௌலர்களையும் ஒப்பீடு செய்ய நேர்கிறது. அதையும் செய்துதான் பார்ப்போமே...

ஸ்பின் என்றாலே இந்தியத் துணைக்கண்டம்தான். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என நாலு நாட்டு ஆடுகளங்களுக்கும் சுழல மட்டுமே தெரியும். சுட்டுப்போட்டாலும் பௌன்ஸ், ஸ்விங் எடுபடாது. இப்படியான ஆடுகளங்களில் ஜொலித்ததனால்தான் வாசிம் அக்ரம், வக்கார் யூனஸ் போன்றோரை இன்றும் லெஜண்ட்ஸ் என்கின்றனர். ஸ்பின்னுக்கு மட்டுமே உகந்த ஆடுகளங்களில் ஸ்பின்னர்கள் ஜொலிப்பது ஆச்சர்யம் இல்லைதானே!

அஷ்வின்

 

இன்றும் ஷேன் வார்னே என்ற பெயரைக் கேட்டதும் பல பேட்ஸ்மேன்களுக்கு உள்ளூற உதறும். அவரை உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் எனப் போற்றக்  காரணம், அனைத்து ஆடுகளங்களிலும் அவர் தன்னை நிரூபித்ததார். அவர் வீழ்த்திய 708 விக்கெட்டுகளில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியே எடுக்கப்பட்டவை. வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆஸ்திரேலிய மைதானங்களில் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். ஒவ்வொரு ஆஷஸ் தொடரிலும் 34,31,40 என விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர்.  அஷ்வின்...? துணைக் கண்டத்துக்கு வெளியே 14 போட்டிகளில் 41 விக்கெட்டுகள். இந்தியா அடுத்து செல்லும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு அஷ்வின் அனுபவம் இல்லாத வீரராகத்தான் போகப்போகிறார். ஆச்சர்யம் வேண்டாம். ஏனெனில், அங்கு அவர் ஆடியிருப்பது வெறும் ஒரு போட்டியில் மட்டுமே.

பலரும் சொல்வதுபோல், வெளிநாட்டு ஆடுகளங்களில் அஷ்வினின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அந்த ஆடுகளங்கள் ஸ்பின்னுக்கு உதவாது என்ற பொதுப்படையான பேச்சு உண்டு. அந்த அடிப்படையில் அஷ்வினைக் குறைகூறாமல் இருந்துவிடவும் முடியாது. ஏனெனில், அவர் ஆடிய வெளிநாட்டுத் தொடர்களில் அவரைவிட மற்ற ஸ்பின்னர்கள் நன்றாகவே செயல்பட்டுள்ளனர். அதற்கான புள்ளிவிவரம்...

aswin vs lyon

ஆஸ்திரேலிய மண்ணில் அஷ்வின் 6 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2011-12 தொடரில் 3 போட்டிகளிலும், 2014-15 தொடரில் 3 போட்டிகளும் ஆடிய அஷ்வினின் செயல்பாடு, ஆஸி ஸ்பின்னர் லயானை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது. 2011-12 தொடரில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வினுக்கு, ஒரு விக்கெட் வீழ்த்தத் தேவைப்பட்ட ஓவர்கள் 19. அவர் ஆடிய அந்த 6 போட்டிகளில், அவரை விடக் குறைந்த ஓவர்கள் பந்துவீசி, 7 விக்கெட்டுகள் வீழ்த்திய லயான், கிட்டத்தட்ட ஒவ்வொரு 13 ஓவர்களிலும் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 2014-15 தொடரில் அஷ்வின், லயானை ஓவர்டேக் செய்திருந்தாலும், அந்த 6 போட்டிகளின் மொத்த செயல்பாட்டில் அஷ்வின் பின்தங்குகிறார்.

2014 இங்கிலாந்து தொடர் - 2 போட்டிகளில் மட்டுமே ஆடிய அஷ்வின் வீழ்த்தியது வெறும் 3 விக்கெட்டுகள். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தவே இல்லை. அந்த 3 விக்கெட் வீழ்த்த அவருக்குத் தேவைப்பட்டது 71 பந்துகள். அந்த இரண்டு போட்டிகளிலும் 14 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய மொயீன் அலி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அந்த 2 போட்டிகளிலும் ஜடேஜா பந்துவீசியது 13.3 ஓவர்கள்தான். 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார். ஆக, இங்கிலாந்திலும் அஷ்வின் அவுட்! தென்னாப்பிரிக்கா - ஆடியது ஒரே போட்டி, 42 ஓவர்கள்...விக்கெட் வீழ்த்தவே இல்லை. இம்ரான் தாஹிர்  23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 29 ஓவர்கள் வீசிய பார்ட் டைம் பௌலர் டுமினி கூட 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்காவிலும் அஷ்வின் பாஸ் ஆகவில்லை. 

ashwin

இதுதான் அஷ்வினின் வெளிநாட்டு செயல்பாடு. இந்திய ஸ்பின்னர்கள் அந்நிய மண்ணில் திணறுவது சகஜம் என்று தப்பிக்க முடியாது. இந்த இடத்தில்தான் கும்ப்ளே கவனிக்கவைக்கிறார். தென்னாப்பிரிக்க மண்ணில், 11 போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் கும்ப்ளே, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா 10 போட்டிகளில் வீழ்த்திய விக்கெட்டுகள் முறையே 33, 49. "அஷ்வின் கம்மியான மேட்ச் தான் ஆடியிருக்காரு..." - இந்த சாக்குபோக்கும் செல்லாது. 

இங்கிலாந்து மண்ணில் முதல் 2 போட்டிகளில் அஷ்வின் வீழ்த்தியது 3 விக்கெட்டுகள், கும்ப்ளே 4... ஆஸ்திரேலியாவில் ஆடிய முதல் 6 போட்டிகளில் அவர் வீழ்த்தியது 29, தென்னாப்பிரிக்காவில் ஆடிய முதல் போட்டியில் கும்ப்ளே வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 8! ஆக, இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர் அஷ்வினா என்றால்...நிச்சயம் இல்லை. குறைவான போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பௌலர்கள் பட்டியலில் கும்ப்ளேவைப் பின்னுக்குத்தள்ளினாலும், இந்த 3 மைதானங்களிலும் சாதிக்கும் வரை இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர் நிச்சயம் அஷ்வின் இல்லை.

ashwin vs kumble

நாக்பூர் டெஸ்டில் ஆடிய இலங்கை அணி வீரர்கள் யார் என்பது நிச்சயம் நமக்கு நினைவிருக்காது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் யார் ஆடுகிறார்கள் என்று கரீபிய மக்களுக்கே தெரியாது. இந்த இரு அணிகளுடன்தான் அஷ்வின் 95 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். எல்லாம் அல்லு சில்லுகள். இன்று உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாகக் கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் இருவரையும் 26 இன்னிங்ஸ்களில் 4 முறை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதற்காக அவர் வீழ்த்திய விக்கெட்டுகளெல்லாம் சுமாரான பேட்ஸ்மேன்கள் என்று சொல்லவில்லை. தரமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக, வெளிநாட்டு ஆடுகளங்களில் அஷ்வின் இன்னும் நிரூபிக்கவேண்டும்.

ashwin

அஷ்வின் அப்படி நிரூபிக்கும்வரை ஜாம்பவான்களோடு ஒப்பீடு செய்யாமல் இருப்பதுதான் சரி. அவர் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக வரலாம். ஆனால், தனி ஒருவனாக அறியப்பட வேண்டுமெனில், ஆசியாவுக்கு வெளியே முத்திரை பதிக்க வேண்டும். இங்கிலாந்தின் ஸ்விங், தென்னாப்பிரிக்காவின் வேகம், ஆஸ்திரேலியாவின் பெளன்ஸர் பிட்ச்களில் அஷ்வினின் சுழல் எடுபட வேண்டும். ரூட், ஸ்மித், வில்லியம்சன் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும். தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்திலேயே இதை ஆரம்பிக்கட்டும்!