வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:19:00 (01/12/2017)

`18 மாதங்களாக எங்களைத் துரத்தும் பிரச்னை...' - மோசமான ஆட்டம் குறித்து தினேஷ் சண்டிமல்

இந்தியாவுக்கு எதிராக இலங்கை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களின் வசைக்கு உள்ளாகியிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் போதாஸ், `இலங்கை அணி வீரர்கள், அவர்கள் ஆட்டம் குறித்து வெட்கப்பட வேண்டும்' என்று பொங்கினார். இப்படிப்பட்ட சூழலில்தான் நாளை மூன்றாவது டெஸ்ட் தொடங்குகிறது.

சந்திமால்

இது குறித்து பேசிய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல், `நாக்பூரில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. பெரிய மன வலியை ஏற்படுத்தியது. தோற்பது வாழ்க்கையில் கூடத்தான் நடக்கிறது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து போட்டிப்போட வேண்டும். எங்கள் அணிக்கு இப்போது கஷ்டமான நாள்கள்தான். ஆனால், இந்த நிலைமையிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றவர், `பேட்டிங்தான் எங்கள் அணியின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. எங்களின் எல்லா கூட்டங்களிலும் இது குறித்து பேசியிருக்கிறோம். ஆனால், அதில் பேசுவதை நாங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. இந்தப் பிரச்னை கடந்த 18 மாதங்களாக எங்கள் அணியைத் துரத்துகிறது. களமிறங்கும் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் நிறைய ரன் அடிக்க வேண்டும்' என்றார் தீர்க்கமாக.