வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (01/12/2017)

கடைசி தொடர்பு:18:57 (01/12/2017)

ஆஷஸ் வரலாற்றின் முதல் 'டே-நைட்' மேட்ச்.... சரித்திரம் படைக்கப் போவது யார்? #Ashes

கிரிக்கெட்டுக்குக் கிட்டத்தட்ட 140 வயசு. 1877-ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அங்கீகரிக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. மெல்போர்னில் நடந்த இந்தப் போட்டியில் 45  ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.  டெஸ்ட் கிரிக்கெட்டின் நூறாவது வருடத்தைக் கொண்டாடும் பொருட்டு நடந்த ஆட்டத்திலும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது ஆச்சர்யம். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே கிரிக்கெட் என்றிருந்த காலத்தில், அடிக்கடி போட்டி மழையால்  பாதிக்கப்படுவதைக் கண்டு, அதே மெல்போர்ன் மைதானத்தில் ஓவருக்கு 8 பந்துகள் வீதம் 40 ஓவர் போட்டி நடைபெற்றது. அதிலும் ஆஸ்திரேலியாவே வெற்றிவாகை சூடியது. 1971-ல் செயற்கை ஒளி வெள்ளத்தில், கலர் ஆடைகள், வெள்ளை நிறத்தில் பந்து, கருப்பு நிறத்தில் சைட் ஸ்க்ரீன் என யாரும் எதிர்பாராத விதத்தில், 'வேர்ல்டு கிரிக்கெட் சீரிஸ்' ஆரம்பிக்க, புதிய பார்வையாளர்களை கிரிக்கெட் தன் பக்கம் ஈர்க்க ஆரம்பித்தது.

Ashes

இதுவே, கொஞ்சம் கொஞ்சமாக மருவி, 1975-ல் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கவும் வழிவகுத்தது. இப்படிப் பல மாறுதல்களுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட விளையாட்டு வேறு எதுவுமில்லை. இதேபோல, பார்வையாளர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, ‘டெஸ்ட் போட்டிகளை ஏன் பகலிரவு ஆட்டங்களாக ஆடக் கூடாது?’ என 2007-ல் கேள்வி எழுந்தபோது, "என்ன பைத்தியக்காரத்தனம்... யாராவது டெஸ்ட் போட்டிகளைப் பகலிரவாக ஆடுவார்களா? நடக்காது, முடியாது, வேண்டாம்" என்று நெகட்டிவாகப் பேசினார்கள். மெரில்போர்ன் கிரிக்கெட் கமிட்டி அமைத்த குழுவில், டிராவிட் பங்குபெற்று,  "பிங்க் நிறப் பந்துகள் கொண்டு, பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்தால், டெஸ்ட் கிரிக்கெட் மிளிரும், கிரிக்கெட்டுக்கு வேறொரு முகம் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். இதோ, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் பழைமையான தொடரான 'ஆஷஸ்' தொடரிலும், பகலிரவு போட்டி வந்துவிட்டது.

பரீட்சார்த்த முறையில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் சில வருடங்களாகத் தங்களுடைய உள்ளூர் போட்டிகளில், பகலிரவு ஆட்டங்களை நடத்தி டபுள் தம்பஸ் அப் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 27, 2015-ல் முதல் பகலிரவு சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுவரை ஆஸ்திரேலியா 3, பாகிஸ்தான் 2, இங்கிலாந்து 1 முறை பகலிரவுப் போட்டிகளை நடத்தியுள்ளன. 6 போட்டிகளுக்கும் நல்ல வரவேற்பு. டிரா ஆகாமல் ரிசல்ட் கிடைத்ததும் மற்ற அணிகளுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுத்தது.

Ashes

அடிலெய்டு மைதானத்தில், ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி. முதன்முறையாக இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் பகலிரவு போட்டியில் கலந்துகொள்கிறது. இதில், இங்கிலாந்துக்கே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம், எப்படி? பொதுவாக, ஒவ்வொரு நாட்டிலும், சொந்த அணிக்கு எதிராகச் சில ஆடுகளங்கள் அமைந்துவிடும். இந்தியாவுக்கு மொஹாலி (ஸ்பீட் & பௌன்ஸ் அதிகம்), தென்னாப்பரிக்காவுக்கு செஞ்சுரியன் (கிட்டத்தட்ட ஹைவேஸ் போன்ற ஆடுகளம், நன்றாக அடித்து ஆடலாம்), இங்கிலாந்துக்கு கார்டிஃப். இப்படி... ஆஸ்திரேலியாவுக்கு அடிலெய்ட். ஆஸ்திரேலியாவில் அந்நிய அணிகளுக்கு ஒத்துழைக்கும் மைதானங்கள் என்று பார்த்தால் அது சிட்னி மற்றும் அடிலெய்டு மைதானங்கள் மட்டுமே. ஏனென்றால், ஸ்பின் எடுபடும், பந்து அதிகம் எகிறி அடிக்காது. களத்தில் நிறைய நேரம் செலவழித்தால் கட்டாயமாகப் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும். மேற்கொண்டு, பகலிரவுப் போட்டியாக நடைபெறுவதால், செயற்கை ஒளி வெள்ளத்தில் ஆண்டர்சன் போன்றவர்கள் பந்தை அநாயசமாக ஸ்விங் செய்வார்கள். கிரிஸ் வோக்ஸ், ஜேக் பால் போன்றவர்கள் கொஞ்சம் ஆண்டர்சனுக்கு உறுதுணையாக இருந்துவிட்டால், விக்கெட்டுகளைக் கொத்தாக வீழ்த்தலாம்.

Ashes
 

ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் கொஞ்சம் நன்றாகவே விளையாடியது. ஸ்டோன்மென், ரூட், வின்ஸ், மாலன், அலி, பேர்ஸ்டோவ் என எல்லோரும் நல்ல அடித்தளம் அமைத்துவிட்டு வெளியேறிவிட்டார்கள். இம்முறை அந்தத் தவறை திருத்திக்கொண்டுவிட்டால் நிச்சயம் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா ஸ்மித்தை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி வெற்றிபெற்றாலும், ஆடிய ஆட்டம் அவ்வளவு நேர்த்தியாக இருக்கவில்லை. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது, ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கக்கூடிய விஷயம். குக்கை ஃபார்முக்கு வரவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தால், இந்தத் தொடரே அவரது வாழ்வின் கடைசித் தொடராக அமையலாம்!

Ashes
 

ஆஸ்திரேலியாவுக்கு குக் எப்படியோ, அதேபோல, இங்கிலாந்துக்கு டிம் பெயின். ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர்கள் வரிசையில் வேட் மற்றும் பெயின், கில்கிறிஸ்ட், ஹாடின் போன்றவர்களின் ஆட்டத்தில் கால்பங்கைக் கூட வெளிப்படுத்துவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு, மிடில் ஆர்டரில் களமிறங்கும் பெயினை சோதித்து ஒட்டுமொத்த லோயர் மிடில் ஆர்டரையும் பதம் பார்த்து விடலாம். இதுவரை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் ஒன்று கூட ஐந்தாவது நாளை எட்டியதில்லை. ஏனென்றால், இரவில் பந்து அப்படி ஸ்விங் ஆகும். மேலும், அடிலெய்டு மைதானத்தில் மழையும் வெயிலும் மாறி மாறி வருவது ஆடுகளத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவே செய்யும். நாளை மழையும், அதன் பின்பு வெயிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரைச் சமன்படுத்தி தொடருக்கு உயிர் கொடுக்குமா இல்லை, ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 2-0 என முன்னேறுமா என்று 4-5 செஷன்களில் தெரிந்துவிடக்கூடும்!