வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:36 (02/12/2017)

`எனக்கு எப்படிப் பார்த்தாலும் வெற்றிதான்..!' - ஸ்மித் பேட்டியால் சூடு பிடிக்கும் ஆஷஸ் களம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. நாளை ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட்டில் பகலிரவு ஆட்டமாக தொடங்க உள்ளது. இந்நிலையில், இரு அணியினருக்கும் இடையில் வார்த்தை யுத்தம் களத்துக்கு வெளியேயும் நீண்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், முதல் போட்டியில் 326 பந்துகள் விளையாடி 141 ரன்கள் எடுத்தார். இதை இங்கிலாந்து அணி தரப்பு, `ஸ்மித்தின் ரன் குவிக்கும் இடங்களைச் சுருக்கிவிட்டோம். இதை தொடர்வோம்' என்று கூறியது. 

ஸ்மித்

இதற்குப் பதில் அளித்துள்ள ஸ்மித், `அவர்கள் அப்படிச் செய்தால் அது எனக்கு மகிழ்ச்சியே. எனக்கு பேட்டிங் ரொம்பப் பிடிக்கும். எனவே, களத்தில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் சந்தோஷமாகவே இருப்பேன். பெவிலியனில் இருக்க நான் விரும்பவே மாட்டேன். களத்திலிருந்து எனது பேட்டிங் பணியைச் செய்வதுதான் என் விருப்பத்துக்குரியது. 300 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அப்படி விளையாடுவதன் மூலம் பௌலர்களும் சோர்ந்து போவார்கள். எனக்கு எப்படிப் பார்த்தாலும் வெற்றிதான். அவர்கள் எதை என்மீது எறிந்தாலும் அதற்கு ஏற்றார் போல் என்னை மாற்றிக் கொள்வேன். எனக்கு இந்த டெஸ்ட்டிலும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்' என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் ஸ்மித்.