வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (01/12/2017)

கடைசி தொடர்பு:17:03 (01/12/2017)

ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்... யார்றா இந்த வேக்னர்...! கதி கலங்கும் வெஸ்ட் இண்டீஸ் #NZvsWI

சுனில் அம்ப்ரிஸ் - பல கனவுகளோடு வெல்லிங்டன் மைதானத்தில் களம் புகுந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி. ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால், இது டெஸ்ட் போட்டி... வெள்ளை உடையணிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுவதெல்லாம் கரீபிய இளைஞர்களுக்குத் தவம். ரிச்சர்ட்ஸ், லாரா வரிசையில் தன் பெயரும் வரவேண்டும், அதற்கு மிகச்சிறந்த தொடக்கமாக இந்தப் போட்டி அமையவேண்டும் என்ற ஆசையோடு களமிறங்கினார். முதல் பந்து... கோல்டன் டக்! கனவு கலைந்துவிட்டது. அவரது கனவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கையையும் தனி ஆளாக தன் பௌன்சர்களால் தகர்த்துக்கொண்டிருந்தார் நீல் வேக்னர் - நியூசிலாந்தின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னர்!

வேக்னர்

80 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். பிரஷரோடுதான் களமிறங்கினார் அம்ப்ரிஸ். இலங்கை ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் கடந்த அக்டோபர் மாதம் ஆடிய டெஸ்ட் தொடரில் சதம் அடிக்க, தேசிய அணிக்குள் நுழைந்தார். அதனால் நம்பிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆடுகளம் ரொம்பவுமே பௌன்ஸ் ஆகிக்கொண்டிருந்ததால் மிகவும் எச்சரிக்கையாக க்ரீஸில் இறங்கியே நின்றிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் பந்தைச் சந்திக்க அவர் தயார். வேக்னர்...அதுவரை மிரட்டிக்கொண்டிருந்த அதே ஷார்ட் பால். 'மீடியம் பேஸ்' தான். மிகவும் கவனமாக அதை லெக் சைடு அடிக்க முற்பட்டார் அம்ப்ரிஸ். ஆனால், பந்து மார்பளவு எகிறியது. பேக் ஃபூட் ஆடியவரால் பந்தின் வேகத்துக்கும், பௌன்ஸுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. ஸ்டம்பின் மீது காலூன்றினார். முதல் டெஸ்ட் போட்டியின், முதல் பந்தில் ஹிட் விக்கெட். யாரும் எதிர்பாராத முடிவு. ஆனால், அவரைச் சொல்லி குத்தமில்லை. வீசப்பட்ட பந்து அப்படி! அதைவிட, அந்த பௌலர்...மிரட்டல்!

வேக்னருக்கு அது நான்காவது விக்கெட். ஆரம்பம் முதலே, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரளவைத்துக்கொண்டிருந்தார். 21 ஓவர்கள் நன்றாகத் தாக்குப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றி, முற்றுப்புள்ளியும் வைத்தார். 'Left arm fast medium' பௌலர். சராசரியாக 130-135 கிலோமீட்டர் வேகத்தில் வீசுபவர். ரன் அப்களும் அவ்வளவாக வேகமில்லை. ஆனாலும், ஒவ்வொரு பந்தையும் பௌன்ஸர் ஆக்கிக்கொண்டிருந்தார். ஓவருக்குக் குறைந்தபட்சம் 3-4 ஷார்ட் பால்கள். இவர் பந்துவீசத் தொடங்கியிதிலிருந்தே திணறத் தொடங்கினார்கள் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள்.

wagner

அவரின் அசுரத் தாக்குதலுக்கு முதல் பலி கிரெய்க் ப்ராத்வெயிட். பௌன்ஸர். கேப் பார்த்தெல்லாம் தட்டிவிடமுடியாது. முகத்தைப் பதம்பார்த்து வருகிறது. வேறு வழியில்லாமல் ஏதோ ஷாட் ஆட, ஷார்ட் லெக் திசையில் நிக்கோல்ஸிடம் பிடிபட்டு வெளியேறினார். 2 ஓவர்கள் கழித்து...அதே பந்து...பௌன்ஸ், வேகம் எல்லாம் அப்படியே. ஹேட்மெயர் - வீழ்ந்துவிட்டார். இந்த முறை செகண்ட் ஸ்லிப்பில். அடுத்தடுத்த ஷார்ட் பால்கள்தான் ஹோப், அம்ப்ரிஸ் ஆகியோரையும் வெளியேற்றியது. அந்த ஷார்ட் பால்களின் அணிவகுப்பில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் பெவிலியனுக்கு அணிவகுக்கத் தொடங்கினர். 

14.4 ஓவர்களில், 39 ரன்கள் மட்டும் விட்டு 7 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பெஸ்ட் இது. வெறும் ஷார்ட் பால்கள் மட்டுமே அவருக்கு உதவிடவில்லை. பேட்ஸ்மேன்கள் பௌன்சர்களை எதிர்பார்த்த சமயம், அவரது யாக்கர்கள் அதிரவைத்தன. பௌன்ஸர்களும்கூட ஏதோவொரு லெந்தில் வீசப்பட்டவையல்ல. துல்லியமாக லெக் ஸ்டம்ப் லைனில் பிட்சாகி ஆஃப் ஸ்டம்ப் நோக்கிப் பயணித்தவை. அதனால், பேட்ஸ்மேன்கள் பந்தைக் கணிக்க மிகவும் சிரமப்பட்டனர். ஃபீல்டிங் பொசிஷன் வேற லெவலில் இருந்தது. வேகப்பந்து வீச்சாளருக்கு லெக் ஸ்லிப், கீப்பருக்கு மிக அருகிலேயே ஃபைன் லெக் என எல்லாமே பெர்ஃபெக்ட். அவற்றுக்குப் பலனும் பக்காவாகக் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்களுக்கு ஆல் அவுட்.

 

 

 

இந்த ஒரு பெர்ஃபாமென்ஸுக்காக மட்டுமே வேக்னரைக் கொண்டாடிவிட முடியாது. கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டையைக் கிளப்பி வருகிறார். அதற்காக நிச்சயம் அவரைப் பாராட்டியே ஆகவேண்டும். 2016-க்குப் பிறகு 15 போட்டிகளில் 70 விக்கெட்டுகள். அதில், நான்கு '5 wicket hauls' அடக்கம். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் என அனைத்து அணிகளுடனும் முத்திரை பதித்தார். 

wagner

ட்ரென்ட் போல்ட் மீது எதிரணி பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்த, ரியல் வில்லனாக மாறினார் வேக்னர். இதுவரை இவர் விளையாடியுள்ள 33 டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியில்கூட விக்கெட் வீழ்த்தாமல் இருந்ததில்லை. அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் வேக்னர். ரிவர்ஸ் ஸ்விங்கில் வல்லவர், சுத்தமாக வேகத்துக்கு ஒத்துழைக்காத ஆடுகளங்களிலும் பௌன்ஸ் வீசக்கூடியவர்...மொத்தத்தில் ஒரு 'கம்ப்ளீட் பௌலராக' தன்னை அறிவித்துள்ளார் நீல் வேக்னர்!


டிரெண்டிங் @ விகடன்